நித்திய வாழ்க்கை கவிதை

*
நல்ல காலம் பிறந்து விட்டதென்று
அவசர அவசரமாய் கல்யாணப்
பொறுப்புகளைப் படபடவென்று
பார்க்கத் தொடங்கினர்.
ஜாதகம் பார்ப்பதில் தொடங்கியது
ஒன்பது பொருத்தம் பார்த்தனர்.
இலட்சங்களை வாரி இரைத்து
இறுமாப்போடு ஊர்ப் போற்றும்
சீர்வரிசையோடு
திருமணம் செய்து முடித்தனர்.
எத்தனை நொடிகள்? நிமிடங்கள்?
எத்தனை நாள்கள்? மாதங்கள்?
எத்தனை வருடங்கள்?
தாம்பத்ய வாழ்க்கையில்
திருப்தியோடு வாழ்ந்தாய்.
சின்னச் சின்னச் சிணுங்களின்
சிக்கல்களில் விழுந்தாய்.
சிந்தைத் தடுமாறினாய்
மனஇறுக்கமானாய்
மனமுறிவு கேட்கும்
முயற்சிக்கு ஆளானாய்.
இப்பொழுது, இருவருமே
எந்த மனப் பொருத்தமும்
பொருந்தி வரவில்லையென்று
வருந்தி விலகியிருக்க
வழக்குத் தொடுத்து
வாங்கிக் கொண்டீர்கள்
விவாகரத்து.
விவாகரத்தில் இல்லை
மணவாழ்க்கை
விவேகத்தில் மட்டுமே
விதிக்கப்பட்டிருக்கிறது
நித்திய வாழ்க்கை…!!

எழுதியவர் : ந.க.துறைவன் (27-Nov-14, 8:52 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 96

மேலே