மழலை பருவம்

வாழ்க்கை கப்பலின்
குதூகல வெள்ளோட்டம் !

களங்கச் சித்திரங்கள்
வரையக் காத்திருக்கும்
அப்பழுக்கற்ற
வெள்ளை காகிதம் !

தித்திக்கும் வைபவமோ
திடுக்கிடும் சம்பவமோ
தன்னுள் அடக்கிய
வாழ்க்கை நாளேட்டின்
தலைப்புசெய்தி !

முதுமை நிழலில்
அனுபவ உணவை
அசை போட்டிடவே
அமரப் போகுமுன்
ஆனந்தமான
அவசர மேய்ச்சல் !

கவலை இருளின்
கரிநிழல் பிசாசுகள்
கண்காணிப்பதை
காணாதிருக்கும்
காட்டுக் கலைமான் !

எரிக்கும் சூரியன்
எழுகின்ற வரைக்கும்
ஆனந்தப் பனிப் போர்வை
மூடிடும் வைகறை !

காண்பதெல்லாம்
அற்புதங்கள்-
உணர்வதெல்லாம்
சந்தோஷங்கள் -
நேசிப்பதெல்லாம்
நிஜங்கள் !

அந்த-
பிஞ்சு வயதில்தான்
பிரபஞ்ச நேயங்கள்
பிழைத்திருக்கும் என்றால்
அஞ்சு போதுமே
ஆயுள் நமக்கு !

எழுதியவர் : ஜி ராஜன் (5-Dec-14, 2:22 pm)
Tanglish : mazhalai paruvam
பார்வை : 699

மேலே