இணையவழித் தமிழ்ச்சாவு - கே-எஸ்-கலை
(இது கொஞ்சம் பெரிய கட்டுரை. தமிழர்கள் மட்டும் வாசியுங்கள், தெளிவான, ஆரோக்கியமான கருத்துகளை மட்டும் எழுதுங்கள்..ஒருவரிக் கருத்துகள், கவிதைப் பின்னூட்டங்களை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள். யாரேனும் தவறுதலாக இந்த படைப்பைத் திறந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் – கே-எஸ்-கலை)
--------------------------
தமிழ் உலக மொழிகளில் மிகத் தொன்மையானதும் அழகானதுமான மொழி என்பதில் எனக்கோ உங்களுக்கோ மாற்றுக் கருத்து வருவதற்கான வாய்ப்பில்லை என்பது உண்மை!
தமிழின் சிறப்புக்கள் என்று நாம் எடுத்துக் கொண்டு பேச ஆரம்பிக்கும் போதெல்லாம், ஆரம்பிக்கும் முதல் வாசகமே தமிழ் தான் உலகிலேயே பழைய மொழி அல்லது உலகின் முதல் மொழி என்ற திமிரோடு பேசுவது இயல்பு. முதல் மொழி அல்லது பழைய மொழி என்று சொல்லிக் கொண்டிருப்பதில் இருக்கும் பெருமை, ஒரு மொழியின் வளர்ச்சிக்கு எப்படி உதவுகிறது என்பது யோசிக்க வேண்டிய விடயம்.
பழைய மொழி அல்லது முதல் மொழி என்ற பெருமைக்குரிய வட்டத்தில் இருந்து சற்றே வெளியில் வந்து, தமிழின் இன்றைய நிலைமை என்ன என்று கண்காணிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டியது அவசியம்.
இயல், இசை, நாடகம் என தமிழ் தன்னை மூன்றாய் வகைப்படுத்திக் கொண்டு, வீறு நடை போட்டதற்கான மிகத் தெளிவான உதாரணங்கள் உண்டு. இந்த உதாரணங்கள் சுட்டிக் காட்டப்பட வேண்டுமாயின் ஏறத்தாள ஒரு நூற்றாண்டு அல்லது ஐம்பது வருடங்களேனும் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருப்பது உண்மை தானே ?
இதற்கான காரணம் என்ன ? சிந்தித்துள்ளீர்களா ?
இலக்கியம் என்பது இவர்தான் செய்ய வேண்டும் என்ற வேலிக்கு வெளியில் இருக்கும் ஒரு தோட்டம். இதில் எந்த தப்பும் இல்லை.
இந்த தோட்டத்தில் எவரும் விதைக்கலாம்...எதையும் விதைக்கலாம்...எவனோ விதைத்ததை எவனும் அறுவடை செய்யலாம்...அறுவடை செய்தது எதுவாயிருந்தாலும் அதை விற்றுத் தீர்க்க சந்தை உண்டு என்று ஒரு புதிய யுகத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் காலம் இது.
இப்படி எல்லாமே மலிவாக போனதன் விளைவுதான் தமிழ் இலக்கியம் தன் அடையாளத்தை தொலைக்கப் பிரதானமான காரணிகளுள் ஒன்றானது. அந்த சந்தை எதுவென பார்கையில், இணையம் அல்லது கணினிவழி வெளியீடுகள் என்பது அதிகம் யோசிக்காமல் தெரிந்துக் கொள்ளக் கூடிய ஒன்றே.
கணணி என்பதோ அல்லது இணையம் என்பதோ தமிழை அல்லது தமிழ் இலக்கியத்தைச் சீரழிக்கிறது என்று கூறுவது மிகத் தப்பான விடயமாகும். இந்த கணினி அல்லது இணையம் வாயிலாக அரைகுறைத் தமிழர்கள் தமிழை சப்பி மென்று துப்பிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது குதப்பிக் கொண்டிருக்கிறாகள் என்பது தான் மிகச் சரியான பார்வையாக இருக்க முடியும் !
