தேன்மொழி - 05 - இராஜ்குமார்

தேன்மொழி - 05 - இராஜ்குமார்
=============================

குமரன் அந்த பையனின் கண்களை பார்க்காமல் ...கையை தான் பார்த்தான் ...பார்த்து கொண்டே இருந்தான் .. ..அந்த பையன் யாரோ ? ...ஏன் அழனும் ...?....அவனது கைக்கு என்ன ?....அதனால் என்ன ...?
இவன் ஏன் வச்ச கண் வாங்காம பாக்குறான் ..?

இன்று தானே பள்ளியில் சேர்க்க போகிறார்கள் அதான் இந்த அழுகை அந்த இரண்டு பசங்களுக்கும் ..அதில் ஒருவன் கையில் இரண்டு கவர் வைத்து இருந்தான் ..அதை தான் குமரன் பார்கிறான் ..கவர் முழுக்க " தேன் மிட்டாய் "..குமரனுக்கு மிகவும் பிடித்த ஒன்று ..அனைவருக்கும் மிட்டாய் தரும் போது, குமரன் மட்டும் இரு மடங்காய் எடுத்து கொண்டான் ..

தேன்மிட்டாய் தந்தவன் நாள் முழுக்க அழுதான் ..அழுதவன் பெயர் "அமுதன் "...அவனுடன் குமரன் பேச ஆரம்பித்தான் ..குமரனின் நட்பு வட்டம் கூடியது ....மழலைகளின் விளையாட்டு தனி ரசனை மிக்கது ...இவர்களும் அப்படிதான் ...ஒரு இலை பறித்து அதில் எத்தனை நரம்புகள் உள்ளது என அறியும் ஆவலில் ஆரம்பித்து .. நடக்கும் போது நிலா ஏன் கூடவே வருது என்ற கேள்வியில் முடியும்..

மண் துகளை கால் நகத்தால் கீறி ஓவியம் வரையும் பழக்கம்....களி மண்ணை ஈரத்தோடு எடுத்து நினைத்தை செய்து பார்க்கும் ஆசை ..நெற்பயிரோடு துள்ளி திரியும் தும்பியை சிறுநூலில் கட்டி விட்டு பிடிக்கும் விரல்கள் ...பரங்கி மரத்தின் குழலை ஒடித்து வாய்க்கால் நீரை வழிமறித்து அணைகட்டி குழல் வழி நீர் அனுப்பிய திறமை ...ஊனாங்க் கொடியை நீளமாய் எடுத்து இடுப்பில் கட்டி ரயில் ஓட்டிய வேகம் ..மரத்தில் ஏறி தாவி குதித்து பிடிக்கும் குரங்குதனம் ...புங்க மர நிழலில் சிறு பூங்கா அமைத்த புலமை ...சின்ன சிறு கல்லுக்கு பூ வைத்து மாலை கட்டி கோவிலாக்கிய பக்தி ...

மண்ணுக்குள் மறைத்து வைக்கும் குச்சியை கண்டுபிடிக்கும் கண்கள் ...தூரம் ஓடிய பலரை தீண்டி பிடிக்கும் விரல்கள் ...கண்மூடிய சில நொடியில் பல இடத்தில் ஓடி ஒளிந்த சிலரை விரட்டி பிடிக்கும் விழிகள் ...என்றோ யாரோ கொடுக்கும் பொற்காசை உண்டியலில் சேர்த்து வைத்த சிக்கனம் ..பூவில் புதைந்த பொன்வண்டை சிறு பெட்டிக்குள் சிறைபிடித்த வீரம் ...ஏதோ ஒரு அட்டையை நூலில் கட்டி பறக்க விட்ட பட்டம் ....வரப்பில் வழுக்காமல் நடக்க மழையில் கட்டிய பந்தயம் ...

இப்படி சின்னஞ்சிறு விளையாட்டுடன் குமரனின் நாட்கள் நகர்ந்தன ...இரண்டாம் வகுப்பில் நுழைந்தான் ...வகுப்பில் மழலை மனங்கள் படிப்பதை ஆழமாய் உள்வாங்க ஆரம்பமாகும் தருணம் ...அதே ஆசிரியர் மாதையன் அவர்கள் ஒரு தேர்வு வைத்தார் கணக்கு பாடத்தில் ...காலை நேரம் ..அனைவரும் எழுந்து நின்று கேள்விகளை எழுதி கொண்டனர் ..பின்பு நின்று கொண்டே பதில் எழுதும் நொடிகளில் ..ஆசிரியர் ..

"பசங்களா யாரும் ..யாரையும் பாத்து எழுத கூடாது ..கேட்டும் எழுத கூடாது ..அப்படி யாரவது எழுதுனா ...பதில சொல்லி கொடுத்தா ...அடி தான் விழும் ....ம்ம் ம்ம் ..எழுதி முடிங்க "

"சரிங்க அய்யா " ....என சொல்லி கொண்டே எழுதி கொண்டு இருந்தனர் அனைவரும் ....

குமரனின் அருகில் நின்ற தமிழரசன் என்ற மாணவன் ....

