சென்னையும் சென்னை நிமித்தமும் - 1

"அரவிந்த் .. உங்கள தேடி ஆஷான்னு ஒருத்தங்க வந்திருக்காங்க .பேசறீங்களா ? " என்று தங்கள் குடும்பத்தின் சென்னை வீட்டில் வாடகை இருக்கும் வினோத்தின் ஃபோன் வந்த போது நடந்து கொண்டிருந்தத அரவிந்த் அப்படியே நின்று விட்டான் .கொடுங்க என்று கூட சொல்ல தோன்ற வில்லை . அடுத்த இரண்டாவது நொடி ஆஷா பேசினாள்.
அதே குரல் . ஆனால் குரலில் கொஞ்சம் பக்குவம் கூடி இருந்தது .

" ஏ நான் ஆஷா பேசறேன் " என்று பேசிக்கொண்டே இருந்தாள்.'பெண்களுக்கு மட்டும் எத்தனை வருடங்கள் கழித்தும் இயல்பாக எப்படி பேச முடிகிறது ?'
"ஓஹ் .. நீ ஹைதராபாத் போயிட்டியா.சரி நாளை காலை நானும் , என் மக ஓவியாவும் அங்கு இருப்போம் . ஏர்போர்ட் வந்துடு ப்ளீஸ் . நான் என் போன் நம்பர உனக்கு எஸ்எம்எஸ் பண்றேன் " என வைத்து விட்டாள்.

இன்று ஞாயிறு ஆதலால் அரவிந்த் கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்திரூந்தான் .எப்போதும் ஆறு மணிக்கு தொடங்கி விடும் வாக்கிங் இன்று எட்டு மணிக்குத்தான் கூடியது .வீட்டின் பக்கத்தில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான ஒரு பெரிய பூங்கா ஒன்றில் நடப்பது அவனுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று .அதுவும் அவனுடைய ஆப்பிளில் இருந்து ஒரு இளையராஜவையோ அல்லது பில் காலின்சையோ காதுகளில் ஊற்றிக் கொண்டே நடந்தால் அவர்கள் அவன் சென்னை வரலாறை ஒவ்வொரு பக்கமாக நினைவூட்டிக் கொண்டே அவன் நடையை இலகுவாக்குவார்கள் .. சில சமயம் சுமையும் ஆக்குவார்கள் .

இப்போது இன்றைய ஆஷாவின் அழைப்பு சரியான விகிதத்தில் அதைத்தான் செய்திருந்தது.

ஆஷா ? ... உங்களில் சிலர் யூகிப்பது போல் அவள் அரவிந்தின் முன்னாள் காதலி அல்ல .இருவரும் சென்னையில் ஒன்றாக ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள் .அரவிந்த் அப்போது சேல்ஸ் மேனஜர்...
ஆஷா அவனுக்கு கொட்டேஷன்ஸ் டைப் செய்யும் , கஸ்டமர்களுக்கு ஃபோன் செய்து சந்திப்புக்கான நேரம் வாங்கும் , இன்ன பிற மேசை அலுவல்களை அவனுக்கு செய்து கொண்டிருந்த சேல்ஸ் கோ-ஆர்டினேட்டர் ( விற்பனை ஒருங்கிணைப்பாளர்).

அரவிந்த்தான் ஆஷாவை நேர்முக தேர்வு செய்தவன் .ஒரு பூப்போட்ட சுடிதாரில் வந்திருந்தாள்.கையில் ஒரு வாக்மேன் இருந்தது .பயோ-டாடா கொடுங்கள் என்ற போது ஏற்கனவே உங்க கம்பெனிக்கு அனுப்பி விட்டேனே என்றாள் . கொஞ்சம் கூட பணிக்கான நேர்காணலுக்கு வந்த மாதிரி தெரியவில்லை . இருப்பினும் உரையாடல் முடிந்த பொது அவனுக்கு அவளிடம் என்னவோ பிடித்திருந்தது .அவளிடம் காணப்படும் ஒரு ஆர்வம் , பேச்சில் தெரிந்த ஒரு தைரியம் , உலக அறிவு ஏதோ ஒன்றோ அல்லது எல்லாமுமோ.அதனால் அவள் கேட்ட சம்பளம் அதிகமாக இருந்த போதிலும் அவன் நிர்வாகத்துக்கு கொடுக்கலாம் என பரிந்துரைத்தான்.

