ஆசை
காடுமலைஏறி களைப்படைய ஆசை
காதலியின் பட்டிதழில் முத்தமிட ஆசை
வானுலகம் சென்று வாகைசூட ஆசை
வந்தபின் என் பெண்ணைக் கண்டுவிட ஆசை
நீண்டதூரம் கால்கடுக்க நடந்துவர ஆசை
நீராவிக்குளியல் பின்கொண்டுவிட ஆசை
வானுயர்ந்த மலையேறி வென்றுவிட ஆசை
வந்தபின் அதைப்பற்றி எழுதிவிட ஆசை
காலம் குறித்துக் கதை சொல்ல ஆசை
காலம் வரும்போது அதை வெளியிட ஆசை
இவ்வுலகம் முழுதும் சுற்றிவர ஆசை
இன்றுமுதல் அதற்காகச் சேமிக்க ஆசை
கருப்பு வெள்ளை படம்காண ஆசை
காணும்போது என் மனையாளின் கேசம் வருட ஆசை
பெற்றெடுத்த தாயை என்றும் வணங்க ஆசை
பொறுப்பேற்று அவள் கவலை போக்க ஆசை
வானுயர்ந்த சோலையிலே வலம்வர ஆசை
வான்தொட்ட மேகம்போல் பறந்துவர ஆசை
நீரில் பிறந்த மீனாய் நீந்திவர ஆசை
நித்தம் ஒரு புத்தகம் படித்துமுடிக்க ஆசை
உண்மை எதுவென்று கண்டறிய ஆசை
ஊருக்கெல்லாம் அதை சொல்லிவிட ஆசை
அன்பு மகளின்பால் அம்புட்டு ஆசை
அவள் என்றென்றும் ஐந்து வயதாய் இருக்க ஆசை
செம்மையாய் செந்தமிழில் கவிபுனைய ஆசை
செம்மல் எனப் பேரடுக்க ஆசை
என்றென்றும் இவ்வுலகில் இருந்துவிட ஆசை
எதையேனும் மரியும்முன் செய்துவிட ஆசை!