நியந்தாவின் இரவு

பனி விரட்டும் இரவை கடந்திருக்கிறீர்களா?......

மழை விரட்டி, வெயில் விரட்டி ஓடுவது போல பனி விரட்டி ஓடிவிட முடியாது..... அது இப்பக்கமிருந்து வருவது போல தெரியும்.. அப்பக்கமிருந்தும் வந்து விடும் மாய வித்தைகளின் பரவலாய்....அப்படி அப்படியே .... பார்க்க பார்க்க... கண்கள் சுழன்று நிற்கும் இடத்தில் .... காட்சி வெள்ளையாகி, சூழ்ந்திருக்கும்...........கணங்களில் வானம் பூமி இணைக்கும்.... மாய தத்துவம் அது.....சொல் வார்த்தையாகி, வார்த்தை.. வாக்கியமாகி... பாடு பொருள் இதுவென தீர்மானிக்கும் கவிதைப் பிரசவத்தைப் போல, அது ஒரு மூடு மந்திரம் விதைக்கும்.....

இதய நரம்புகளின் இளகிய, குறுகிய இடைவெளியில் சீறிப் பாயும் புது ரத்தம் சற்று நின்று தலை தூக்கிப் பார்க்கும்.. பனிகளின் பதுங்கல்.... அதிகாலை புலியின் உறுமலாய்... ஆழ் மனத்தில் அக்கினி விதைக்கும்.....அப்படி ஒரு அக்கினித் தூறல்.. பனிப் போர்வை.... பாதாளம் எதுவென கேட்கும்... இதுவென வரும் சந்தேகத் தாழ் திறந்த சல சலப்பை... ஆக்கிரமிக்கத் தொடங்கிய இரவில், நான்.... இனி ஓட முடியாமல்.... ஓடத் தெரியாமல்... தலையைச் சுற்றி பார்த்தேன்..... தலையே சுற்றியது.... பார்வையும் இருட்டியது....

மை விழி மயங்கிச் சரிய... மானுடக் கதைகள் புரிய.... பாம்பின் காலோடு... வெற்றிட புள்ளி சற்று விரிய... நான் ஒரு கிணற்றுக்குள் தவழத் தொடங்கினேன்..........என் உடல், ரப்பர் குழாய்க்குள்.... நெளிந்து நெளிந்து.. ஒரு பாம்பைப் போல...நீந்திக் கொண்டே, ஒரு இடைவெளியை நிரப்பிக் கொண்டே கடந்து கொண்டிருந்தது....... காற்றின் வேகம்.... வெளிச்ச தாகம்... இனம் புரியாத... வெற்றிட சூடு.... பனிகளின் பற்கள்.........இரைச்சலற்ற தனிமையில் வெடித்து விடும் காதுச் சவ்வின்... அகலம்.. இன்னும் இன்னும்.... மூச்சடைத்து விழச் செய்தன....

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அல்ல... கை விட்டுப் போன உயிரைப் பிடித்து விடும் நோக்கில்தான்.. நான் நீந்தினேன்..... நீச்சல் என்பதை நீரின்றி செய்தலில் காற்றாகி ... இன்னும் இன்னும் இலகுவானேன்.. எனை நகர்த்தி செல்லும் நீண்ட உருளை, எனைக் கடக்க வைத்து கடக்க வைத்து சுருங்கிக் கொண்டே என் பின்னால் புள்ளியாகி வருவதை உணர்ந்தபடியே.... நான் எடை இழக்கத் தொடங்கினேன்.....

செரிக்க முடியாத மலைப் பாம்பு, நீண்ட முயற்சிக்குப் பின் "சீ போ...." என துப்பி வெளியே தள்ளுவது போல... அந்த நீள உருளையில் இருந்து வெளியே வந்து விழுந்தேன்....

இன்னும் தீரவில்லை... பனி மூட்டம்..... தீர்க்கவில்லை..... மன ஓட்டம்....

வெள்ளை தேசத்து உணவாய் மட்டும் நான் என்னை அடையாள படுத்திக் கொள்ள வேண்டுமோ.....! எனக்கு நான் உயிருடன் இருப்பது கூட புரியவில்லை.... அது வேறு ஒரு மண்... வேறோர் உணர்வு... வேறோர் உந்துதல்.. வேறு ஒரு காற்று.....எனது இதயம் துடிப்பதை என்னால் இப்போது நன்றாக உள் வாங்க முடிந்தது....

"பனி சொல்லும் கவிதையோ... இந்த பார்வையின் தேடல்....."- ஆழ் மனக் கதறல் கவிதையாய் தன்னை... ஆசுவாசப் படுத்திக் கொள்ள முயற்சித்தது....