முதல் நாள் வேலைக்கு அவள் வந்த விதம் அவனுக்கு இன்னும் வியப்பாக இருந்தது . அணிந்திருந்த பட்டு புடவை , மல்லிப் பூ , ஆபரண அலங்காரம் எல்லாம் ஒரு கல்யாணத்துக்கு வந்தது போன்று இருந்தது . அவன் வாய் திறக்கும் முன் அவள் சொன்னாள் " மொத நாள் இல்லியா ..அதான் கோயிலுக்கு போயிட்டு வந்தேன் . பிரசாதம் எடுத்துக்குங்கோ " என்று கையில் கொடுத்த போது ...அவன் பிரெஞ்சு தாடி , அவன் கட்டி இருந்த டை எல்லாவற்றையும் மீறி அவன் வைத்துக் கொண்ட குங்குமம் ...ஆஷாவின் கோலத்தை விட வினோதமாக இருந்தது அவன் அலுவலக சகாக்களுக்கு .

மதிய சாப்பாட்டின் போது தன் டிபன் பாக்ஸில் இருந்து சில முறுக்குகளை எடுத்து கூட இருப்பவர்களுக்கு கொடுத்தாள்.எனக்கு சாப்பாடு கூடவே எப்பவும் நொறுக்குத் தீனி இருக்க வேண்டும் என கூறிக்கொண்டாள் .
" சார் உங்களுக்கு ஃபோன் வந்து இருக்கு . உங்க வைப் லைன்ல இருக்காங்க " என்று அரவிந்தை ஆபீஸ் பாய் அழைக்க .அவன் எழுந்து நடந்தபோது " இஸ் ஹி மேரிட்? " என்று அவள் பக்கத்து பெண்ணை கேட்ட கேள்வி அரவிந்துக்கும் கேட்டது.

கொஞ்ச நாளிலேயே ஆஷா தன்னை நன்கு நிலை நிறுத்திக் கொண்டாள் அலுவலகத்தில்.அரவிந்தின் அத்தனை எழுத்து அலுவல்களையும் அவள் பார்த்துக் கொண்டாள் .அரவிந்த் அடிக்கடி சொல்வான் ஒரு சேல்ஸ்மேன் எப்போதும் வெளியே பீல்டில் இருக்க வேண்டும் .அது சேல்ஸ் கோ-ஆர்டினேடர்.கைகளில்தான் இருக்கிறது .அவர்கள் அலுவலக பேப்பர் வொர்க்ஸ் முழுவதையும் பார்த்துக்கொள்ள வேண்டும் .அப்போதுதான் விற்பனை , வியாபாரம் முன்னேறும் என்பான்

.தீடிரென ஒரு நாள் ஆஷாவை அழைத்தான் .ஆஷா இன்னிக்கி ஒரு பெரிய ஆர்டர் எடுக்கப் போறேன் .நீயும் வரனும் . கஸ்டமர் சந்திப்பிலேயே நிறைய குறிப்புகள் எடுக்க வேண்டுமென அவளை கிளம்ப சொன்னான்.
" எப்படி போறோம் குரு "
" முதல்ல என்ன குருன்னு கூப்புடறத நிறுத்து "
" சரி .. சொல்லுங்க பாஸ் "
" எம்டி கார் அனுப்பி இருக்கார் ..அதுலதான் "
ஓகே . ப்ளீஸ் கிவ் மீ பிவ் மினிட்ஸ் என்று சென்றவள் காரில் ஏறிய போது கொஞ்சம் உதடு சிவத்தும் , வாசனையோடும் தெரிந்தாள் .

" அண்ணே .. அரும்பாக்கம் போங்க அண்ணே" என அரவிந்த் கார் டிரைவர் மணிக்கு சொல்ல வண்டி கிளம்பியது . மணி தன் பாக்கெட் ட்ரான்சிஸ்டரை திருகியபடியே சரிங்க தம்பி என்றார் .
குறுக்கு சிறுத்தவளே ஓடியது.
" நைஸ் சாங்க் " என்றான் .
" எனக்கு முதல்வன்ல உப்பு கருவாடுதான் பிடிக்கும் குரு ...ஓஹ் சாரி ...பாஸ் " என்றாள் அவள் .
" ஏன்?? .. அதுக்கு முன்னாடி ஒன்னு . நீ என்ன குருன்னே கூப்பிட்டு தொலை . இந்த பாஸ்ன்றது என்ன இன்னும் கேவலப் படுத்துது "
" சரிங்க பாஸ் .. ஓஹ் சாரி .. குரு.!" என்று அவள் தொடர்ந்த போது எப்போதும் ரகுவரன் ஸ்டைலில் சீரியஸ் ஆக இருக்கும் மணி அண்ணனே சிரித்து கொண்டார் .