"இஸ்... இஸ் ....இஸ் ...இங்க கொஞ்சம் காமிடா "

குமரன் மெல்ல அவன் பதில் எழுதியிருந்த இலையை காட்டினான் ...

தமிழரசன் வேக வேகமாய் பார்த்து எழுதி கொண்டிருக்க ..குமரன் பயந்து நின்றான் ..உடல் அசைவின்றி போனது ..குமரனின் விழி முன் ஆசிரியர் அமைதியாய்....

" நா என்னடா சொன்னேன் ...ரெண்டு பேரும் என்னடா செய்றீங்க "

"அய்யா ...அது வந்து ...இவன் ...இல்ல ..நா "

" என்னடா அது வந்து இது வந்துன்னு ...நீட்டுடா கைய "

"...ஸ்ஸ் ..ப்ப்ப்ப்பா ..."

"நீ என்னடா முழிக்குற...நீட்டுடா .."

"... ஸ்... ஸ் ..ம்ம்மா ..."

குமரன் ..தமிழரசன் இருவரும் அடி வாங்கி நின்றனர் ...

குமரன் அழவே ஆரம்பித்தான் ...தேம்பி தேம்பி அழுதான் ...ஏன் அடி வாங்கினோம் என எண்ணியே அழுதான் ...அன்று தான் அவனுக்கு முதல் அடி ...மனம் முழுதாய் வலித்தது ..அவனுக்கு புது எண்ணத்தை கொடுத்தது ..இனி இப்படி செய்யவே கூடாது என முடிவெடுத்தான் ...

மாலை நேரம் வீட்டிற்கு சென்றான் ...வீட்டிற்க்குள் அந்த வெள்ளை பையை வீசிவிட்டு வேகமாய் சென்றான் ..வழக்கம் போல் வரப்பில் அமர்ந்தான் ...கடந்த ஒரு வருடமாய் அவனின் மாலை நேர இடம் இதுதான் ...அவனது பார்வை ரசித்து கொண்டிருந்தது என்பதை விட எதையோ உள்வாங்கி கொண்டிருந்தது ...அந்த இடத்தில் தினமும் சிலர் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம் ..அதை பார்க்கவே இவன் இந்த வரப்பில் அமர்க்கிறான் ..

இன்று குமரன் வரப்பில் அமர்ந்து ஒரு நான்கு நிமிடம் முடியும் கணத்தில் ...ஒரு குரல் கொஞ்சம் தூரத்திலிருந்து ..

" டேய் ...குமரா ..இங்க வா "

"என்ன னா ..சொல்லுங்க " வேகமாய் வந்து நின்றான் குமரன் அந்த குரல் பேசிய முகத்திற்கும் முன் ...

குமரனை அழைத்தவர் " ராஜேந்திரன் "....22 வயதான வாலிபர் ...படித்தவர் ...விவசாயம் பார்க்கணும் என்ற ஆசையில் வீட்டிலே இருந்து மாலையில் விளையாடும் இளைஞர் ..."வெள்ளாம பார்க்கணும் ..அத நாம தான் செய்யணும் ..நம்மள விட்டா வேறு யாரு செய்வா " என்ற உணர்வில் வாழும் பசுமை விரும்பி ...தமிழ் பட்டதாரி ...

" உன்னால விளையாட முடியுமா "

"நா விளையாட தான்னா இங்க வரேன் ..நீங்க தான் சேத்திகிறதில்ல "

"டேய் ..என்னடா ,,,இப்படி சொல்ற ..நீ சின்ன பையன் விளையாட மாட்டேன்னு தான் நாங்க சேத்திக்கல ...சரி ...இன்னிக்கு ஆளு இல்ல .கொஞ்ச பேர் தான் இருக்கோம் ...நீ வா ..வந்து விளையாடு .."

"ம்ம்ம் ....ம்ம்ம் " .....என சொல்லும் போதே அவனது ஆர்வம் முகத்தில் சதமடித்தது ...

நிறைய வரைமுறைக்குள் அடங்கி நின்றது அந்த கிரிக்கெட் ...வயல்களின் வரப்புகள் எல்லை கோடுகள் ..புழுதி ஒன்றில் ஒருபுறம் மூன்று குச்சியும் ..மறுபுறம் ஒரு கருங்கல்லும் வைக்கப்பட்டிருந்தது ...பந்தை கருங்கல் அருகிலிருந்து ஒருவன் வீச.. மறுபுறம் வீசப்பட்ட பந்தை தென்ன மர மட்டையால் ஒருவன் அடிக்க ...அந்த பந்து புழுதி மண்ணை வானில் தூவி பறக்கும் ...பந்தை துரத்தி பிடிக்கும் வேகம் பாம்பை பார்த்தால் ஓடும் வேகம் ...வரப்பில் பாதம் தவறி கீழே விழுந்தாலும் வீர தழும்புதான் ..

