கல்மாடத்து காதல் வாசம்

(இது கவிக்கான படமல்ல ,படத்திற்கான என் கவியின் தேடல் )
கல்மாடத்து காதல் வாசம்
--------------------------------------
வாடைக்காற்றின்
வசந்தங்கள் எனைச்சூழ்ந்திருக்க
அவன் நினைவுகளின் சாரல் தந்த
ஞாபகச்சூட்டின் வெப்பமதில்
நான் குளிர்காய்ந்திருந்த பொழுதது...
விரகத்தின் தூப கீதம்
விரசத்தில் விம்முயிர்த்து
விண்ணுயர மெல்லெழுந்து
எண்ணத்தில் உள்நுழைந்து
என்னுயிர் செல்களையெல்லாம்
தன்னுயிர் தேடுமாறு செய்த
அந்திமக் காலத்தைச் சார்ந்த
முந்திவந்த சாமப்பொழுதது...
பெண்மையின் நளினத்தையெல்லாம்
வெட்கமற்ற உன்பார்வையால்
கொத்தித் தின்றும்
கொஞ்சமும் அகலாத
உன் காந்தக் கண்வீச்சில்
என் உயிர்மூச்செல்லாம்
விக்கித் தடுமாறி ...விம்மித் தவித்து
விடைபெறும் தருணங்களை
எந்த சுரங்களில்
எப்படி நான் பாட ...
அவனருகிலிருந்த நாட்களில்
அவன் சுவாசசூடுபட்டு
சாமத்து வாடைக்காற்றெல்லாம்
சட்டெனமாறி வீறுகொண்டு
சுவாசத்தின் மூச்சுவழி
சூடேறி ...சூடேற்றி ..
தன்னிலைமாறி கூத்தாட ...
கல்மாடத்து முதல்சந்திப்பில்
கண்கள் சந்தித்து மீண்ட
கணநேரத்து நினைவுகளில்
கரைந்து போகிறேன்
மெல்ல ...மெல்ல ...
என்னை உன்னுள் தொலைத்தவாறு ...
ஒரு கோடி சூரியசூட்டின் வெப்பமதை
உயிர்வரை உள்வாங்கி
உன்விழிவழி என்னுள் பாய்ச்சி
பஞ்சையொத்த எந்தன்
நெஞ்சத்து நினைவுகளையெல்லாம்
தீ மூட்டி குளிர் காய்ந்தாயல்லவா
நீ ... அன்று ?
சிறு உயிரென்ற
சிறிதும் இரக்கமின்றி
என் தாவணிப்பருவத்து கனவுகளிலெல்லாம்
நீ ...நுழைந்து
என்னுளுன்னை வியாபித்து
கிளைபரப்பி பூத்துக்குலுங்கும்
மகிழம்பூக்களின் மணங்களாய்
மங்கையென் மனதினுள்
மலர்ந்து நின்றாயன்று...
ஒரு மழைதேசத்து சாரலாய்
ஓயாது என்னுள் நீ பொழிந்தும்
வெப்பத்தின் தீ மூட்டலை
சப்தமின்றி எவ்வாறு
எப்போதும் என்னுள்ளே
உட்கூடுவரை உசுப்பிவிட்டு
உட்கார்ந்து கொள்கிறாயென்று
நானறியவில்லையடா...இறுதிவரை
அந்த கனவு தேசத்தின்
காட்சிகளுக்கீடாக ...நீ
அன்று தந்துவிட்டுப்போன
சுகங்களின் சூடேற்றத்தினை
நாம் சந்தித்த
கல்மாடத்து தூண்களில்
நாம் புதைத்துவிட்டா
சென்றோமென்று
செயல்மறந்து தேடித்திரிகின்றேன்
நீயில்லாத பொழுதுகளில் ...
தூரதேசத்து புள்ளிகளெல்லாம்
உந்தன் சாயல்பட்ட
பிம்பங்களென
மனம் மறுதலித்து
மறு உயிர்தேடி ...
எனை மீட்க ...நீ
எப்போது வருவாயென
காத்திருக்கிறேன் ...அந்த
கல்மாடத்து காதல் வாசம் சுமந்து ?
---------------------------------------------------
( இக்கவி எழுத எனக்கு தூண்டுதலாகி ,என் கவிகளுடன் எப்போதும் பயணிக்கும் அன்பு நண்பர் ஜின்னாவிற்கும், முகநூலில் இருந்து அருமையான படம் தந்து கவி வரைய தூண்டிய நண்பர் சரவணாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் )
அன்புகளுடன்
குமரேசன் கிருஷ்ணன்