வெற்றிடங்கள் மெல்ல மெல்ல பனியைக் கடக்கத் தொடங்கியது...... என் மனதுக்குள் ஆயிரம் மனங்கள் தவளைகளாகி கத்தத் தொடங்கின... எங்கு இருக்கிறேன்.... ?....இது எந்த இடம்..?.......... நான் எதோ ஒரு வழியாக ஒரு பயணம் செய்து எங்கேயோ வந்திருக்கிறேன்.... அது நன்றாக தெரிகிறது.. ஆனால் எங்கு இருக்கிறேன்,..?........ஏன் இருக்கிறேன்...?........... எதற்கு.....! இது என்ன தேசம்...! இது என்ன காட்சி...? ....எனக்கு... பனி சொன்ன கதைகள் புரியாத போது.. முகம் திருப்பிய பனி மெல்ல மெல்ல கலையத் தொடங்கியது......... மினி மினிப் பூச்சிகள்.... மொய்க்க.... வீதியும்.... வீடுகளும் மெல்ல கண்ணுக்கு தெரியத் தொடங்கின....

எனக்கு முகம் வியர்க்கத் தொடங்கியது..... வியர்த்த முகத்தில் கருப்பு வெள்ளைக் காட்சிகளாய்.... நினைவுகள்... முளைத்தன.... எது நிஜம் எது மாயம் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.. "இதே வீதி.. இதே வீடுகள்.. இதே கட்டடங்கள்......... எல்லாவற்றையும்.. நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன்... முன் ஜென்மத்திலா....?..... நான் இந்த தெருக்களில் ஓடியிருக்கிறேன்.... இதோ இங்கு விளையாடி இருக்கிறேன்.... "

இரவு தன்னை திறந்த மேனியாக்கி இளைப்பாரிக் கிடந்தது....

"இதோ.. இந்த வீடு, என் நண்பன் குட்டியின் வீடு... இதோ இந்த வீடு அபிதாவின் வீடு..... இந்த வீடு.. என் வீடு.... இந்த வீட்டில் நான் வசித்து இருக்கிறேன்...."- எனக்கு நிதானம் எதுவென்றே புலப்படவில்லை.... மாய குழப்பங்களில் சாயும் நிழலென என் கற்பனைகள் இலை பிடித்த எறும்பாகி நீந்தி செல்ல,.. அங்கே ஆறு இல்லாத மணல் பரப்பில்... நாங்கள் சிறுவயதில் கட்டி விளையாடிய மணல் வீடு இடிந்திருந்ததன என்பது போலொரு யோசனை.....

நான் யோசித்துக் கொண்டே, அந்த வீதி முழுக்க ஒரு இரவாக சுற்றி அலைந்தேன்.... வீதியை நிரப்பும் நாய்கள், எனைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை.... எனக்கு இந்த நாயுடன் கூட பழக்கம் இருப்பதை உணர முடிந்தது.......இது பேர் ரோசி....... நாயனக்காரர் வீட்டு நாய்..... எனக்கு சில விஷயங்கள் புரிவது போல, ஒரு மாய யதார்த்தம்... மீண்டும் எனக்குள் பனி விதைத்தது..... விதைக்க, விதைக்க.. என் விழி, கதைக்கும் நினைவுகளில் நான் எடை கொண்ட காற்றாகி.... வீதி நிறைந்து கிடந்தேன்.... எனக்குள் நியந்தாவின் ஞாபகம்...... மெல்ல துளிர் விடத் தொடங்கியது........

நியந்தா......

அவளைப் பற்றிய நினைவுகளை எப்படி நான் மறக்க....மரணித்த பின்னும் மறக்க கூடாது என்பது தானே விதி..... விதி மாற்ற நான் யார்.... அல்லது மாறிய விதியிலும் அவளே இருப்பதை நான் எப்படி மாற்ற..... கற்ற பொருளில் பொருள் முதல் வாதம் தான் நிஜம் என்று சொல்லும் விதியில் கருத்து முதல் வாதக் கொள்கையை வேரோடு விட்டு செல்ல விடுவதில்லை இந்தக் காதல்..... கலவிக்கு பின்.....ஒரு நாளில் நிதானமாக வந்திருக்க வேண்டும் இந்த காதல் என்பது தானே பொருள் முதல் வாதம்... முதலில் செயல்.... பின் தான் சிந்தனை..... என சிந்தனை முழுக்க நிறைந்து நிற்கும் நியந்தாவை எந்த பொருள் முதல் வாதத்தில் சேர்க்க........?