கணணி வாயிலாக இயற்றமிழ் இலக்கியம்(இயல்) எவ்வாறு நடை போடுகின்றது என்று நான் பார்க்கும் “இணைய தமிழிலக்கிய உலகில்” இருந்து எனது கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன் !
இயல் அல்லது இயற்றமிழ் என்பது, எழுதப் படுவதும் பேசப்படுவதுமாகிய மொழி நடையினைக் குறிக்கின்றது
இயற்றமிழ் இலக்கியம் என்ற விடயத்தின் கீழ் நூல்வழி இலக்கியங்களே மிகப் பெரிய இடத்தினைப் பெறுகின்றது. ஒரு நூல் அல்லது சஞ்சிகை வெளியிடுதல் என்பது சாதாரணமாக எல்லோராலும் செய்ய முடியாத ஒரு காரியமாகவே இன்னும் இருந்து வருகின்றது.
பொதுவாக ஒரு நூலினை திறம்படச் செய்ய வேண்டுமெனின் முதலில் பொருளாதார ரீதியாக ஒருவன் நல்ல நிலையில் இருக்க வேண்டிய கட்டாயம் இருகின்றது. மேலும் நூலினை பதிப்பிப்பதற்கு ஒரு விடயம் சார்ந்த ஆக்கங்களின் தொகுப்போ அல்லது ஒரு தலைப்பின் கீழ் உட்புகுத்தக் கூடிய படைப்புகளோ, கனிசமான அளவில் ஒரு நூலாசிரியருக்குத் தேவைப் படுகின்றது.
அத்துடன் நூலினை ஒரு தனி மனிதனால் பூரணமாக செய்து முடிக்க முடியாத சிக்கலும் உண்டு. படைப்பாளி, அச்சகம்,வடிவமைப்பாளர், விற்பனை முகவர் போன்ற பலதரப்பட்ட நபர்களின் கூட்டு முயற்சி இருப்பின் மாத்திரமே ஒரு நூல் முழுமையான பிரசவத்தை அடைய முடியும்.
அப்படி நூல் வெளியிடப்பட்டாலும் கூட அந்த நூலின் உருவின் கவர்ச்சி , கருவின் கவர்ச்சி, நூல் வெளியிடப்பட்ட சமுதாயத்தில் வாசிப்பிற்கு உள்ள கேள்வி, ரசனைக்கு உள்ள கேள்வி (கேள்வி = Demand) என்பனவற்றை மையமாக வைத்தே குறித்த படைப்பாளியின் எழுத்துகள் சமூகத்திற்கு கடத்தப் பட வாய்ப்பிருக்கின்றது!
இது போன்ற காரணங்களால் தான் நூல் வெளியீடு என்பதை பெருமைக்குரிய ஒரு விடயமாகவும், ஒரு பெரிய வெற்றியாகவும், குறிக்கோளாகவும் கருதிக் கொண்டிருக்கின்றோம் !
இருப்பதோராம் நூற்றாண்டில் கணினி, தன்னால் எவ்வளவு தூரம் எல்லா துறைகளையும் தன்வசம் ஈர்க்க முடியுமோ அவ்வளவு தூரம் சகல துறைகளையும் ஈர்த்துக் கொண்டது என்பது தான் நாமனைவரும் அறிந்த உண்மை. அந்த வகையில் எழுத்துத் துறைக்கு இந்த கணினி மூலம் கிடைத்த வரங்களும் சாபங்களும் பல்வேறு இயல்புடையவை !
ஆரம்பத்தில் நான் நான் குறிப்பிட்டது போன்று ஒருவனுடைய எண்ணங்களை ஆக்கங்களாக்கி அதை சமூகத்தின் பார்வைக்கு கடத்துவதற்கு இருந்த இடைவெளியை குறைத்த மிகப் பெரிய ஊடகம் இந்த இணைய வாயிலான கணினி தான் என்பதை கூறிக் கொள்ள வேண்டும் !
