தேன்மொழி - 03 - இராஜ்குமார்
தேன்மொழி - 03 - இராஜ்குமார்
============================
கைத் தட்டிய ஓசையோடு குழந்தை விழுந்தது கிணற்றுக்குள்
...சற்று ஆழமான கிணறு .......
தனக்கு எதிர் திடலில் விளையாடிய குழந்தை கிணற்றில் விழுந்தவுடன்
மேல தெறித்த நீர் துளி மீண்டும் நீரின் மேற்பரப்பை அடையும் மணித்துளி இடைவெளியில்
சட்டென கிணற்றில் குதித்தாள் கலை ...
குதித்த வேகத்தில் ...வேகமாய் நீரை வாளாய் கிழித்து ஆழம் நோக்கி நீந்தினாள் ...
பார்வையை விரிய வைத்தாள்...விரிந்த பார்வையின் முடிவில் ...குழந்தையின் உள்ளங்கை வெண்ணிறமாய் தெரிந்தது ..மின்னல் வேகத்தில் குழந்தையின் கை பிடித்து ..அணைத்து...அப்படியே எடுத்து மேலே வந்தாள்....குழந்தையை பேச வைக்க முயன்றாள் ...அவளின் முயற்சிக்கு குழந்தை தேகம் ஒத்துழைத்தது...அசைந்த உடல் ...கலையின் உள்ளங்கை வெப்பத்தை உள்வாங்கியது ..
சில மணி நேரம் கழித்து ...தோட்டத்து நிழலில் ....
குழந்தை ...கலையின் சேலையை பிடித்துக் கொண்டே ...
"......ம்ம்மா ....கெணத்துக்குள்ள ஒரே இருட்டு ....கண்ணே தெரியல ..."
"சரிடி செல்லம் ...அதான் அம்மா வந்துட்டேன்ல ..."
"இல்ல ..மா .. கெணத்துக்குள்ள ஏன் நிலா வரல...நெறைய தண்ணி மட்டும் தான் இருக்குது ...நான் குடிக்கவே இல்ல ...அதுவே வவுத்துக்குல போச்சிமா ...."
" தண்ணி அப்படிதான்டி செல்லம் ..."
" தண்ணில குதிச்ச அவங்க எல்லாம் மேல தான இருந்தாங்க ....நா மட்டும் எப்படிமா உள்ளுக்குள்ள போனேன் ...குண்டா இருந்தா உள்ளுக்குள்ள போய்டுவோமா ... "
"அச்சச்சோ ...அப்படி இல்ல செல்லம் ...தண்ணி மேல இருக்கணும்னா ...கை கால ஆட்டி தமட்டம் அடிக்கணும் ..அப்பத்தான் மேல இருப்போம் ....ம் ம்ம்ம் ..."
"நீ ஏம்மா ...எனக்கு தமட்டம் சொல்லி தரல ...சொல்லிந்தா நா தண்ணிக்குள்ள போகாம இருந்திருப்பேன்ல .."
" சரி ..சரி ,,அம்மா சொல்லி தரேன் ,,,நீ இப்போ இந்த பால குடி "
"இல்ல ..நீ ..இப்போ சொல்லி தா ....நா அப்புறமா குடிக்குறேன் ..."
"ம்ம் ..நீ குடிச்சா தாண்டி நா சொல்லி தருவேன் ....சொர புரட வாங்கணும் ....வாங்கிட்டு நாளைக்கு நா சொல்லி தரேன் ..இப்போ குடி ...."
" குடுமா ....பால குடிச்சா போச்சு ....வவுறு பசிக்குது கொஞ்சம் .....ஹி ..ஹி ..ஹி ..."
இப்படி ....
கலையும் குழந்தையும் அன்போடு ஆசையோடு வாழ்ந்தனர் ...வருடங்கள் மெதுவாய் நகர்ந்தது ..
கலையின் அண்ணன் , அக்கா ...என தாய் வழி உறவுகள் கொஞ்சம் கலைக்கு உதவி செய்தனர் . ...தோட்டத்தில் குழந்தையுடன் தனியே வாழ்ந்த கலைக்கு.. இவர்களின் அன்பு கொஞ்சம் மகிழ்ச்சியை தந்தது ..
எது எப்படி நடந்தும் முத்துவின் முதல் மனைவி வடிவு , வடிவின் உறவுகள் கலையை நிரந்தர எதிரியாய் பார்த்தனர் ,,,அப்படியே நடந்தனர் ...நிலத்தில் நடக்கும் விவசாயம் முதல் ..வழியில் சந்திக்கும் பேச்சு வரை அனைத்திலும் கலை தலை குனிந்தே நின்றாள்..அனைத்தும் சாடல் ..எல்லா பார்வையும் இவளை தவறாய் பார்த்தது ...கலை என்றால் "தவறு " என்ற முடிவில் வடிவும் வடிவின் உறவும் இருந்தது ..வடிவின் குழந்தைகளையும் இதில் நிறுத்தினாள் வடிவு ...
இவற்றை எல்லாம் விடுத்து முத்து தனியே ஆலையில் வேலை செய்து வந்தார் ..செய்யும் வேலையில் மிகவும் நேர்த்தியானவர் ..அதிகம் பேசுவார் ..பேசுவதை மிகையாய் சொல்வார் ...எல்லாம் தனக்கு தெரியும் என்றே சொல்வார் ..விழிகளும் அப்படிதான் தெரியும் ..பேசுவது பொய் என்று அவருக்கு மட்டுமே தெரியும் ...நெருங்கி பழகினாலும் இவரின் பொய்களை பிரித்து அறிவது மிக கடினம் ....எமனிடம் கூட " நான் இறந்தவன் " என சொல்லி நம்ம வைக்கும் வார்த்தை இவரின் வசம் ..