தொடர்பற்ற சிந்தனைச் சோர்வில்.... நான் சித்திரமாகிப் போனேனோ.... சித்த பிரமையாகிப் போனேனோ...?.... காற்றுள்ள காட்சியில் கடைசிப் பொருளும் நானே, என்பது போல ஒரு நிலை, எனக்கு முன்னால் மறைந்து, மறைந்து போய்க் கொண்டிருந்தது.... திக் கென்று சுவரோரம் நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன்..... தலை தூக்கிய நாய் அர்த்தத்தோடு பார்த்து விட்டு தலை கவிழ்ந்து படுத்துக் கொண்டது.... ... இன்னும் முழுதாக விலகாத பனி.... என் உடலையும் உள்ளத்தையும் நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.... .. உள்ளம் முழுக்க, நான் ஒரு கனவுக்குள் இருப்பதாக ஒரு பதற்றம்... எனைத் தொற்றிக் கொள்வதை நான் விரும்புவனாகவே இருந்தேன்.... தைரியம் என்பது... அதீத பயம் என்று பிறந்த கருத்தை, கழுத்தை பிடித்துக் கொல்லத் துணியாமல் கால் பிடித்து இழுத்துக் கொண்டே அந்த நிழலைப் பின் தொடர்ந்தேன் .... அந்த நிழல்.... அங்கும் இங்கும் பார்த்தபடி வேக வேகமாய் மூச்சிரைக்க... இரவைக் கிழித்துக் கொண்டு சென்று பெரிய வீதிக்குள் நுழைந்து ... ஒரு சுவற்றில் சாய்ந்து நின்று மீண்டும் மீண்டும் சுற்றிப் பார்த்தது......... எனக்கு தூக்கி வாரிப் போட்டது...

அந்த முகம்...... அந்த உடல்.. என்னைப் போலவே இருந்தது.... அந்த மூச்சிரைப்பும் எந்தன் மூச்சிரைப்பும் ஒன்று போலவே இருந்தது... இன்னும் இன்னும் தெளிவாய் யோசிக்கும் மன நிலையில் எனக்கு என் உள் மனம் சொல்லும் விளக்கங்கள்.. நிஜமாகவே பட்டது.. இது முழுக்க முழுக்க என் கனவாக இருக்குமோ என்று நான் யோசித்த தருணத்தை.... அல்லது.. ஒரு கற்பனையாக இருக்குமோ என்று உணர்ந்த தருணத்தை.. அல்லது யாரோ ஒருவரின் கதையாக கூட இருக்குமோ என்று நினைத்த தருணத்தை, அந்த முகம் எனக்கு, என்னை கடந்து யோசிக்க வைத்து விட்டது.. எனக்கு ஒரு வழியாக புரியத் தொடங்கியது....... எல்லாம்.....................................

எல்லாம்................................. இன்று நடந்த அனைத்தும், எனக்குள் ஒரு தெளிவை காட்டத் தொடங்கியது.. அது நான் தான்.... எனக்கு முன்னால் நிழல் போல போய்க் கொண்டிருக்கும் அவன், நான் தான்..... அப்போ நான்....? நானும் நான் தான்.... அந்த நிழலும் நான் தான்...! அவன் இப்போது நியந்தாவை பார்க்க போய்க் கொண்டு இருக்கிறான் .. எனக்கு புரிந்து விட்டது.. மனதுக்குள் ஊடுவிய பனியை என்னால் விலக்கி வைக்க முடிந்தது... மூளைக்குள் குத்தும் நினைவு ஊசியல்ல இது.. இது என் முன் ஜென்மக் கதை அல்ல.. இது நிஜம்... அறிவியல் தேடும் உண்மை... சாத்தியக் கூறுகளின் ஒட்டு மொத்தம்.... ஆம்.. அது நானே தான்... எனது 18வது வயதில் நான் தான் அது.....

நான் வார்ம்ஹோல் வழியாக என் கடந்த காலத்துக்குள் வந்திருக்கிறேன்........ எந்தக் கடவுளைக் கூப்பிட... இது சந்தோஷமா.... சங்கடமா...? ஒன்றும் புரியவில்லை.... ஏன் வந்தேன்........?.... அதற்கும் பதில் இல்லை..... இப்போதைக்கு என்னை நான் பின் தொடர வேண்டும்...... அப்போது தான் காரண காரியங்கள் விளங்கும் என்று நான் என்னை பின் தொடந்தேன்......என்னை நானே பார்ப்பது..... எப்படிப் பட்ட அனுபவம்..
அதை விவரிக்க முடியாத
காகிதத்தில்
நான்
வெறும்
எழுத்துப்
பிழையாகவே ...................இருந்து ........................விட்டுப் ...............................................போகிறேன்........