நூல் என்பது குறிப்பிட்ட ஒரு வகுப்பினரிடையே அல்லது குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே சுற்றி வரக் கூடியதாக மட்டுமே இருக்கின்ற வேளையில், இணைய வழி ஆக்கங்கள் ஒரு நொடிப் பொழுதில் உலகின் மூளை முடுக்குகளிலெல்லாம் பரவிக் கிடக்கும் வாசகர்களின் பார்வைக்கு சென்றடைய வாய்ப்பைத் தருகின்றது என்ற தனது மகத்தான செயற்பாட்டின் மூலம் புத்தகத்தை விட ஒரு படி அல்ல பல படிகள் முன்னிலை வகிக்கின்றது !
மிக மிக குறைவான முதலீட்டுடன் கைப்பேசி மூலம் கூட எம்முடைய ஆக்கங்களை சமர்பித்துக் கொள்ளவும் அதற்கான உடனடி பிரதிவிளைவுகளை நொடிப்பொழுதில் பெற்றுக் கொள்ளவும் கூடிய வசதி இருப்பதால் எல்லோரும் தம்முடைய எண்ணங்களை ஏதேனும் ஒரு இலக்கிய வடிவமாக இணையம் வாயிலாக சமர்பித்தல் மிக வேகமாக அதிகரித்து வருகின்றது!
இந்த வளர்ச்சியானது மிக அவசியமானதும் மிக பெரியதொரு வாய்ப்பாகவும் எல்லாவிதமான படைப்பாளிகளுக்கும் இருப்பது தனிச்சிறப்பு!
இவ்வாறு எமக்கு கிடைத்த இந்த வாய்ப்பினை நாம் எவ்வாறு நம்முடைய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய காலகட்டமே இது !
இணையம் வாயிலான தமிழர் இலக்கியத்தின் பயணம் பார்வையற்றவனின் காட்டுவழிப் பயணத்தைப் போல சென்றுக் கொண்டிருக்கின்றது என்பதை விரும்பியோ விரும்பாமலோ சொல்ல வேண்டிய காலக் கட்டம் இது !
இணையம் என்பது என்னைப் பொருத்தமட்டில் ஒரு திறந்த வெளி நீச்சட் தடாகம். யாரும் யாருடைய அனுமதிக்காகவும் காத்திராமல் சுயமான முடிவுகளின் கீழ் தமது எண்ணங்களைப் பயணிக்கச் செய்ய முடியும். இங்கு சிலர் அலுப்பு போக பாய்கிறார்கள், சிலர் அழுக்குப் போகப் பாய்கிறார்கள், சிலர் தெரியாத் தனமாக விழுந்து விடுகிறார்கள், இன்னும் சிலர் கட்டாயமாக தள்ளப் படுகிறார்கள், வெகு சிலரே ஆரோக்கியமான காரணத்திற்காக இதில் குதிக்கிறார்கள் !
இப்படிப்பட்ட பல்வேறு குணாம்சங்களைக் கொண்ட குழாத்தினர் குழுமி இருக்கும் இந்த இணைய தளங்களில் இலக்கணப் பிறழ்வு என்பது, அரசியலும் ஊழலும் போல பின்னிப் பிணைந்து கிடக்கின்றது !
இலக்கியம் என்ற தலைப்பின் கீழ் இன்பியல், அறிவியல் என்ற இரு துறை சார்ந்த படைப்புகள் உள்வாங்கப் படுகின்றன. இதில் இன்பியல் சார் இலக்கியங்களே தமிழில் மிகையாகக் காணப் படுகின்றது. அறிவியல் சார் இலக்கியங்கள்; இன்பியல் சார் இலக்கியங்களோடு ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருகின்றது என்பது தெளிவான விடயம் !
இன்பியல் இலக்கியங்கள் என்பது பொதுவாக உணர்வுகளைப் பற்றிய, உறவுகளைப் பற்றிய, ரசனைக்குச் சுவையான விடயங்களை உள்வாங்கி உருவாக்கப்படுகிறது !
இன்பியல் இலக்கியமானது சிறுகதை, புதினம், கவிதை, நாடகம் எனும் பிரிவுகளை உள்ளடக்கி இருக்கின்றது. இதில் பரவலாக பெரும்பாலானோர் எழுத படிக்க விரும்பும் இலக்கிய வடிவமாக கவிதை எனும் இலக்கிய வடிவமே இருகின்றது.
