காட்சிகளாய் விரியும் கற்பனைகள் , கார்த்திகா AK கவிதைகள்

கார்த்திகா AK ..நம்மில் பல பேருக்கு தெரிந்தவர் .
"எழுத்துகளை நேசிக்கும் எழுதுகோல் நான்! " என தம்மை சுவவிவரத்தில் அறிமுக படுத்தி கொள்கிறார் .
அதனால்தான் ஒரு நல்ல கவிதையை படிக்க வேண்டும் என்றால் கார்த்திகா கருத்து சொன்ன கவிதைகளை படிக்கலாம் என தைரியமாக நான் சொல்வேன் .

வளமான கற்பனைகளின் கடவுச்சொற்கள் எனலாம் அவர் கவிதைகளை .
எனக்கு பிடித்தது ... நீங்கள் அவரின் கவிதைகளை படிக்கும் போது அந்த வரிகளை மனதில் நிகழ்வாக்கி ரசிக்க முடியும் . அது கவிதை வெற்றிபெற முக்கிய காரணி என்பது என் கருத்து .

நான் இங்கு வந்த புதிதில் அவரின் ஒரு கவிதை படித்தேன் - " ரௌத்திரம் பழகச் சொன்னது நீ" ...அன்றிலிருந்து அவரை வாசிக்க ஆரம்பித்தேன் . இக்கவிதை அவரின் மற்ற கவிதைகள் பெற்ற கவனங்களை விட குறைவே . நீங்கள் கண்டிப்பாய் படிக்க வேண்டும் .

//நள்ளிரவில் மின்னும்
பொன்னகையுடன் விடியல்
நோக்கிப் பயணிக்கிறாள் எம்
குலப் பெண்ணொருவள்..

என் கனவுகள் மெய்ப்பட
இனியொரு தடையுமில்லை!
ஆம் !.............................................
நிஜத்தைக் கொன்றுவிட்டேன் நான் //
இப்படி முடிகிறது கவிதை . அதில் அவர் கொல்ல நினைக்கும் நிஜங்களையும் பட்டியல் போடுகிறார் .அவரின் கற்பனையூர் கடவுச்சீட்டு நிஜத்தை நம் முன் நிறுத்துகிறது வழக்கம் போல் .பாருங்கள் .. நிச்சயம் உணர்வீர்கள் .

இடையில் நான் மகிழ்ந்தது ...நிறைய தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகள் எழுதுகிறார் . சமிபத்திய "கனவு மெய்ப்பட வேண்டும் " வரை . ஒரு கவிதையில் அவர் குறிப்பிடுகிறார் .பிரச்னையில் இருந்து மீள இதை விட சிறந்த வரிகள் நமக்கு கிடைக்காது . கீழே உள்ள வரிகளை நம் அலுவலக மேசையில் சட்டம் அடித்து வைத்து கொள்ளலாம் .

//கரையேற யாரையும்
நம்பவில்லை !நம்பிய
யாவரும் நல்லவருமில்லை !!

என் வாழ்க்கை !
என் முடிவு !!
சுழி கழித்து வெளிவந்தேன் ,
முன் கிட்டச் சுருங்கியிருந்த
வானம் எட்டப் பரந்து
விரிந்திருந்தது தன் மடியில்
எனை ஏந்திக்கொள்ள//

அவர் எழுதி உள்ள ஒரே கட்டுரை கூட தன்னம்பிக்கை ஊட்டும் "நாளை நமதே ".

அடுத்து " மனதில் மட்டுமே " கவிதை . மௌனத்தில் விளையாடும் மன சாட்சியே என்ற பாடல் வரிகளின் கனங்களை எனக்கு நினைவூட்டுகிறது,
இவரின் மனத்தின் மதீப்பீடுகள் .
// எழுதிய சட்டங்களும்
எழுதப்படா
வரைமுறைகளும்
என் எல்லைக்கு i
உட்பட்டவையே //
என்ற மனதின் உண்மை மதிப்பீடு பின்வரும் வரிகளில் அது என்ன செய்ய வேண்டும் என்பதையும் உரைக்கிறது .
//என்னில் நானே
புதிதாய்ப் பிறப்பதும்
புதுப்பிக்கப்படுவதும்
இங்கு மட்டுமேதான்//

இவரின் காதல் கவிதைகள் , மனதின் விருப்பங்களை , வலிகளை மிக மென்மையான வரிகளில் ஆனால்
வலிமையாக சொல்லும் படைப்புகள் . " கனவே கலையாதே " வில் ஒரு வரி
// சுவாசிக்கும்
காற்றில் காதலைத்
தூவி விட்டாயோ
உன் மூச்சில்
சிறை போக
அடம் பிடிக்கிறது
என்னுயிர் //
ஒரு நல்ல ,நாகரீக , அழகிய , ,அறிவகத்தில் நுழைந்த அனுபவம் கார்த்திகாவின் படைப்புகளை படிக்கும் போது எனக்கு வருகிறது . நிச்சயம் நீங்களும் அடைவீர்கள் .அடைந்திருப்பீர்கள் .

(இவரின் சமிபத்திய போட்டி கவிதைகளை விமர்சிப்பது உகந்ததல்ல என விட்டு விட்டேன் .)
என் கருத்துக்கள் சிலவற்றையும் கார்த்திகாவுக்கு தெரிவிக்கிறேன் .
உங்கள் படத்துக்கான அருமையான புகைப்படத் தேர்வுகள் மாதிரி தலைப்புகளும் இருக்க வேண்டும் .கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் .
அடுத்து உங்கள் சில குறைந்த வரி கவிதைகளை இன்னும் கூர்மையாக படையுங்கள் உங்கள் " பிடித்ததினால் " போல் , உங்கள் வழக்கமான கவிதைகள் போல் .
வாழ்த்துக்கள் .தொடருங்கள்....
நன்றி .

- திருத்தி ஒரு விண்ணப்பத்தை சேர்க்கிறேன் . இதற்கு நட்சத்திர மதிப்பெண்கள் வேண்டாமே .கருத்துக்கள் போதும் .நன்றி .

எழுதியவர் : ராம்வசந்த் (23-Nov-14, 10:59 pm)
பார்வை : 623

மேலே