" நீங்க ஒன்னு நோட் பண்ணிங்களா . இந்த வைரமுத்து ராஜாவுக்கு எழுதினப்போ பாமரார்களுக்கு எழுதிகிட்டு இருந்தார் . இப்ப ரஹ்மான் வந்த பிறகு இவர் பாடல்கள் எல்லாமே அறிவுஜீவிகள் மட்டுமே ரசிக்க கூடியவையாக இருக்கு . பட் உப்பு கருவாடு இஸ் என் எக்சப்ஷன் . அதனால எனக்கு அந்த பாட்டு புடிக்கும் " ....ஆஷா முடிக்க அரவிந்த் கொஞ்சம் ஆடித்தான் போனான் .அண்ணா வளைவை மாருதி எஸ்டீம் கடந்து கொண்டிருந்தது .
" சரி... நாம கொஞ்சம் போற இடத்துல என்னென்ன பேசனும்னு முடிவு பண்ணலாமா.?! .ஏன்னா நாம இப்ப பாக்க போறது ஒரு கஸ்டமர .வைரமுத்துவ இல்ல " என சிரித்துக்கொண்டே அரவிந்த் கோப்புகளை பிரித்து பேச தொடங்கினான் .

சென்றார்கள் . அந்த பெரிய ஆர்டரை எடுத்தார்கள் . கம்பெனி நிர்வாகியின் பாராட்டை பெற்றார்கள்.பிறகு அரவிந்த் சில சிறிய ஆர்டர்களை ஆஷாவையே போய் எடுக்க சொன்னான் . என்ன பேச வேண்டும் , என்ன பேசக் கூடாது கற்றுக் கொடுத்தான் .என்ன கேள்விகள் கேட்பார்கள் . என்ன விடைகள் எல்லாமே சொல்லிக் கொடுத்தான் .
கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால்... எனக்கு தெரியாது , என் சீனியர் சகாக்களிடம் தெரிந்து சொல்கிறேன் என சொல்லவும் சொன்னான் . எல்லாம் தெரிந்தவன் எவனும் இல்லை .. கற்றலே வாழ்வின் பயணக் குறிக்கோள் என அவளுக்கு தெரிவித்தான் .

நாட்கள் கடகட என்று ஓடி இருந்தது . ஆஷா அரவிந்தை குரு , பாஸ் என்றெல்லாம் கூப்பிடுவதை விட்டிருந்தாள். அரவிந்த் என்றே அழைத்தாள் .மறுபடியும் அதே பட்டு புடவை , வேறு மல்லிப் பூவோடு ஆஷா வந்திருந்தாள் . இன்னியோட நான் ஆபீஸ்ல சேந்து ஒரு வருஷம் ஆகுது .கோயில் பிரசாதம் எடுத்துக்கோ அரவிந்த் என்ற போது அரவிந்த் கையில் குங்குமம் எடுத்த படியே கேட்டான். " பார்ட்டி எதுவும் இல்லையா ?"

"ஐயோ சாமி .. நீ சவேரால சரக்கு கேப்ப . அங்கெல்லாம் என்னால வர முடியாது . மத்தியானம் சேம்கோவுல லஞ்ச் வேண்ணா வாங்கி தரேன் " என்று அரவிந்திடம் கூறிவிட்டு
.... ஃபேக்ஸ் மெஷினில் காகித சுருளை பொருத்திக் கொண்டே வந்த மற்றொரு ஃபோனில் ரகசிய குரலில் பேச தொடங்கி இருந்தாள் .இம்மாதிரி நடப்பதை அரவிந்த் அவ்வப்போது பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்.
மதியம் லஞ்ச பார்ட்டி முடிந்து பில் கொடுக்கும் போது எல்லோரும் வெளியே சென்ற நேரம் கேட்டேவிட்டான் .

" நீ யாரையாவது லவ் பண்றியா "

என்னாடா இது,பல கேள்விகளுக்கு பதில் தந்தவன் இப்படிக் கேட்கிறானே.! அதுவும் விவஸ்தை இல்லாமல் இவ்வளவு நேரடியாக,என்று யோசித்தாளோ என்னவோ.? பேசாமலேயே வந்தாள் .
வெளியே வந்து தன் புதிய கைனடிக் ஹோன்டாவை எடுத்து அழுத்தினாள்.அவன் பின்னால் உட்கார.,கண்ணாடியில் அவனிடம்...

" யெஸ் , ஐ அம் " என்றாள்.

...தொடரும் .
(இன்னும் ஒரு பாகம்தான் .)
படம் - சமீபத்தில் மறைந்த நம் மாபெரும் கலைஞன் மாண்டலின் ஸ்ரீநிவாஸ். ஆந்திராவில் பிறந்தவன் . தமிழனாகவே மரித்தவன் .

எழுதியவர் : ராம்வசந்த் (30-Nov-14, 6:48 pm)
பார்வை : 250

மேலே