இணையம் வாயிலாக இலக்கியங்கள் படிக்க முன்வரும் ஒருவருக்கு கவிதை என்பதன் வரைவிலக்கணம் என்ன என்றால் அதற்கான பதில் விசித்திரமாகவோ அல்லது வித்தியாசமாகவோ இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதற்குப் பலதரப்பட்ட காரணங்கள் உண்டு. சரியான வகையில் கவிதை என்ற இலக்கிய வடிவத்தை புரிந்துக் கொண்டு எழுதுவோர் சொற்ப சிலரே. அதிலும் புதுக் கவிதை என்ற நடையில் எதை எப்படி எழுதினாலும் கவிதை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அறியாத்தன சர்வாதிகாரம் செய்யும் படைப்பாளர் கூட்டம் இப்போது பல்கிப் பெருகி வருவதில் தான் இந்த இலக்கியச் சீரழிவு பெரும்பாலும் உருவாகின்றது.
புதுக் கவிதை என்பது இலக்கணங்களைச் சற்றே தளர்த்திக் கொண்டு படைப்பாளிக்கு அதிகப்பட்ச இலக்கணச் சுதந்திரம் வழங்கும் ஒரு கவிதை நடை என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். இலக்கணமே இல்லாது ஒரு மொழி தனது சீரிய சிறப்பை மெருகேற்ற முடியாது என்ற உண்மையை பலரும் அறியாமல் செயல்படுவது அபத்தமும் ஆபத்தும் நிறைந்த ஒரு காரியம் என்பதை நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும்.
இன்று புதுக் கவிதையும் தன்னில் பல்வேறு பிரிவுகளை உட்கொண்டிருக்கிறது என்பது பலரும் அறிந்ததே. இணைய யுகம் என்று வந்ததும் மிகச் சுருக்கமாக ஒரு படைப்பை படைத்தால் தான் வாசகர்கள் படைப்பை நேசிப்பார்கள் என்ற ஒரு தப்பான அபிப்ராயத்தை முன்னிலைப்படுத்தி குறுங்கவிதை வடிவங்களை சின்னா பின்னமாக சிதைக்கும் பல படைப்பாளிகளை எல்லா இணையத் தளங்களிலும் காண முடிகின்றது.
ஒரு படைப்பிற்கு சுவாரஸ்யம், ரசனை, நேர்த்தியான கருப்பொருள், சிறந்த மொழியாள்கை, சரியான இலக்கண யுக்தி என்பவற்றை சரியாக உள்வாங்கத் தெரியாத படைப்பாளிகளே இது போல சுருக்கமாய் எழுதினால் தான் வாசிப்பார்கள் என்ற எண்ணங்களைக் கொண்டு செயற்படுகிறார்கள். மேலே நான் கூறியிருக்கும் விடயங்களைச் சரிவர படைப்பிற்குள் புகுத்திக் கொள்ள தெரிந்த ஒரு படைப்பாளிக்கு படைப்பின் வரிகள் எத்தனை என்ற ஐயமே வர வாய்ப்பில்லை. படைப்பின் நீளம் பற்றிய கவலை தேவையில்லை. ஆனால் அனாவசியமாக ஒரு சொல்லைக் கூட பயன்படுத்தக் கூடாது என்ற கோணத்தில் படைப்பாளி கண்ணும் கருத்துமாக இருப்பதோடு வார்த்தைச் சிக்கனத்தைக் கருத்தில் கொள்ளல் அவசியம்.
ஆனால் இன்று இணையத் தள எழுத்தாளர்களில் பலரும் உணர்வுகள் என்ற பெயரில் ரசிக்க அல்ல சகிக்கவே முடியாத ஆக்கங்களை தளங்களில் கொட்டி வருவது துரதிஷ்டவசமான செயலே.