"எதுக்கு இந்த நேரத்துக்கு வரச் சொன்னா.... மணி 11 ஆகுது..... யாராது பார்த்து தொலைச்சா, காலைல பஞ்சாயத்து,அது இதுன்னு ஊரக் கூட்டி ஒரு நாளை ஒட்டிடுவானுங்களே... என்ன பண்ண....?.... சாயந்திரம் வரைக்கும் இவ கூடத் தானே விளையாடிட்டு இருந்தேன்.. அப்பெல்லாம் சொல்லாததையா இப்போ சொல்ல போறா?... லூசு மாரி........ பேய் புடிச்ச மாரி, 11 மணிக்கு கிழக்கு கிணத்துக்கு வரச் சொல்றாளே....... அயோ கடவுளே.... இந்த இடத்துல தான்.. லட்சுமி அக்காவ வெட்டிக் கொன்னாங்க.. அது வேற ஆவியா சுத்திட்டு திரியுதுன்னு சொல்றாங்களே.. இவ வேற..... என்ன சொல்றதுக்கா இருக்கும்....?"- நான்..... அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்துக் கொண்டே,ஏதேதோ நினைத்துக் கொண்டே, மெல்ல என் கால் தடங்களை பூமியில் அச்சடித்து விடாமலே நடந்தேன்.....

"எம காதப் பயலுக.... தூங்கற மாரியே எதாவது ஒரு மொட்ட மாடில படுத்துப் படம் பாத்துட்டு இருப்பானுங்க.. விடிஞ்சதும் திரைக்கதையெல்லாம் சேர்த்து வேற படம் ஒட்டிடுவானுங்க...."-

நான் கிணற்றை நெருங்கி விட்டேன்..... பனி சொல்லும் பார்வையில்.... புகை போல நியந்தா, தலை விரித்தபடி கிணற்று மேட்டில் கிணற்றுக்குள் கால் தொங்கும் படி விட்டு வெறிக்க அமர்ந்திர்ந்தாள்.... காலம் வரைந்த சித்திரமாக இருந்த அந்த காட்சிக்குள் ... நான் சித்திரத்துக்குள் நுழையும் ரசிகனாக கிணற்றை நெருங்கினேன்....எனக்கு நியந்தாவை ரெம்ப பிடிக்கும்.... அது காதலா... என்றால் அது தெரியவில்லை.. அது பற்றிய ஒரு முடிவுக்கு நான் வரவில்லை.... ஒரு நாளுக்கு ஒரு நிறத்தில் இருப்பது போன்ற ஒரு நிறம் அவள்... கனத்த உதடுக்காரி...கனத்த கூந்தல் காரியும் கூட... கொஞ்சம் குண்டு பெண்தான்.... பூசினார் போல இருப்பதில்.... பல சமயங்களில் நான் மூச்சிரைத்திருக்கிறேன், சைக்கிளில் அவளை வைத்து அழுத்தும் போது..........என்னோடு நிறையப் பேசுவாள்.... நான் பேசாத போது நிறைய அழுவாள்...அவளுக்கு எல்லாவற்றிக்கும் நான் வேண்டும்....இப்படி ஒரு தோழமையை நிராகரிக்கும் எனது கோபத்தை அவ்வப்போது நான் நிந்தித்ததும் உண்டு....ஆமாம்.. இன்று மாலை கூட ஒரு மாதிரிதான் இருந்தாள்... ஏதாவது பிரச்சினையா..... அவள் அம்மாவின் தொழில் ஊரறிந்த ஒன்று.. என்ன செய்ய.. அவளுக்கு அது மட்டும் தான் தெரியும் என்று ஊர் பேசிக் கேட்டதுண்டு..... விட்டுப் போன கணவனைப் பற்றி அவள் அம்மாவும் பேசியது இல்லை. .... விட்டு போன அப்பாவைப் பற்றி அவளும் பேசியது இல்லை.. நான் கேட்ட போது கூட... "எங்க அம்மா மட்டும் என்ன ரெம்ப நல்லவங்களா.. எல்லாம் அப்டி தாண்டா.... நிறைய பேருக்கு காதலும் புரியறது இல்ல...கட்டி பிடிக்கறதும் புரியறது இல்ல..."-என்று ஒரு நாள் பெரிய மனுஷியைப் போல பேசினாள்... எனக்குதான் ஒன்றும் விளங்கவில்லை...நான் கழுத்தை உற்று நோக்கிய தினம் ஒன்றில் "வேணும்னா தொட்டு பார்டா... இது ஒண்ணுமே இல்ல.. வெறும் சதை தான்" என்று என்னை மிரள வைத்தவள்....எனக்கு அவளை ரெம்ப பிடித்த தருணம் அது........

