முதுகெலும்பி 11
“எலா.. சீத்தா.. ஒரு வாகா போடறீறீ... மனுசனுக்கு இடுப்பக் கடுத்து வருது.”
மாரி சித்தப்பு மும்மொரமா அடிச்சிக்கிட்டே தாம் பெரியாத்தா வயசிருக்க சீத்தாயி அப்பாயிகிட்ட சொல்லிக்கிருந்தாரு. எங்க ஊருப்பக்கம்லா இப்பிடித்தா வேலை பாக்குறப்ப வயசு வித்தியாசம் இல்லாம கெளவிகள எல்லாம் அவ.. இவன்னுட்டு கிண்டல் பேசிக்கிருப்பம். அவுகளும் கண்டுக்கிற மாட்டாக.
அவெம் இவெம்ன்னு நாலுசோடி மாட்ட வழுதுக்கு வாங்கி அந்தப்பக்கம் பொனைய அடிச்சிக்கிருந்தேம் மயிலான். பொனைஞ்ச வைக்கல அள்ளிக்கட்டி போரைக்கட்டுறதும் .. இங்கிட்டு நெல்ல அள்ளி முட்டுக் குமிக்கிறதுமா ஓடாடிக்கிருந்தேம் நானு...... குழலி எல்லாருக்குந் தண்ணி குடுத்திக்கிருந்தா.. .....
இப்பிடித்தெங் நடக்கும் எங்க ஊருல அறுப்பும் அப்பறமா கருது அடிக்கிறதும் நடக்கும். களப்பு தெரியாம இருக்குறதுக்கு எல்லாருங் கிண்டல் பேசிக்கிருவாக. கலியாணம் ஆகாத இளவட்டங்க போனா
“ சின்னப் புள்ளக நிக்கிதுன்ன... இப்பிடியா பேசுவீக"ன்னு நிப்பாட்டிக்கிருவாக.
எல்லாம் முடிச்சிட்டு சாயங்காலமா எல்லாருக்குங்கூலி பிரிச்சிருவம். யாவாரி வருவாம். பேசி முடிச்சி அவனுக்கு நெல்லு தூக்கி விட்ருவம்..மிஞ்சினத வெத நெல்லுக்கும்... மத்தத சோத்துக்கும் தனித்தனியா வச்சிக்கிருவம்.என்னதா கஷ்டமா இருந்தாலும் வெதநெல்ல மட்டும் விக்க மாட்டம்.
“ வெதநெல்லு யாவாரம் போனா வீடு வெளங்காதுன்னு” ஆளுக சொல்லிக்கிருவாய்ங்க.
“சரிடா... முதுகெலும்பி.. வெயிலு மூக்குல குத்த ஆரம்பிச்சிருச்சி .இப்பம் போனா சரியா இருக்கும். நாபோயி எல்லாருக்கும் டீ.பலகாரம் வாங்கியாந்துர்றேன்.நீ இந்த மாடுகள கொஞ்சம் புடி"ன்னாம் மயிலான்.
"போயிட்டு சுருக்கால வந்துற்ரா.. சொனங்கிறாத.. மாடுகள தண்ணிக்கி ஓட்டணும்.. ஒத்த ஆளா என்னால முடியாது.."
"என்னாது...? ஒத்தையா ஓட்ட முடியாதா..?போடா... ஒன்னைய நம்பி நம்ம சனத்து மத்தியில வச்சி வீரமாப் பேசுனம் பாரு...பாவமுடா.. எந்தங்கச்சி.. நீயெல்லா.. எங்க.. கட்டி...புள்ளப்பெத்து....” நக்கலா என்னைய பேச ஆரம்பிச்சிருந்தாம் மயிலான்.
கேட்டும் கேக்காத மாதிரியே “நமுக்”ன்னு சிரிச்சிக்கிட்டே வெடுவெடுன்னு அந்தப்பக்கம் ஓடிட்டா குழலி...
“டேய்.. சரிதாம்டா.. இவரு பெரிய மழவாழக்கொல..பழுத்து கிழிச்சிப்புட்டாரு........." ன்னு நா பேச ஆரம்பிச்சப்பவே..