கவிதை என்பது உணர்வுகளின் அல்லது கற்பனையின் வரி வடிவம் என்பதை மறுப்பதற்கில்லை. அந்த கோணத்தில் பார்க்கும் போது இன்றைய இணைய யுக படைப்புகள் இவ்வாறான மோசமான தரத்தில் இருக்க என்ன காரணம் என்பதை பார்த்தால் ஒருவேளை இந்த யுக படைப்பாளிகளுக்கு சிறந்த உணர்வுகளோ அல்லது சிறந்த கற்பனைகளோ இல்லை என்பது தான் முடிவாகின்றது.
மேலும் தளங்களில் எழுதுவோர் தம்மைச் சூழ ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடிய வசதியை எல்லா தளங்களும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதும் மிகச் சிறந்த ஒரு விடயமே. இலக்கியப் பரிமாறல்களை ஏற்படுத்திக் கொண்டு இலக்கிய வளர்ச்சிக்காக ஒன்று திரளக் கூடிய வசதி இதன் மூலம் உருவாக முடிகின்றது.
இருப்பினும் இந்த நட்பு வட்டாரங்களின் மூலம் உண்டாக்கப் படும் முறையற்ற உந்துதல்களால் பல படைப்பாளிகளின் குறைப்பாடுகள் சரியான வகையில் இங்கே சுட்டிக் காட்டப் படாமலேயே இருப்பதோடு அவை பிழையே இல்லை என்ற வாதத்தை முன்வைக்கும் அளவிற்கு நட்பு, அன்பு, ஊக்குவிப்பு என்ற விடயங்களை முன்னிலைப் படுத்தி வாதாடுவோரும் உளர்.
உணர்வுகளைப் பற்றிய ஒரு படைப்பில் உள்ள ஏதேனும் ஒரு குறையினைச் சுட்டிக் காட்ட முன்வரும் போது குறித்த அந்த படைப்பாளியின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்தியதாக எழும் விமர்சனங்கள் இதில் பரவலான ஒன்று.
ஒருவன் தனது படைப்பை பொது இடமொன்றில் பரிமாறும் போது அது குறித்த எந்தவிதமான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவனாய், எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லக் கூடியவனாய் இருத்தல் அவசியம். கண்ணுக்குத் தெரியும் குறைகளை சுட்டிக் காட்டுதல் என்பது கொச்சைப் படுத்தல் என்ற கோணத்தில் பார்ப்பது தப்பான விடயம்.
உதாரணத்திற்கு அம்மாவைப் பற்றி ஒரு படைப்பாளி எழுதியிருக்கும் படைப்பில் உள்ள பிழை ஒன்றை சுட்டும் போது தாய்மையின் புனிதத்தைக் கொச்சைப் படுத்தி விட்டதாக கூக்குரலிடும் படைப்பாளிகளும் உளர். இந்த இடத்தில் ஒரு விடயத்தை படைப்பாளிகள் மறந்து விடுகிறார்கள். அதாவது தாய்மை என்பது கவிதை எழுதினாலும் எழுதாவிட்டாலும் புனிதமானது தான். அந்த தாய்மையைப் பற்றி குறையின்றி எழுதினால் தான் கவிதை புனிதாமாகும். அன்றியும் கவிதை எழுதுவதால் தான் தாய்மை புனிதமாகிறது என்ற எண்ணம் மிகத் தப்பானது.
அதேவேளை தாய்மையைப் பற்றியோ அல்லது காதலைப் பற்றியோ எழுதும் ஒரு படைப்பாளி அதனை குறையின்றி எழுதினால் தான் குறித்த படைப்பு புனிதமாகும் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். மாறாக கவிதை மூலம் தான் தாய்மைகோ காதலுக்கோ புனிதம் உண்டாகின்றது என்ற ரீதியில் கருத்துகளை முன்வைக்க முனையும் போது அவர் மிக ஏழ்மைத் தனமான இலக்கியவாதி என்பது வெளிச்சமாகின்றது.
