கடந்த 16 நாட்கள் திருச்சி

சுவை கொட்டிடும் முகில் சோலைகள்.
தேன் இறக்கிடும் மர அருவிகள்.
தார் சாலையில் மழை பாம்புகள்.
தோரணமாய் திருச்சி!
தோன்றியது மகிழ்ச்சி!

குயில் யாவும் கூட்டினில் தூங்க
நுனி வேர் உன் திருப்புகழ் பாடும்.
குடையெல்லாம் உன் கொட்டு வாங்கி
வாசலில் அமர்ந்து அழுது தேம்பும்.

துளி ஒவ்வொன்றும் விந்தென
காளான்கள் கோஷமிடும்.
கரையான்கள் ஈசலாய் ஒரு-
நாள் மட்டும் வேஷமிடும்.

பனி நிரம்பிய நடைப்பாதை
காதலிக்க மேடையாகும்.
படுக்கையில் நெருக்கம் கூட
விவகாரத்து கணிசமாகும்.

தோகை நனைந்தாலும்
மயில் அழகை இழக்காது.
விடியல் புலர்ந்தாலும்
கம்பளி கதவு திறக்காது.
அலுவல் கூடினாலும்
நா தேநீர் மறக்காது.

மழைக்கால பிரயாணத்தில்
ராஜாவின் இசையில் மிருதுவாவோம்.
குளியலில் முதல் சொட்டு
மேனியில் பட கோமாளியாவோம்.

காகிதங்கள் மாலுமி தேடும்.
குப்பை தொட்டி தண்ணீர் குடிக்கும்.
காலணிகள் தினமும் குளிக்கும்.
கைக்குட்டை முண்டாசாகும்.
தலையணை மெலிந்து போகும்

வழியோர அழுக்கு கூடாரங்கள்
நாம் ஒதுங்க ஏளனமாய் சிரிக்கும்.
சைக்கிள் பாய்ந்த பள்ளம் எல்லாம்
இறங்கி போவென கர்வத்தில் கதைக்கும்.
மின்சார கம்பங்கள் குளிரில் நடுங்கி
கண்டவரை எல்லாம் காவு வாங்கும்.

கூரை வீட்டில் பூரான்களை அடி.
ஓட்டு வீட்டில் ஒழுகும் நீரை பிடி.
மாடி வீட்டில் ஜன்னலை சாத்து.
தெருவோரம் தான் வீடா?

பிளாஸ்டிக்கை போர்த்து.
கோபுரமும் மசூதியும்,
சிலுவையும் சிலையும்
மழையில் சேர்ந்தே தான்
நனையும்.

எழுதியவர் : sathyathithan (2-Dec-14, 10:25 pm)
சேர்த்தது : SATHYATHITHAN.A
பார்வை : 58

சிறந்த கவிதைகள்

மேலே