நான் மெல்ல அவள் பின்னால் போய் நின்றேன்.... பனி விழுந்து கொண்டிருந்தது..... சுவாசிக்கும் காற்றில் கலந்திருந்த பனித் துகள்களில்.... நிறமற்ற சூடு பரவியிருந்ததை உணர முடிந்தது........ என் உடல் நடுங்கிக் கொண்டிருக்க.. அவள் அசையாது அமர்ந்திருந்தாள்.... கிணறு முழுக்க அவளே அமர்ந்திருந்தது போல ஒரு தோற்றம் அந்த நள்ளிரவில் என் மனக் கண்ணில் கழுகாய் வட்டம் அடித்தது.....அவள் வெற்றிடம் ஒன்றை பொதுவாக வெறித்திருக்க வேண்டும்... சட்டென ஒரு யோசனை எனக்கு வந்தது.. எப்பவும் செய்வது தான்...அப்போதும் எந்த வித யோசனையும் இன்றி செய்தேன்....

"ப்ப்பெ.... "என பின்னால் நின்று அடித் தொண்டையில் கத்தினேன்...

"ஆக்ஹ்..." என்று வெடுக்கென்று திரும்பிய அவள் என்னைப் பார்த்தபடியே என் மேல் பின்னோக்கி சரிந்தாள்....

ஒரு கணம்.. திகைத்து... இதயம் நின்று பின் வேகமாய் துடித்தது எனக்கு....

எனக்கு ஒன்றும் புரியவில்லை.... "அயோ.... ஹே.. நியந்தா.... நியந்தா... சும்மாதான பயமுறுத்தினேன்....... இதுக்கு போய் மயக்கம் போடுவாங்களா........அயோ.. கடவுளே.. இது என்ன புதுப் பிரச்சினை...... நியந்தா.. ப்ளீஸ்.. எந்திரி.... சாரி இனி பயமுறுத்தல.. எதுக்கு கூப்ட்ட..? இந்த நேரத்துல ஏன் இங்க வர சொன்ன... பேய் மாரி இருக்குடி.. உன்னப் பார்த்தா... யாராது பார்த்துடப் போறாங்க.. எந்திரி.... விளாடாத... ஐ.... ஐ........ நியந்தா...நடிக்கிறா....."-வேகமாய் அடிக்கின்ற இதயத்தை நானே சரி செய்தபடியே என்ன நானே சமாதானப் படுத்தும் வகையில் என்னென்னமோ பேசினேன்.....

"ம்ஹும்.....அவளிடம் எந்த வித அசைவும் இல்லை... அவள் மார்பில் காது வைத்துக் கேட்டேன்.... சத்தமில்லை.... உடல் குளிருக்குள் பயணிக்கத் தொடங்கியிருக்க வேண்டும்..... உள்ளங்கை சில் என்று இருந்தது....... எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.... அழத் தோன்றியது.. ஆனால் அதற்கு அது நேரம் இல்லை....உள்ளுக்குள் ஒரு அலாரம் அடித்தது......... இப்படியே விட்டுப் போனால்.... அது...... எப்படியும் மாட்டிக் கொள்வேன்... என்னைத் தானே போலிஸ் பிடிக்கும்.... மூளைக்குள் பேய் பிடிக்கத் தொடங்கியது... மூளை தாறுமாறாக யோசித்தது...... கண நேர யோசனைக்கு பின் நியந்தாவைத் தூக்கி கிணற்றுக்குள் போட்டு விட்டு, வேகமாய் வீடு வந்து படுத்துக் கொண்டேன்.... அடிக்கடி கிணற்று மேட்டில் அவள் அமர்வது ஊரறிந்த விஷயம்.. ஏற்கனவே வீட்டில் அவள் அம்மாவுடன் அடிக்கடி சண்டை போடுவதும் ஊரறிந்த விஷயம்... ஆக, தற்கொலை செய்து கொண்டதாக ஊர் நம்பும்... எப்படியும் நாம் தப்பித்துக் கொள்ளலாம்... என்று கேவலமாக நினைந்தேன்....ஆனால் உள்ளுக்குள் உதறலும்.. அழுகையும் மாறி மாறி வந்து கொண்டே இருந்தது.... சும்மாதானே பயப் படுத்தினேன்.. அதுக்கு போய் சாவாங்களா.....! நானே கொன்னுட்டேனே... ஐயோ நியந்தா.. என்ன மன்னிச்சிடு நியந்தா.... நான் என்ன பண்ணுவேன்... "-ஒரு பக்கம் அவளின் மரணம்.. என்னை ஆழ்ந்த பைத்தியத்துக்குள் இழுத்துப் போனது.. இன்னொரு பக்கம் அவள் எதற்கு என்னை வரச் சொன்னாள்... அதுவும் தெரியவில்லை.... நான் அவளை கிணற்றுக்குள் தூக்கிப் போட்டதை யாராவது பார்த்திருப்பார்களா.... என்னால் கண்களை திறக்க முடியவில்லை.. இறுக மூடிக் கொண்டேன்....