இவ்வாறான குறைப்பாடுகள் பெரும்பாலும் இணையத் தள இலக்கியங்களில் தான் நிகழ்கின்றது என்பதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்ட முடிகின்றது. அதாவது இலக்கியங்களுக்கு சார்பாக பேசுவது மட்டுமே ஒரு படைப்பாளியை ஊக்குவிக்கும் செயல் என்று . பிழையைக் கூட சரியாகப் பார்க்க வேண்டும் என்று விமர்சகர்கள் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள் என்பதே இதன் சாராம்சம்.
உணர்வுகள் என்ற பெயரில் இலக்கணம் ஒழிக்கப் பட்டு இலக்கியங்கள் உருவாக்கப் படுவது முறையல்ல என்பதே என்னுடைய கருப்பொருளாக இருக்கின்றது.
பலரும் கவிதை எழுதுவற்கான முதற் காரணமாக காதல் என்ற விடயம் இருப்பது பலரும் அறிந்ததே. காதல் என்ற மூன்றெழுத்து மந்திரம் தான் இலக்கியத்தின் சுவைக்கு முக்கிய காரணமாக இருகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆதி இலக்கியங்களாகட்டும், இந்த நூற்றாண்டு இலக்கியங்களாகட்டும் காதலை முன்வைத்து ஆக்கப்படும் படைப்புகளே மிக அதிகமாக இருக்கிறது.
எல்லோருக்கும் காதல் யார் மீதாவது அல்லது எதன் மீதாவது வந்தே தீரும் என்பது உறுதி. இந்தக் காதல் தரும் இன்ப துன்பங்கள் எதுவாக இருந்தாலும் அது இலக்கியமாக மாறும் போது வாசகனுக்கு அல்லது ரசிகனுக்கு ரசனைக்கு விருந்தாக அமையும் என்பது திண்ணம்.
ஆனால் இப்போது பலரும், காதல் கவிதைகளா? அய்யோ வேண்டாம் அந்தத் தொல்லை....நான் காதல் கவிதைகளுக்கு கருத்து சொல்ல மாட்டேன்..நான் காதல் கவிதைகள் வாசிக்கவே மாட்டேன் என்று, காதல் சார்ந்த படைப்புகளை புறக்கணித்துச் செல்லும் நிலைப் பரவலாக இருக்கிறது.
இதற்கான காரணம் என்ன?
காதல் என்றால் என்னவென்று தெரியாத காலத்தில் காதலிப்பதும் தவறு...அந்த வயதில் காதலைப் பற்றி எழுதுதலும் தவறு. காதல் என்றால் என்னவென்று சரியாக தெரியாத போது, அந்தக் காதலைப் பற்றி எப்படி ஒருவனால் சரியான படைப்பொன்றைச் செய்ய முடியும்? இங்கு தான் காதல் குறித்த அருவருக்கத் தக்க படைப்புகள் உருவாகின்றன.
காதல் ஒரு குறிக்கோளுடன் இரு மனங்கள் இணைந்து பயணிக்கும் ஒரு அழகியப் பயணம். பரஸ்பரம் ஆண்களும் பெண்களும் தமக்கிடையே முறையாகப் பரிமாறிக் கொள்ளும் நேர்மையான உணர்வுகளின், உணர்சிகளின் வெளிப்பாடு என்று சொல்ல முடியும்.
ஆனால் இன்று கண்டதும் காதல், பார்த்ததும் காதல், உரசியதும் காதல் என்று ஏதேதோ காரணங்களால் காதல் பலருக்கும் வருகிறது. பதின்ம வயதிலேயே இந்த பயணம் எல்லோராலும் தொடங்கப் படுகிறது.
இந்தப் பதின்ம வயதில் காதல் என்ற உணர்வு வருவது மிகச் சாதாரணமான விடயமே. எதற்காகவும் காத்திருக்காமல் நரம்புகள் புடைத்துக் கொண்டு வரும் காதல், பல வரம்புகளை உடைத்துக் கொண்டுப் பெருகி உருகி வெளி வந்து கருகி கருக்கிப் போவது சர்வ சாதரணமான ஒன்றாக இருக்கிறது.
அந்த வேகத்தில் வரும் காதலும் அது உருவாக்கும் கவிதை போன்ற இலக்கியங்களும் இதே போல வரம்புகளை உடைத்துக் கொண்டு வருகிறது என்பது தான் உண்மை.
