யாவும் தோற்ற மாயைகளே-வித்யா

யாவும் தோற்ற மாயைகளே!!.........-வித்யா

என் வார்த்தைகள் வன்மம் சுமப்பின் மென்மையாய் பொறுத்துக் கொள்ளுங்கள்......... என் வார்த்தைகளின் சுபாவம் அப்படி. அதனோடு கோபம்கொள்ளாதீர்கள் நட்புகளே.....!!

வெள்ளைத்தோலுக்கு மனிதச் சந்தையில் இவ்வளவு மதிப்பா..........வண்ணங்கள் புவியளப்பின் கருமையும் ஒரு நிறமன்றோ.......! இளஞ்சிவப்பும்.......பொன்மேனியும் கண்கவருமெனில் அடர்கருமையும்......மாநிறமும் மண்ணிற்குள் புதைபடுமா...?அழகிய ஆண் சுமாரான நண்பர்களை துணைக்கு வைத்துக் கொள்வதும்..... அழகானப் பெண்ணின்தோழிகள் இவளோடு செல்லும் போது நாம் சுமாராகி விடுவோமோ..?? நம்மை யாரும் பார்க்க மாட்டார்களோ என எண்ணுவதும் வாடிக்கையாகிவிட்டது.

சில சமயம் கோபம் ஏற்படுத்தும் இவர்களின் நிறவேற்றுமைகள் இன்னும் சில சமயங்களில் சிரிக்கவும் வைக்கின்றன. நிறங்களின் ஈர்ப்பினால் உறவுகளின் வரவிருப்பின் நொடிகளில் கரைந்துப் போகும் உதட்டுச் சாயங்கள் கொள்கைகள் வாசிக்கும். வனமும் வானமும் திறந்தேக் கிடக்க இதயம் பூட்டி சாவி தொலைத்து அலைவதேனோ. காரெட் சாறு........மூல்தானி பூச்சு.....வெள்ளரித்துண்டு........கஸ்தூரி மஞ்சள்....... ம்ம்ம்ம்ம்.......இன்னும் என்னென்னவோ......மெலனின் புரட்சிங்கோ.......!!

உதிர்ந்த சருகின் பழுப்பினில் தென்பட்ட சிறு பச்சை நிறம் இன்னும் வாழ்நாளில் இருநாள் மிச்சமிருந்ததாய் ஒரு கவிதை சொல்ல மெய் சிலிர்த்துப் போனேன் நான்.......என் தலையில் சில பல வெள்ளைக் கம்பிகளின் வருகையை முதன் முதலில் கண்ணாடியில் கண்ணுற்ற போது.......! கருகலைப்பு செய்து வெள்ளைக் கருவினை தலையில் தேய்த்து இளஞ்சூட்டில் தலை முழுகியபோது தெரியவில்லை...... நான் எனைப் புதுப்பித்துக் கொண்டிருந்தேன் என்று(BEAUTY CONSCIOUS ).........!!

ஒரு பிஞ்சு விரலின் ஸ்பரிசம் எனைத் தீண்டிப்போக என் அன்னையின் ஆரம்பச்சுருக்கங்கள் எனை ஏதேதோ செய்தது.
வசந்தத்தின் ஆட்குறைப்பில் புதுப்பித்துக் கொள்ளா மரங்கள் புறக்கணிக்கப்படுவதைப்போல வெளித்தொற்றங்களில், ஒப்பனைகளில் மரியாதை மாயைகளை ஏற்படுத்தும் வாழ்வினை நினைக்கும் போது எல்லாமே ஏதோ ஒரு முகமூடிக்குள் தொலைந்துப் போவதாய் ஒரு எண்ணம்.....!!

ஆம்.......அந்த இளஞ்சிவப்பு புடவையை விட நாவல் பழ நிற புடவை எனை அழகாய்க் காண்பிக்கும். புடவையின் வண்ணங்களில் எனை நான் நிர்ணயித்துக் கொள்ளும் போது நானாகிய என் சுயம் புடவையின் ஏதோ ஒரு நூலிழையில் அதன் அடையாளம் தொலைத்து அழுது கொண்டிருக்கும்.

மையிட்ட விழிகளில் வலியும் கண்ணீர் கதைகள் புது நிறமூட்டும்....... எண்ணையில்லா வறண்ட கேசம்.... வறுமையின் பிடியை நிலை உயர்த்தி பேஷன் எனக்கூறும்.........கிழிந்து தைத்த ஆடைகள் கிழித்தே தைக்கும் ஆடைகளின்று உயர்வுபெறும்...... இருபிடி உண்டு உணவுக் கொழுப்பில் பசிக்கொண்ட எச்சில் இழைகள் பசிக்கிரக்கத்தில் உணவுக் கொள்ளும் பாவி வயிற்றிலடிக்கும்......

மதுக்கோப்பை உரசல்களில் உணர்வுகள் உபசரிக்கப்படும்......தெருமுனையில் நாய்களோடு குளிர்காய்ந்தொரு ஆன்மா கருகும்...!! உதட்டு முத்தங்களில் சாயங்கள் வெளுக்கும்.......உயிர்கிள்ளும் பசி வெளுத்து வெளுத்து மரணம் தொடும்........!! மண்மூடும் இலையாய் இங்ஙனம் மனிதம் மீண்டும் ஜனிக்கும்....!! யாவும் தோற்ற மாயைகளே........!!

எழுதியவர் : வித்யா (30-Nov-14, 8:58 pm)
பார்வை : 2055

மேலே