சென்னையும் சென்னை நிமித்தமும் - 2
முன்கதை - அரவிந்துக்கு இன்று சென்னையிலிருந்து ஒரு ஃபோன் வருகிறது ஆஷா என்பவள் அவனை தேடி அங்கு வந்திருப்பதாக . பிறகு ஆஷாவே பேசுகிறாள் . அவன் தற்போது இருக்கும் ஹைதராபாத்துக்கே வருவதாக சொல்லி அழைப்பை முடிக்கிறாள்.
ஆஷாவும் அவனும் சென்னையில் சென்ற நூற்றாண்டின் இறுதியில் / இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். அவன் அவளுக்கு நிறைய உதவிகள் செய்கிறான் . தங்கள் பணிகளை இருவரும் சிறப்பாக செய்து தங்களையும் அவர்கள் கம்பெனியையும் உயர்த்துகிறார்கள் .அரவிந்த் திருமணம் ஆனவன் .ஆஷா யாரையோ காதலிப்பதாக ஊகித்து அரவிந்த் ஒரு நாள்" நீ யாரையாவது லவ் பண்றியா " என கேட்க , அவள் ஆமாம் என்கிறாள் . முன்கதை அங்கு முடிந்தது.
முழுவதற்கும் நேற்றைய என் "சென்னையும் சென்னை நிமித்தமும் - 1 " படியுங்கள் .
...................................................................................................................................................................................................
" சரி... சாயங்காலம் பேசுவோம் " என்று அரவிந்த் சிரித்து வைத்தான்.
சாயங்காலம் எம்டி சேல்ஸ் ரிபோர்ட்ஸை எடுத்துக் கொண்டு இன்றைய கவிஞர்கள் மாதிரி பூலோகத்தில் எதுவுமே சரி இல்லை என்று கத்தியதுதான் மிச்சம் .அதுவும் ஆஷாவின் குறைந்து போன விற்பனைகளுக்கும் சேர்ந்து அரவிந்த் வாங்கிக் கட்டிக்கொண்டான் .
வீடு செல்லும் முன் அவன் முதல்முறையாக அவளிடம் கத்திவிட்டுப் போனான் ."எவனையாவது லவ் பண்ணு . ஆனா காலைல ஒம்பது மணிக்கு முன்னாடி .. சாயந்திரம் ஆறுக்கப்புறம் " எனச் சொல்லி தன் முழுக் கோபத்தையும் சுந்தரம் ஐயங்காரின் சமுராய் மேல் காட்டி விரைந்து போனான்.
அவள் கண்களை துடைத்துக் கொண்டே அருகிலிருக்கும் PCO தேடினாள்.
மறுநாள் அவள் குட் மார்னிங் சொன்ன போது அரவிந்த் பதிலுக்கு சொல்லமால் தலையை மட்டும் ஒப்புதலுக்கு அசைத்து வைத்தான் .அவள் தனக்கான வேலைகளை கேட்ட போது வழக்கமான பணிகளை தராமல் கஸ்டமர்களின் பண பாக்கி விவரங்களை கொடுத்து அதை வசூலிக்க சொன்னான் .இது ஒரு சவாலான வேலை , உன்னால்தான் முடியும் என்றான் . உண்மையில் அது சவாலான வேலைதான் ஆனால் அது பெரும்பாலும் பாராட்டு பெறாத பணி என்று அவள் அறிந்திருந்தாள் . இருப்பினும் செய்ய ஆரம்பித்தாள்.
இப்போதெல்லாம் அரவிந்த் அலுவலகத்தில் இருக்கும் போது , அவள் சாப்பிட்டு முடித்த பிறகே சாப்பிடப் போகிறான் .சாயங்காலம் டீ அருந்தும் நேரம் கூட அவளோடு இசை , கவிதை எதையுமே பேசுவதில்லை .அந்த பேமண்ட்ஸ் என்னாச்சு , இந்த பேமண்ட்ஸ் என்னாச்சு என வாஜ்பாய் யஷ்வந்த் சின்ஹாவை கேட்பது போல் கேட்பான் .அவளுக்கு 'டேய் மனி கம் டுடே கோ டுமாரோ , ஐ அம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்ரா ' என அப்போதைய வடிவேலு டயலாக் ஞாபகம் வந்து தொலைக்கும்.சிரிப்பை அடக்கிக் கொண்டு எல்லாக் கடன்காரன்கள் விவரங்களையும் அளிப்பாள் .