பெற்றோரையே புறக்கணித்து வரும் காதல் இலக்கணத்தை மட்டும் பொருட்படுத்தவா போகிறது? இந்த இடத்தில் தான் இன்றைய காதல் இலக்கியங்கள் சமூகத்தை, இலக்கிய உலகை அசிங்கப்படுத்த எத்தனிக்கிறது என்றால் அதைத் தப்பென்று சொல்ல மாட்டீர்கள் என்றெண்ணுகிறேன்.
இந்தக் காதல் கவிதைகள் அரங்கேறும் மேடையாக இணையத் தளம் இருக்கிறது. இலக்கிய ஆர்வலர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டை விட இது போன்ற பதின்ம வயது காதலர்களுக்கே இணையத்தில் அதிக ஈடுபாடும் ஈர்ப்பும் இருக்கிறது.
தமது எப்படிப் பட்ட எண்ணங்களாக இருந்தாலும் அவற்றை ஒரு நொடியில் மேடையேற்றி பார்க்கும் வசதி இருப்பதால், ஏதோ ஒரு எண்ணத்தை காதல் என்று எண்ணி அந்த எண்ணத்தின் வாயிலாக தமக்குள் தோன்றும் அற்பத் தனமான சிந்தனைகளை , கற்பனைகளை கவிதை என்று முடிவு செய்து பதிவிடத் துணிகிறார்கள்.
காதல் என்றாலே என்னவென்று தெரியாத ஒருவனுக்கு காதலைப் பற்றிய கவிதை மட்டும் சரியாக வருமா? வெறும் வர்ணனைகளையும், அலங்காரங்களையும், புலம்பல்களையும் கவிதை என்று சொல்லி விட முடியுமா?
கண்ணே, மணியே, முத்தே, குயிலே, மயிலே, கிளியே என்ற பழகிப் போன சமாச்சாரங்களுடன் ஆரம்பித்து நரியே, குரங்கே, கழுதையே என்று எதை வைத்து எழுதினாலும் அது “கவிதை என்று ஏற்றுக் கொள்” என்ற கட்டளையின் கீழ் இந்த யுக “கவிதைகள்” பயணித்துக் கொண்டிருகிறது.
அந்தக் காலக் கவிதைகளில் காதல் ரசம் சொட்டியது..
இந்தக் காலக் கவிதைகளில் காதல் விரசம் சொட்டுகிறது....
முற்காலத்திலும் இப்படி தாறுமாறான எண்ணங்களை உடைய மக்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பதல்ல இதன் கருத்து. அந்தக் காலத்தில் அவனவனுக்குத் தோன்றிய அற்பத் தனமான ஆசைகள், எண்ணங்கள் எல்லாம் அவனது மனதுக்குள் அல்லது அவனைச் சார்ந்த ஒரு குறுகிய வட்டத்துள் மட்டும் வெளிப்பட்டு நின்றுவிட்டது. அவனுடைய எண்ணங்களை உலகே பார்க்கும் அளவிற்கு பரிமாற அவனுக்கு வசதி இருக்கவில்லை என்பது தான் உண்மை.
ஆனால் இன்று அந்த மாதிரியான எண்ணங்களை வினாடிகளில் உலகம் முழுதும் வியாபிக்கச் செய்யும் வசதியை இணையம் தந்துவிட்டது. இதனால் எந்த மாதிரியான எண்ணங்களாக இருந்தாலும் அதற்கு கவிதை என்ற ஒரு போர்வையைப் போர்த்தி எல்லோர் பார்வைக்கும் முன்வைத்து விடுகிறார்கள்.
இவர் தான் காதல் கவிதை எழுத வேண்டும் என்றல்ல நான் சொல்ல வருகிறேன். வெறும் வர்ணனைகளும், உணர்வுகள் என்றப் பெயரிலான பொய்ப் பிதற்றல்களும் எதற்காக கவிதை என்றோ அல்லது இலக்கியம் என்றோ அழைக்கப்பட வேண்டும்?