விடிந்தது...... ஊரே கிணற்று மேட்டில்தான் இருந்தது...... நியந்தாவுக்கு ரெம்ப நாட்களாக பேய் பிடித்து இருந்ததாகவும்.. அதன் அடுத்த கட்ட விபரீதமாக பேய் அவளை கிணற்றுக்குள் இறக்கி விட்டு கொன்று விட்டதாகவும் ஊர் நம்பியது....

நானும் நம்பினேன்...... என் உடல் நடுங்கிக் கொண்டே இருந்தது.... தலைக்குள் பம்பரம் ஒன்று சுழலாமலே குத்திக் கொண்டிருந்தது...... எந்த நேரத்திலும் யார் வேண்டுமானாலும்... "இவளைக் கொன்றது இவன்தான்"- என்று கை காட்டக் கூடும் என்பதை எதிர் பார்த்தபடியே கூட்டத்தில் ஒருவனாக நின்று கொண்டிருந்தேன்...... எனக்கு வாந்தி எடுக்க வேண்டும் போல இருந்தது.... வெடித்து சிதறும் இதயத்தை அடக்கி வைத்துக் கொண்டு நின்றேன்.....பாதாள சோதி போட்டு... பல பேர் சேர்ந்து நியந்தாவை கிணற்றுக்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்தார்கள்.... கிணற்று மேட்டில் கிடத்தப்பட்டவளைக் கட்டிக் கொண்ட அவளின் அம்மா.... கதறி கதறி... அழுது துடித்து... நியந்தாவின் கழுத்தோடு ஏதோ செய்து கொண்டிருப்பதை ஆங்காங்கே சுற்றி நிற்பவர்களுடன் சேர்ந்து நானும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்....

"ஏம்மா..... முடிஞ்சு போச்சு....இனி அழுது ஒண்ணும் ஆக போறது இல்ல.... இன்னும் பாடிய வைச்சுகிட்டு இருந்தா போலிஸ் அது இதுன்னு கேசாகிடும்... வழிய விடு .. இப்டியே தூக்கிட்டு போய் எரிச்சிட்டு வந்துடுவோம்... ஏம்ம்மா பொம்பளைங்கள்ளா சேர்ந்து கொஞ்சம் அந்த அம்மாவ தூக்கிட்டு போங்க"- என்று ஊர் பெரியவர் கத்த.... நியந்தாவின் அம்மா நியந்தாவின் கழுத்துப் பகுதியில் இன்னும் ஏதோ செய்து கொண்டே இருந்தது ... அதற்குள் சில பெண்கள் சேர்ந்து நியந்தாவின் அம்மாவை இழுத்து அந்தப் பக்கம் கொண்டு வந்து விட... அந்த அம்மா செய்து கொண்டிருந்த வேலையை பாதியிலேயே விட்டு வந்ததை அனைவருமே கண்டு கொண்டார்கள்... நானும் கூட.....

"ஓ இது தான் பிரச்சினையா...... எவனோ தாலிய கட்டிருக்கான்.... ஏமாத்திடான் போல.. அதான் புள்ள கதைய முடிச்சுகிச்சு.....ஏம்மா.. நீ அந்த தாலிய கழட்டத்தான இவ்ளோ நேரம் போராடிகிட்டு இருந்த.... கண்டிப்பா பையன் யாருன்னு உனக்கு தெரியும்...... சொல்லு.. சாயந்திரம் பஞ்சாயத்துல பாத்துக்கலாம் .. இப்போ பொணத்த தூக்குங்கப்பா.... நேரம் ஆச்சு... உடம்பு ஊறிக் கிடக்கு..."-என்றபடியே நியந்தாவைத் தூக்கி கயிற்றுக் கட்டிலில் வைத்து காடு நோக்கித் தூக்கிப் போனார்கள்.....

நியந்தாவின் அம்மா.... அத்தனைக் கூட்டத்திலும் என்னை உற்றுப் பார்த்தது.. எனக்கு.... இன்னும் தூக்கி வாரிப் போட்டது.... நானும் நியந்தாவின் கழுத்தில் கிடந்த தாலியைப் பார்த்தேன்.... எனக்கு எல்லாம் புரிந்தது.. அயோ கடவுளே.. இது என்ன விளையாட்டு..... ரெண்டு வருசத்துக்கு முன்னால இந்த தாலிய நான்தானே கட்டினேன்....நினைவுக்குள் அந்த கல்யாணம் கட்ற விளையாட்டு மெல்ல ஒரு மலைப் பாம்பாய் நீளத் தொடங்கியது......