அடிப்பட்டு கட்டே போட்டாலும் அடுத்த நாள் அவசியம் வந்து விடுவர் கிரிக்கெட் ஆட ...அழுத்தம்... கோபம் ...சிரிப்பு ...துரத்தல் ...என எல்லா உணர்வும் மூன்று குச்சிக்கு முன் வீழ்ந்து கிடக்கும் ..கருங்கல்லை குறி பார்க்கும் கண்கள் ...குச்சியை வீழ்த்தவே வீசப்படும் பந்துகள் ...வீசிய பந்தை வரப்பு நோக்கி துரத்த துடிக்கும் மட்டை ...வெற்றி தோல்வி எதற்கும் பரிசு கிடையாது ....மகிழ்ச்சிக்கு மட்டுமே விளையாடும் மனங்கள் இவை ..சில சமயம் மட்டையால் துரத்தப்பட்ட பந்து கரும்பு தோட்டம் , முள் புதர் , கிணறு என எங்கு விழுந்தாலும் தேடி பிடித்து... மீண்டும் விளையாடும் குணம் இவர்களிடம் ..பாம்பு புற்றுக்குள் பந்து விழுந்தாலும் அசராது எடுக்க துடிக்கும் உயர் உள்ளமே இவர்கள் ..

இப்படி விளையாடும் ஒரு கூட்டத்தில் குமரன் சேரும் போது சிறுவன் ....தினமும் விளையாட செல்வான் ..பள்ளி விட்டு வந்ததும் இங்கே தான் ...இப்போதெல்லாம் தனியே அமர்வதில்லை ...விளையாட்டில் இவனும் ஒருவன் ....பகலில் விளையாடுவான் ...சில சமயம் இரவில் இரு நிலவின் ஒளியில் விளையாடுவது குமரனுக்கு மிக பிடிக்கும் ...சந்தோசமாய் நாட்கள் சென்றாலும், .. தான் நீச்சல் கற்று கொள்ள வேண்டும் என்ற பழைய நினைவு இவனை எப்போதும் இழுத்து கொண்டே இருந்தது ..

மூன்றாம் வகுப்பில் இவனின் பாதம் பதிந்தது ....ஆனால் அந்த வெள்ளை பை மட்டும் இன்னும் இவனிடம் ..பையை மாற்ற நினைப்பான் ஆனால் முடியாமல் போகும் ..மனதை தேற்றிக் கொண்டே பள்ளி வருவான் ..வந்ததும் நண்பர்களுடன் மீண்டும் விளையாட்டு தான் ....ஒரு மாங் கொட்டையை கை பொருளாய் வைத்து ...பெரிய சதுரத்தை நான்காய் பிரித்து ..நடுவில் ஓர் வட்டம் வைத்து ..அதில் விளையாடும் லாவகம் அனைவருக்கும் பிடிக்கும் ..மாங் கொட்டையை பிரித்த கட்டத்தில் வீச வேண்டும்... பின் ஒரு காலில் நொண்டி கொண்டே ஒரே தாவலில் அக்கொட்டையை மிதிக்க வேண்டும் ..சளைக்காமல் பள்ளியில் உள்ள அனைவரும் விளையாடும் விளையாட்டு இதுவே ...

குமரன் ..அமுதன் ...இன்னும் இவர்களின் நண்பர்களுடன் விளையாடும் போது ...ஒரு மாணவன் குமரனிடம் வந்து ...

"டேய் ..குமரா ..உன்ன " பழனி "அய்யாங்க வர சொன்னங்க "

"எதுக்குடா .."

"தெரில டா ....இப்பவே வர சொன்னங்க.. "

குமரன் வேகமாய் சென்று தனது வகுப்பாசிரியர் பழனி முன் நின்றான் ...
ஆசிரியர் பக்கத்தில் ஒன்னொரு மாணவன் நின்றான் ....

"..அய்யா..நீங்க வர சொன்னீங்கனு தமிழு வந்து சொன்னான் ...."

"ஆமா டா ..நா தான் வர சொன்னேன் ....நீ நல்லா படிக்கிற ....இவன் மட்டும் ஏண்டா ஒழுங்கா படிக்க மாட்டேங்குறான் ...நீ இவனக்கு தினமும் சொல்லித்தாடா "

"அய்யா ..அது வந்து ...." என குமரன் சொல்லும் போதே ...

ஆசிரியர் அருகில் நின்ற மாணவன் ...

"இவன் சொல்லி தந்து நா ஒன்னும் படிக்க தேவையில ...எனக்கு வரத நா படிக்குறேன் ..அதுக்கு மேல
எதும் வேணா ,,,,எவனும் சொல்லி தர வேணா "

என சொல்லி விட்டு குமரனை பார்வையால் அறைந்தான் ...

குமரன் தலை குனிந்தே நின்றான் ...

அந்த மாணவனின் பேச்சு ஆசிரியரை திணற வைத்தது ..அவனின் பார்வை ..கோபம் ...வார்த்தையின் ஆழம் எல்லாம் வெறுப்பின் விளிம்பில் நின்றது ..அவனது முகம் இன்னொரு முகத்தை குமரனின் விழிக்குள் காட்டியது ...

இந்த மாணவன் ஏன் குமரன் மேல் இவ்வளவு கோபம் கொள்கிறான் ?
...காரணம் என்ன ..?


..................தொடரும் ..........................

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (30-Nov-14, 1:32 pm)
பார்வை : 448

மேலே