இன்று இப்படி பலரும் எழுதத் தொடங்கியப் பின்னர் தான் கவிதைகள் என்றாலோ அல்லது காதல் சார் இதர இலக்கியங்கள் என்றாலோ பலரும் புறக்கணிக்க எத்தனிக்கிறார்கள்.
தமிழ் இலக்கியத்தில் தான் காதல் என்ற விடயம் மிக அழகாக அருமையாக சித்தரிக்கப் பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இன்றைய இணைய யுக காதல் கவிதைகள் எதை நோக்கிப் பயணிக்கிறது? இந்தக் காதல் கவிதைகள் ஆதி கால காதல் கவிதைகளை விட என்ன புரட்சியைச் செய்துவிட்டன?
நாகரிகமோ, அறிவியலோ வளரா அக்காலத்தில் எழுதப் பட்ட இலக்கியங்களை இன்னும் நாங்கள் முன்மாதிரியாக வைத்துப் பேசுவதற்கான காரணம் என்ன ? அந்த காலத்திலேயே அப்படி எழுதினார்கள் என்றால் நாம் இப்போது எவ்வளவு பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும்? அதை ஏன் எம்மால் செய்ய முடிவதில்லை ? இன்னும் எத்தனை காலத்திற்கு புராண இதிகாசங்களையேச் சுட்டிக் காட்டிக் கொண்டு இருக்கப் போகிறோம்?
இப்படியெல்லாம் நாம் சிந்திக்க வேண்டாமா?
எல்லோருக்கும் கணினியோ, கைப்பேசியோ இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எல்லோரும் ஏதோ எழுதுகிறோம்..
சரி எழுதுவதில் எந்தத் தப்பும் இல்லையே...எதை எழுதுகிறோம் என்ற விவஸ்தை வேண்டாமா? எப்போது இது குறித்து சிந்திக்கப் போகின்றோம்?
இப்படி நாம் சிந்திக்கத் தவறினால் ஆதிகால படைப்பாளிகளின் துதிப் பாடிக் கொண்டுத் திரிவதை விட வேறொன்றும் செய்ய முடியாது என்பது தான் உண்மை.
இணையம் மூலமாக எமக்கு எழுதக் கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்பத்தை முறையாக, நேர்த்தியாக பயன்படுத்த வேண்டியது நமது கடமையல்லவா?
காதல் ஒன்றும் தப்பான விடயம் இல்லையே...அந்த காதலை இன்னும் அழகுப் படுத்துவதோடு இலக்கியத்தையும் மெருகூட்ட நாம் முன்வரலாமே?
ஒன்றைச் சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது..
இன்று ஒரு சிலர் எழுதும் காதல் கவிதைகள் தான் குறித்த காதலுக்கு எமனாக மாறிவிடுகிறது. இதை இல்லை என்று சொல்லுவீர்களா?
ஆகக் குறைந்தது நாம் காதலிக்கும் காதலியோ, காதலனோ கூட அங்கிகரிக்காத இது போன்ற படைப்புகளை நாம் எழுதி என்ன செய்து விடப் போகிறோம்? இது தேவை தானா? இலக்கியத்தை காப்பாற்றுவது இரண்டாம் விடயமாக விட்டுவிட்டு நமது காதலைக் காப்பாற்றிக் கொள்ளவாவது இது போன்ற படைப்புகளைச் செய்யாமல் இருக்கலாம் அல்லவா ?
மேலும் இன்று காதல் கவிதை என்றால் அது காமத்தை முன்னிலைப் படுத்தி அங்கங்களையும் உறுப்புகளையும் பற்றி வர்ணிப்பதும், அலங்கரிப்பதும் தான் என்ற விடயம் மேலோங்கி வருவது கண்கூடு. இதன் மூலம் தமிழும் தமிழர்களும் உலக அரங்கில் முகம் சுளிக்க வைக்கும் ஒரு நிலைக்கு வந்து விட்டோம் என்பதை பற்றி தெளிவாக அடுத்த பாகத்தில் பேசுகிறேன்.