பத்து பேர்...... அது, பசங்க, புள்ளைங்க, பெருசுங்க.. என யார் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடக் கூடிய ஒரு விளையாட்டு.... அடுத்தடுத்து வரிசையாக பத்து குழிகளைத் தோண்டி... ஒவ்வொரு குழிக்கும் பத்து பேரில் ஒவ்வொருவரின் பெயர் வைக்கப் படும்....சாட் பூட் த்ரி போட்டு கடைசியாக வருபவர்.. கையில் ஒரு பந்தைத் தந்து விடுவார்கள்... அந்த குறிப்பிட்ட நபர்.. சற்று இடைவெளியில் யார் குழிக்குள் வேண்டுமானாலும் அந்த பந்தை உருட்டி விடலாம்....அப்படி உருளும் பந்து யார் குழிக்குள் விழுகிறதோ... அந்த குழிக்கு சொந்தக்காரர், உடனே சுதாரித்துக் கொண்டு பந்தை எடுத்து யார் அருகில் இருக்கிறாரோ.. அல்லது அடிக்க யார் தோதாக கிடைக்கிறாரோ அவரை அடிக்க வேண்டும்.. அடிபட்டவர் இப்போது பந்தை உருட்ட வேண்டும்..யார் மீதும் அடி படவில்லை என்றால் திரும்ப அவரே வந்து மீண்டும் பந்தை உருட்ட வேண்டும்.... பந்து யார் குழிக்குள் வேண்டுமானாலும் விழுகும் என்பதால் மிச்சம் இருக்கும் ஒன்பது பேருமே குழிகளை சுற்றிதான் நிற்பார்கள்... அதாவது பந்தையும் எடுக்க வேண்டும்.... அதே சமயம் தன் குழியில் விழுகவில்லை என்று உறுதி படுத்திக் கொண்டு அடிபடாமலும் ஓடி விட வேண்டும்.... அப்படி ஒரு இடைவெளியில் தயாராய் நிற்பார்கள்....விளையாட்டு முடிந்து யார் தோற்கிறார்களோ... அவரின் கையில் நிஜமாகவே ஒரு மஞ்சள் பதித்த ஒரு தாலியை கொடுத்து வீதிக்குள் உலவ விடுவார்கள்.... முதலில் யார், கண்ணில் படுகிறார்களோ.. அவர் தன் குடும்பத்தை சாராதவர்கள் யாராக இருந்தாலும்....அவரின் கழுத்தில் கட்டி விட வேண்டும்..... அது முழுக்க முழுக்க ஒரு விளையாட்டு... மாலை வரை அந்த தாலி அப்படியே இருக்கும்.. பின், கழற்றி ஊர் சாமியின் கழுத்தில் போட்டு விடுவார்கள்..... இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு விளையாட்டு.... இந்த விளையாட்டை சில சமயங்களில், ஞாயிறுகளில் ஊரே நின்று வேடிக்கை பார்க்கும்... தாலி கட்டும் நேரத்தில் ஊரே கதவடைத்து கொண்டு விளையாட்டு காட்டும்.... தோற்றவர்.. தாலியுடன்... ஒளிந்து ஒளிந்து விரட்டிக் கொண்டிருப்பார்.... ஊரே கலை கட்டும்...அப்படித்தான் இரண்டு வருடங்களுக்கு முன் நான் விளையாட்டில் தோற்று எதிர்ப்பட்ட நியந்தாவின் கழுத்தில் கட்ட.. அவள் அதை கழட்டாமலே இன்று வரை சுமந்து கொண்டிருந்திருக்கிறாள்....இப்போது தான் எனக்கு நிறைய விஷயங்கள் புரிகிறது... அவள் என்னோடு காதலாகத்தான் பழகி இருக்கிறாள்.. நான் தான் ப்ரெண்ட் என்று நினைத்து இருந்திருக்கிறேன்.. கண்டிப்பாக இந்த விஷயம் அவளின் அம்மாவுக்கு தெரிந்திருக்க வேண்டும்... அது தான் கூட்டத்தில் தன் மகளின் மானம் போய் விடக் கூடாது என்று தாலியைக் கழற்ற முயற்சி செய்திருக்கிறாள்....என்னை உற்றுப் பார்த்ததும் அதனால் தான்.... ஊர் மக்களும், தாலிக்கும் விளையாட்டுக்கும் உள்ள தொடர்பை யோசிக்கவில்லை....எனக்கு தலையே சுற்றியது.... காதலை சொல்லி இருக்கலாமே... அயோ... கூட இருந்த போதும் சாகடித்திருக்கிறேன்... காதலை சொல்ல நினைக்கும் போதும் சாகடித்திருக்கிறேன்.. எனக்கு பைத்தியம் பிடித்தால் கூட பரவாயில்லை என்று தோன்றியது.....எத்தனை நாள் மற்ற பெண்களைப் பற்றி அவளிடம் பேசி இருப்பேன்.... எல்லாத்துக்கும் ஒரு புன்னகைதானே தருவாள்... விளையாட்டாய் கட்டிய தாலியை இப்படி உயிருக்குள் வைத்து கொண்டாடுவாள் என்று தெரியாமல் போனதே..காதல் இத்தனை வலிமையானதா....? யாரிடம் சொல்வேன்... எவ்ளோ பெரிய தப்பு செய்திருக்கிறேன்....நான் அழுதேன்...... கத்திக் கத்தி அழுதேன்.... மூச்சடைத்து அழுதேன்...என்னை நானே நொந்து கொண்டேன்.... நியந்தா போல ஒருத்தியை வாழ்நாளெல்லாம் தொலைத்து விட்டேன்.... நானே கொன்று விட்டேன்.... காலம் முழுக்க சுமக்கும் ஒரு சிலுவையை காதலாக்கி தந்து விட்டு போய் விட்டாள்....... அவளின் அம்மாவும் என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட யாரிடமும் சொல்லவில்லை....அதன் பிறகான நாட்களில் உயிர் வலித்து... ஊரை விட்டே வெளியே வந்து விட்டேன்.... இன்னும் நியந்தாவை மறக்க முடியாமல்,குற்ற உணர்ச்சியில் நான் தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தான் வார்ம் ஹோல் வழியாக எனது பதினெட்டாவது வயது காலத்துக்குள் வந்து இதோ இப்போது சாகப் போகும்.... நியந்தாவை மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.....

