நலமாய் வாழ்வீர் நாட்டிற்கும் உழைப்பீர்
![](https://eluthu.com/images/loading.gif)
இளைய சமுதாயமே ...
ஒரு நொடியாவது சிந்தித்துப் பார்
வாழ்வின் நிலையை பகுத்துப் பார் !
உந்தன் இலக்கை நிர்ணயித்துப் பார்
தூரத்தை மறந்து அடைந்திடப் பார் !
**********
வருங்கால வளர்பிறைகளே ...
கற்கால வாழ்வினை படித்துப் பார்
தற்கால நிலையை எண்ணிப் பார் !
சிகரத்தை தொட முயற்சித்துப் பார்
சிந்தனை மாறாமல் பயணித்துப் பார் !
**********
விருட்சத்தின் விழுதுகளே ...
முன்னோரை நினைத்து முன்னேறப் பார்
எந்நாளும் ஈரநெஞ்சுடன் வாழ்ந்துப் பார் !
முதியோரை வணங்கி வாழ்ந்திடப் பார்
விதியெனக் கூறாமல் மதிகொண்டு பார் !
**********
விளையவுள்ள வித்துக்களே ...
இனமொழி பற்றுடனே வாழ்ந்துப் பார்
இல்லாமை போக்கிட வழியினைப் பார் !
கல்லாதவர் இல்லாத நிலைவரப் பார்
பொல்லாமை போக்கிட வழியும் பார் !
**********
மனித பிறப்பின் மகுடங்களே ...
சாதிமத உணர்வினை துறந்துப் பார்
சமத்துவ சமுதாயம் உருவாக்கப் பார் !
குற்றமே புரியாத நெஞ்சங்களைப் பார்
வெற்றி பாதைக்கு வழிதேடிப் பார் !
**********
ஏற்றமிகு எதிர்காலம் உங்கள் கரங்களில்
இன்பமாய் இருப்பதும் உங்கள் வழிமுறையில்
துணிவே துணையாய் உங்கள் வாழ்வினில்
நலமாய் வாழ்வீர் நாட்டிற்கும் உழைப்பீர் !
பழனி குமார்