தனது இரண்டு வீட்டிற்கும் அவ்வப்போது வந்து சென்றார் முத்து ...இரண்டு மனைவிகள் என்பதால் மனதளவில் அதிகம் நொந்தார் ...இரு மனைவியும் இணைந்து வாழ்வது சாத்தியமின்றி போனது ..எல்லாம் தனி தனியே என்றானது ..பேசுவதும் குறைந்து போனது ...கலை வடிவு இருவரும் பேசாமலே இருந்தனர் ..
ஒரு நாள் ..காலை நேரம் ...
தனது குடிசைக்கு அருகிலுள்ள நிலத்தில் ...கலை ஆரியம் விதைத்து இருந்தாள்....அந்த ஆரியத்தை கலை அறுவடை செய்ய நினைத்த தினத்தில் ...வடிவு அந்த ஆரியத்தை அறுவடை செய்து கொண்டு இருந்தாள் .. இதை பார்த்த கலை மெதுவாய் சென்று .வரப்பில் நின்று ...வடிவிடம் ....
"ஏங்க ...திடீர்னு இப்படி செய்றீங்க "
" அத நீ ஏண்டி கேக்குற ...உனக்கு என்ன வலிக்குது ..நா அறுத்தா "
"நா தானுங்க விதச்சேன் ...நா அறுக்கலாமுனு இருந்தேன் "
"இந்தா பாருடி ..நா விதைச்சேன் ..நா அறுப்பேன்னு ...நிலத்துல கால வச்ச ...வைக்குற கால வெட்டி போட்டுருவேன் ..ஜாக்கிரத .."
"நா ஏன் கேக்க கூடாது "
"என்னடி வாய் நீளுது ...உன்ன விட்டதே தப்பு ...இப்படியே போய்டு ...கொஞ்ச நேரம் நின்ன ...உன் பொழப்பு சிரிப்பா சிரிக்கும் "
வரப்பிலிருந்த பாதத்தை அப்படியே திசை மாற்றி குடிசை நோக்கி நடந்தாள் கலை ..அவளின் பாதம் பட்ட இடமும் அவளுக்கு ஆறுதல் சொல்ல துடித்திருக்கும் ..ஒரு அருகம் புல்லின் நுனியில் நின்ற பனித்துளி ஒன்று அவளின் கால் நகத்தோடு நடந்து குடிசை வரை சென்றது ....வாசலில் அசையாமல் நின்றது குழந்தை ..
குழந்தையை அணைத்து எடுத்து உள்ளே சென்றாள் ..அவளின் கண்ணீர் விழியில் பிறந்து கன்னம் நனைத்தது ...குழந்தை அந்த கண்ணீரை விரலால் விலக்கி விட்டது ..
வயலில் இன்னும் வடிவின் குரல் ஒலித்து கொண்டே இருந்தது ..
இப்படியே சில மாதம் கடந்தது ...
வெள்ளை சட்டையுடன் ஒரு உருவம் சிரித்து கொண்டே ..குடிசை வாசலில் நின்று ...குழந்தையை பார்த்து ..
"ஏ ..இங்க வா "
"ம்ம் ..வந்துட்டேன் தாத்தா ..சொல்லு "
"என்ன சொல்லு ...பல்லுன்னு ..கையை கொடு இப்புடி "
"ஏன் தாத்த உன்கிட்ட கை இல்லையா ...என்கிட்டே கேக்குற ...சரி இந்தா "
தாத்தா ..குழந்தையின் வலது கையை தலைக்கு மேல் மெல்ல தூக்கி மெதுவாய் வலைத்து இடது புற காதினை விரல்கள் தொடுகிறதா என பார்த்தார் ..
" என்ன தாத்தா பண்ற "
" இந்த பக்கம் இருக்குற காத்து உன் கைக்கு எட்டுதானு பாக்கிறேன் "
" நா வேணும்னா நேரவே தொட்டு காட்டுட்டா தாத்தா "
"அடி படவா ...அது ஒன்னும் வேணா ...எல்லாம் எட்டுது ...நீ அம்மாவ கூப்புடு "
என சொல்லிய தாத்தா ...வேறு யாருமில்லை ...கலையின் தந்தை ....
" ..ம்ம்மா ...தாத்தா கூப்புடுது வா .."
தனது அப்பாவை பார்த்து கலை மகிழ்ச்சி அடைந்தாள் ....தாத்தாவும் குழந்தையும் பேசி கொண்டே சாப்பிட்டனர் ..
"இந்த வருஷம் குழந்தையை பள்ளிக்கோடத்துல சேத்திடலாம் " என்றார் தாத்தா ..
" சரி பா " என்றாள் கலை ..
பள்ளிகோடமா ....அ....ம்மா ..தாத்தா சொல்லுதுனு கேக்காத ....
அய்யோ ...பள்ளிகோடம்.. ...அங்க நா போவுனுமா ......எதுக்கு ....????
என சொல்லி கொண்டே கலையை பார்த்தது குழந்தை ..
குழந்தையின் பார்வை அன்னையிடம் ஏதோ சொல்லியது ..
அதன் அர்த்தம் கலை மட்டுமே அறிந்தாள் ...
குழந்த ..குழந்த ..குழந்த ,,,,
- இராஜ்குமார்