"எதுக்கு வர சொல்லிருப்பா...... அதும் இந்த நேரத்துக்கு"- என்று என் 18 வயது நான்.... யோசித்துக் கொண்டே கிணற்று மேட்டை நெருங்க....வெற்றிடம் நோக்கி தலை விரித்தபடி கிணற்றுக்குள் கால் தொங்கும் படி அமர்ந்திருந்தாள் நியந்தா.....


இந்த முறை நான் சுதாரித்துக் கொண்டேன்.... அன்று என் 18 வயது நான் பின்னால் நின்று "ப்பெ....ன்னு"- கத்தியதால் தானே நியந்தா, இதயம் நின்று செத்துப் போனாள்..... இன்று நான் கத்தவில்லை என்றால் அவள் சாக மாட்டாள் தானே...!

சரி... இப்போது என்ன செய்யலாம்.. என் 18 வயது என்னை ......ப்பெ என்று கத்தும் நொடியில் கவனம் கலைக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்... 18 வயது நான் அவள் பின்னால் நின்று கத்த தயாராகும் போது அதைப் பார்த்துக் கொண்டிருக்கும், காலம் தாண்டி வந்திருக்கும் நான் ... சிறு கல் ஒன்றை எடுத்து கிணற்றைத் தாண்டி வீசினேன்... அந்த கல்லின் சல சலப்பு ஏற்படுத்திய சத்தத்தில் கத்த முயற்சித்த 18 வயது நானும் அதே சமயம் மெல்ல திரும்பிப் பார்த்த நியந்தாவும் கவனம் கலைந்தார்கள்....நான் கத்தவில்லை.... அவள் சாகவில்லை.... என்று நினைத்த நான்..பெரு மூச்சு விட்டபடி இருந்த பனி விலக்கி இன்னும் கொஞ்சம் முன்னோக்கி சென்று அவர்களை உற்று நோக்கினேன்... கால குளிர் உணரும் நொடியில்... கடவுள் கண்டதைப் போல... காலம் ஒரு மரணத்தை மறக்கப் போகிறது என்று எண்ணிய பெருமிதத்தில்..... ஏனோ புன்னைகைக்க தோன்றியது......

ஆனால் இம்முறையும் நியந்தா 18 வயது என் மீது சரித்து கொண்டிருந்தாள்......

ஆஹ்............. ஆஹ்.......... கத்திக் கொண்டே... தலையில் கை வைத்துக் கொண்டு கீழே விழுந்தேன்...... பனி மூடத் தொடங்கியது.. மீண்டும் ஒரு பாம்பின் வயிற்றுக்குள் நெளிந்தபடியே முன்னோக்கி நீந்த நீந்த..... இப்போது வேறு ஒரு பனி மூட்டத்தின் பிடியில் வெளியே விழுந்தேன்...... அதே வார்ம்ஹோல் வழியாக வேறு எங்கோ வந்திருக்கிறேன்....

அங்கு .......அங்கு.... என் கல்லறைக்கு....... 65 வயது நியந்தா பூங்கொத்து வைத்துக் கொண்டிருக்கிறாள்.........

அதும் ஒரு பனி விழும் இரவு.......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (30-Nov-14, 7:44 pm)
பார்வை : 352

மேலே