“அட................. இவிங்களப் பாருய்யா... அடப்புகளா...நாக்கு காத்துல பெரண்ட கருவாடு கணக்கா காயுது... வவுறு வேறே எரியுது. போயி ஏதாவது வாங்கிட்டு வாங்கடா.. சாமிகளா. நல்லாருப்பீய.. பொறவு பேசிக்கிறலாம்..ன்னுகிட்டே .......சீத்தாயி அப்பாயிய” எலா. நீ..வேற... கொஞ்சம் பொறு.. மனுசம் பேசிக்கிருக்கப்ப அள்ளி.. எங்க..... நல்லா வாயில வந்துரும் அப்பறம்... புள்ளைகல்ல நிக்கி.. ன்னு அவரு வேலையைப் பாக்க... மயிலான் சாமித் தாத்தா கடைக்கி நடையக் கட்டியிருந்தாம்.
ஒருவாரக் காச்சலுக்கு அப்பறம்.. முந்தாநாளு தளஅள்ளிக்கட்டி இன்னைக்கிதா கருதடிக்க ஆரம்பிச்செம். இந்த ஒருவாரக் காலத்துல.. எங்கண்ணுல படவே இல்ல..குழலி. எப்பவாச்சும் தண்ணிக்கொடமோ... வெறகுப் பத்தையோ அள்ளிக்கிவாரப்ப..எதுக்கால வந்தாக்கொட.. அப்பிடியே போட்டுட்டுபோயி ஒளிஞ்சிக்கிறா... மயிலாங்கூடதே பேச்சி எல்லாம்..
"அண்ணே.. அவுகள போகச் சொல்லுங்க... எனக்கு காலு கையெல்லாங் கெடந்து ஒதறுது..நாம் அப்பறம் போறேம்...ங்கிறா....”
"போடா.. ப்போடா..போயிக்கிட்டே இரு"ன்னு மயிலானும் சிரிச்சிக்கிட்டே இழுத்துக்கிட்டு வந்துருவாம்....
இன்னைக்கிதா பாக்குறேம்.. எப்படியும் புடிச்சிறனும்... அதுவும் இந்த மயிலம்பய வாறதுக்குள்ள...இல்லன்னா அவங்கிட்ட சாட பேச ஆரம்பிச்சிருவா.....
இதுக்குதாங்க எங்க ஊருல காதலுன்னு பேரு.. இம்புட்டுதெம்... கண்ணு மனசு இந்த ரெண்டு மட்டும் எப்படியும் எங்க வேணுமின்னாலும் பேசிக்கிறலாம்..கலியாணம் வாற வரைக்கும் வாயிமட்டும் மூஞ்சப் பாத்து பேசணும்... அதுக்கு அப்பறம்... வாயும் வாயுஞ்சேந்து குடிசைக்குள்ள குளுரு காயும்..
இப்ப எங்களுக்கு நேரமுமில்ல. இந்தா நீங்கதா பாக்குரீயள்ன்ன.. எம்புட்டு வேல..கெடக்கு. இதுல இப்படியெல்லா பேசிக்கிற எங்கிட்டு கெடக்கு நேரம்..? இன்னைக்கு எப்படியும் புடிச்சிப்புடனுங்க அவள.....
“ சரி.... ஆளுக எல்லாரும் செத்த நேரம் நிப்பாட்டிப்புட்டு ஒக்காருங்க..மாடு களைக்கிது.. டீ.. பலகாரந்த் தின்னுப்புட்டு பொறவு ஓட்டலாம்"ன்னேம்....
நா நெனச்ச மாதிரியே தென்னத் தோப்பு போருகொட்டாயிக்கி கொடத்த தூக்கிக்கிட்டு குழலி நடக்க ஆரம்பிச்சிருந்தா......
"அப்பிடியே துண்ட விரிச்சி செத்த நேரம் ஒக்காருங்க.. எல்லாரும்.. ந்தா. இப்ப மயிலாம் வந்துருவாம். ..ந்தா... இங்கிட்டு போயிட்டு வாறம்ன்னு கெளம்புறப்பவே மாரி சித்தப்பா கிட்டத்துல வந்தாரு.. "டேய்..தம்பி... தை போயிறட்டுமுடா..புள்ள மெரண்டுரப் போகுது..எதையாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணிப்புடாத" ங்க..........
