மாம்பழம் புடிக்குமுங்க என் மாமனுக்கு
மாம்பழம் புடிக்குமுங்க என் மாமனுக்கு...
ஆச பட்டு கத்துகிட்டேன் அதில் அல்வா செய்ய....
எங்கூரு ஆத்தோரம் வளந்திருக்கு மாமரம்.....
உச்சி மர கொப்பில் பறிச்ச நல்ல பழுத்த மாங்கனி ஒன்னு...
தை மாச பொங்கலுக்குன்னு தனிய எடுத்து வெச்ச
பத்தையூர் பனங்கருப்பட்டி ரெண்டு....
மணக்க மணக்க செஞ்சா தான்
மாமனுக்கு புடிக்கும் எடு புள்ள அந்த ஏலக்கா நாலு....
எங்கூட்டு லட்சுமி தாயி தந்த பாலுல
கடைஞ்செடுத்த நெய் கொஞ்சம்...
அலங்கரிக்க முந்திரி மூணு....
பறிச்ச மாங்கனியும் இடிச்ச வெல்லமும்
சேர்த்து அரச்சு எடுத்து வெச்சேன்....
பாத்திரத்தில் நெய் ஊத்தி பழக்கூழ அதில் சேர்த்து
கலவையா அது சேர இன்னும் கொஞ்சம் நெய் ஊத்தி.....
அரப்பதமா எறக்கி வெச்சி அது மேல ஏலக்கா தூவி
பொடிச்ச முந்திரி போட்டு....
கமகமக்க மாம்பழ அல்வா செஞ்சு காத்திருக்கேன் மாமா.....
இன்னிக்காச்சும் வருவியா.....