சரி எல்லாம் போகட்டும்.நமக்கு ஒரு நல்லபாதையை காட்டி குரு ஸ்தானத்தில் இருப்பவன் என நினைத்துக் கொள்வாள் .
வீட்டில் அம்மா கூட கேட்டாள் . " ஏன்டி அரவிந்துக்கு பிடிக்கும் என பணியாரம் , உப்பு உருண்டை எல்லாம் செய்ய சொல்லுவ .இப்ப என்னாச்சு .அந்த தம்பி வேற ஆபிஸ்க்கு போயிடுச்சா? ".
" இல்லமா , அவன் இப்பல்லாம் எப்பவுமே வெளிவேலையா இருக்கான்.ஆபிஸூக்கு சாப்பிட கூட வர்றதில்ல " எனச்சொல்லி சமாளித்தாள் .
'இந்த லட்சணத்துல என் காதலை சேத்து வைக்க அரவிந்ததான் வீட்ல வந்து பேச சொல்லனும்.எப்படி கேட்கறது அவன் கிட்ட ...முன்னாடி மாதிரி இருந்தா ரெண்டு முறுக்கு கொடுத்து கேட்கலாம் .இப்ப வரிசையா எத்தனை தட்டு வச்சாலும் ராஜ்குமார கடத்திய வீர்பபன் மாதிரி எல்லாத்தயும் நிராகரிச்சிடுவான் . எல்லாம் என் நேரம்' என நொந்துகொண்டாள்.
வீரப்பனுக்கு ராஜ்குமாரோடு போர் அடித்தததால் 108 நாட்கள் கழித்து அவரை விட்டு விட்டாலும் அரவிந்த் அப்படியேதான் இருந்தான்.
இப்படி எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்ட ஆஷா அன்று அரவிந்திடம் இன்று சாயங்காலம் உன்னோடு நான் பேச வேண்டும் .. நம்ம போரூர் பேக்டரிக்கு ஸ்டாக் எடுக்க போறேன் .நீ அங்க வந்துடு என்று ஒரு குறிப்பு எழுதிக்
கொடுத்து விட்டு தன் சாப்பாடு பையை தூக்கிக்கொண்டு சென்று விட்டாள்.
மொத்த சரக்குகளின் முழு விவரங்களையும் எடுத்து முடித்து வங்கிக்கான அறிக்கையாக அவள் தயாரித்து ஓய்ந்த போது மணி ஏழாகி இருந்தது .தொழிலாளர்கள் எல்லாம் போன பின்பு கடைசியாக உதவிக்கு இருந்த சுபர்வைசரும் கிளம்பி விட்டான் .
அவள் பேக்டரியில் இருக்கும் ஒரு சின்ன நிர்வாக அறையில் அரவிந்திற்காக காத்திருக்க அமர்ந்தாள்.மதிய சாப்பாட்டு பை திறக்காமல் அப்படியே கிடந்தது .கேட் திறக்கும் ஓசை கேட்டு சுயநினைவடைந்தவள்
அவன் வந்து விட்டதை உணர்ந்து கைக்குட்டையை எடுத்து கண்களை துடைத்துக் கொண்டாள்.
மெதுவாக வந்து ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தவன் .ஷூவின் லேசை கழட்டி விட்டு , டை யையும் தளர்த்திக் கொண்டே கேட்டான் ... " என்ன சொல்லு ".
அவள் அமைதியாக இருந்தாள் . இப்போது கிட்ட வந்து கண்களை பார்த்தான், " சொல்லு " என்றான் .
அமைதி அழுகை ஆனது . உடைந்தாள் ." தட் ப்ளடி ஃபெல்லோ என்ன ஏமாத்திட்டான் அரவிந்த் " என்று வரி வரியாக அவள் காதலித்ததை , அவள் காதலன் அவளுக்கு உயிர் ஆனதை , இருவரும் ஒருவரை ஒருவர் இதயத்தில் சுமந்ததை , கல்யாண முடிவு எடுத்ததை , கனவுகள் கண்டதை...ஒரு டீம் வாட்டர் பாட்டில் முழுவதையும் குடித்து விம்மி இருந்தாள் . கண்ணீர் அடங்காமால்தான் இருந்தது .