"அங்கிட்டு என்ன எலி பானையச் சொரண்டுன மாதிரி கொசகொசன்னு.....?" ன்னுச்சி சீத்தாயி அப்பாயி...
நா அவர மொறச்சிக்கிட்டே தென்னந்தோப்புக்கு நேரா போகாம சுத்தி நடந்தெம்..........
"ஐயோ..நீ போயிரு..இல்லல்ல... நீங்க போயிருங்க... யாராவது பாத்துட்டா அம்புட்டுதேம்... எம் மானம்..
மரியா....."நா கையப் புடிச்சதுல பேசுறத நிப்பாட்டிட்டா...
"என்னவாம் மரியாத.... அதேம் முட்டைய ஒடைக்கிற மாதிரி பொட்டுன்னு ஒடைச்சிடோம்ல கூட்டத்துல வச்சி...அப்புறம் என்னவாம்..?முன்னாடில்லாம் நல்லா பேசுவ... இப்பதெம் புதுசா பண்ற...மயிலாங்கிட்ட பேசுவ.. எங்கிட்ட பேசமாட்டியா"ன்னு அப்பிடியே நெருக்குனேம்...
"டேய்ய்.... ஐயோ... தப்பு தப்பு.. இனிமே அப்பிடி சொல்லக்கூடாதுல்ல... முன்னாடில்லாம் ஏதாவது கத்திப்புட்டு ஓடிருவேன். இப்ப அப்பிடியா... உன்னப் பாத்தாலே.. என்னன்னே தெரியல... நடுக்குது..மேல்நாக்கு ஒட்டிக்கிருது..."
இப்ப அவ வெரலு என்னோட தோள குத்திக்கிருந்திச்சி.. எங்க பாச புரியாம நார்த்தமர சிட்டுக்குருவி தலைய ஆட்டி ஆட்டி என்னதா பேசுறாகன்னு உத்துப் பாத்துக்கிருந்திச்சி.
"ம்ம்ம்... வேணும்னா... ஈரமாக்கிறவா...?"ன்னு நா நெருங்க....
“ரொம்பத்தா.. நீங்க.. ஆக்கிட்டாலும்............."ன்னு கொடத்துல வச்சிருந்த தண்ணிய அள்ளித் தெளிச்சா...நாந் தொடச்சி திரும்பி கை நீட்டுறப்ப வெக்கத்தோட நாலு தென்னமரந் தாண்டி கொடத்தோட ஓடிக்கிருந்தா......
"டேய்ய்ய்ய்ய்.. முதுகெலும்பியேய்ய்ய்..............இங்கிட்டு வாடேய்ய்ய்ய்...." என்னைய கூப்டறமுன்னு ஊரையே கூப்பிட்டுக்கிருந்தாம் மயிலான்.
“ இந்தா... வாறேன்ன்ன்னன்ன்ன்... நீங்க குடிந்கடாஆஆஅ...ன்னேன்...! இதுவும் ஊருக்கே கேட்டுருக்கும்...
“இல்லடாஆஆஆ... யாவாரி வந்துருகாறேய்ய்ய்ய்....................மயிலான்.
"அப்படியா....... இருக்கச் சொல்லேய்ய்ய்ய்... இந்தா வந்துர்றேம்ம்ம்ம்....." நானு
மைக்குசெட்டு வெக்காமலே அங்கிட்டும் இங்கிட்டுமா ராகம் பாடிக்கி கெடந்தோம்...நாங்களும்.. அம்புட்டு சத்தம்...
சரிங்க..யாவாரி வந்துட்டானாம்.போகணும்... கொழலி வேற ஓடிட்டா... அங்க மயிலாம்வேற என்னத்த வறுக்கப்போறானோ தெரியல.... வாரனுங்க.. அப்பறம் பேசுவம்...
(கருக்கருவா.. பேசும் )