தாய்
பாரதத்தைக் கூறுபோடும்
பாவிகளை மன்னித்து
பாராமுகமாய் நின்று
பார்த்துக் கொண்டிருப்பாள்
எங்கள் பாரதத் தாய்.
தப்பேதும் செய்திட்டாலும்
தன்மகனுக் கென்றென்றும்
தண்டனையே தரமாட்டாள் இத்
தரணியிலே பிறந்தத் தாய்.
கொம்பை வைத்து அடித்தாலும்
கொடிப் புல்லை போட்டாலும்
கொட்டியிலே போய் நின்று
கொடுத்திடுவாள் தம்பாலை பசுத் தாய்.
சட்டமது இருண்டாலும்
சங்கரனே சுட்டாலும்
சத்தியத்தை காத்திடவே
சத்தமின்றி நின்றிடுவாள் சத்தியத் தாய்.
பொட்டிழந்து நின்றாலும்
பொட்டல் வெளியில் படுத்தாலும்
பொறுப்புடனே தன்மகனை
பொறுமையுடன் காத்திடுவாள் விதவைத் தாய்.
மணாளனே பாக்கியமென்று
மன்னவனே சாத்தியமென்று
மகிழ்வுடனே வாழ்ந்திடுவாள்
மனையாள் என்னும் மனைவித் தாய்.
கரைபுரண்டு ஓடினாலும் தன்
கரையோர மக்களெல்லாம்
களிப்புற்று வாழ்ந்திடவே கரைமீராது
கடவுளைப்போல் கைகொடுப்பாள் காவிரித் தாய்.
மஞ்சத்தில் துயில்வோரும்
மண்மீது துயில்வோரும்
மரம்போல சாய்ந்திட்டால் தன்
மடிமீது இடம் தருவாள் பூமித் தாய்.
துன்பத்தில் பங்கெடுத்து
துவண்டு விழுந்தால் தோள்கொடுத்து
துளிர்க்கும் கண்ணீரை துடைத்தெடுத்து
துனிவூட்டிடுவாள் தோழி என்னும் தாய்.
உயிரோடு இருப்போரும்
உயிரைத்தான் விட்டோரும்
உன்னதமாய் விளங்கிடவே
உதவிப்புரிந்திடுவாள் எங்கள் மலர்த் தாய்.
நேசமென்னும் விதைவிதைத்து
நேர்மையேன்னும் நீருற்றி
நேயத்துடன் நாம் வாழ
நேர்த்தியுடன் கவிப்படைத்தாள் ஒளவைத் தாய்.
தாமரைப்பூ முகமுடையாள்
தாழைமடல் நிறமுடையாள்
தானே வலியச் சென்று
தாய்போல பணிசெய்வாள் தெரேசா என்னும் தாய்.
நாதமாய் குரலில் எழுந்து
நாவதனில் தாளமிட்டு
நாட்டியந்தான் ஆடிடுவாள் எங்கள்
நாயகியாள் தமிழ்த் தாய்.