இப்ப அவங்க கம்முயுனிடிலேயே பொண்ணு பாத்துட்டாங்களாம் அவங்க அம்மா . பெரிய இடமாம் .100 பவுன் , கார் எல்லாம் தராங்களாம் . அம்மா கிட்ட எவ்வளவோ கன்வின்ஸ் பண்ணி பாத்தானாம் அவங்க முடியாது , நம்ப குடும்பத்துக்கெல்லாம் இது ஒத்து வராதுன்னு சொல்லிட்டாங்களாம் . நான் அந்த பொண்ணு வீட்டுக்கு போயி அவங்க அப்பா அம்மா கிட்ட கேக்கறன் . என்ன பொண்ணு வளத்து வச்சு இருக்கீங்க அப்படின்னு எங்க வீட்டுக்கு வர்றதா சொல்றாங்களாம் ...என்று தண்ணீர் தேடினாள்.
வாட்ச்மேன் என அரவிந்த் அழைத்து காசு கொடுத்து அனுப்பினான் .
' ஐ கான்ட் லிவ் வித் அவுட் ஹிம் . எனக்கு ரெண்டு சாய்ஸ் தான் இருக்கு . ஒன்னு நான் சாகனும் . இல்ல அவன மறக்கனும் . இங்க சென்னைல இருக்கிற வரைல அவன மறக்க முடியாது .அதனால நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு எங்க அண்ணன் இருக்கிற பூனாவுக்கு போய்ட போறேன் " ..முடித்தாள்.
பூனா போனவள் பிறகு அவள் அண்ணியின் சொந்தத்திலேயே ஒரு சாப்ட்வேர் என்ஜினியரை மணந்து கொண்டாள் என்பதையும் மற்றும் இந்த மொத்த கதையையும் அரவிந்த் அவன் மனைவிக்கு ஏற்கனவே சொல்லி இருந்தான் .அதனால் நாளை வரப்போகும் ஆஷாவை பற்றி அவன் வீட்டில் இன்னும் நிறைய தகவல்கள் ஓடிக் கொண்டு இருந்தது .
ஒரு சில தகவல்கள் மட்டும் அவன் சொல்லவில்லை . அவள் அழுது முடித்திருந்த போது அவன் ஆறுதல் சொல்வதாக அவளை பின்னாலிருந்து தன் பக்கம் இழுத்ததையும் முத்தம் கொடுக்க முயன்றதையும் மீறிய அவளை மிருகமாய் இறுக்கி சாய்த்து மேலே படர்ந்ததையும் ...அவள் கரம் குவித்து இதற்குத்தானா எனக்கு இத்தனை உதவியும் செய்தாய் , பிறகு உபத்திரவமும் கொடுத்தாய் என கதறியதையும் , அவன் மௌனமாய் தலை குனிந்து நடுக்கத்தோடு விலகியதையும்.
மறுநாள் ' யாருக்கும் தெரிவிக்காதே தயவு செய்து ' என ஆரம்பித்து... 'நீ எனை மன்னிக்கும் நாள் எனை தொடர்பு கொள்ளவும் ப்ளீஸ்'....
என்று அரவிந்த் , ஆஷாவுக்கு அனுப்பிய பர்சனல் ஈமெயில்தான் அவர்கள் இருவருக்குமிடையிலான கடைசி தகவல்.
- முற்றும்.
இரண்டு பின் குறிப்புகள் :-
1.இது பெண்கள் அலுவலகங்களில் எப்படி நோகடிக்கப் படுகிறார்கள் என்பதை உணர்த்த நிறைய நிஜம் , கொஞ்சம் கற்பனை கலந்து எழுதியது . அலுவலகம் வரும் பெண்களை சக மனுஷியாக நடத்துவோம் . அவர்கள் மேலான பொய் கரிசனங்கள் , அவர்கள் தனிமனித வாழ்க்கையில் குறுக்கீடுகள், நம்பிக்கை துஷ்பிரயோகங்கள் எல்லாமே மனித பரிணாம வளர்ச்சியியை தடுக்கும் திட்டமிட்ட அராஜகங்களே .
2.நான் யோசித்து வைத்த கதையின் போக்கை / முடிவை நேற்று பொள்ளாச்சி அபி தோழர் தளத்தில் பகிர்ந்த வெ மாதவன் அதிகன் கவிதை மாற்றியது .அக்கவிதை ...
"உலகின்,அறங்களும்,நீதிகளும்
போதிக்கப்பட்ட பின்னும்,
ஒரு தேக்கரண்டிக் காமம்,
எல்லாவற்றையும் எரித்துவிடுகிறது."
.........................................................................
Picture - Source & Thanks
thebetterindia website .