விதவை என்றால் வேற்று கிரக வாசியா

நதியோடு நீராடி
மலர்கொடியோடு உறவாடி

மலைமேல் ஏறி
மழையில் நனைந்து

பனித்துளி ரசித்து
பட்டாம்பூச்சி போல்
பறந்திடும் வயது தனில்

பெற்றவர் பார்த்துவிடும்
திருமணத்தில்
பாதி தொலைந்து போனது
ஆனந்தம்

ஆற்றங்கரை பிள்ளையார்
அடுத்த வீட்டு தோழி
அம்மா அப்பா
ஆசையாய் வளர்த்த நாய்குட்டி

மாங்கல்யம் பெற்ற மறுகணமே
மறைந்து போனது இவை அனைத்தும்

உதட்டில் சிரித்து உள்ளுக்குள்
அழுதிடும் ஊமை நாடகம்
அரங்கேறியது அனுதினமும்

முழுதாக ஆறு மாதம்
முடியும் முன்னே அவன்
ஆயுள் காலம்
முடிந்து விட
உயிர் பறித்தான் எமதர்மன்

ஆண்டவன் செய்த பிழையால்
ஆனதோ இந்த
விளைவு

புருஷன் இல்லை
பொட்டோடு பூவும் இல்லை
மூளியாக மூளைக்குள்
வாழ்வு

முடுமை இவள் வந்தவுடன்
முழுங்கி விட்டாள் என் மகனை
அத்தையின் வார்த்தைகளில்
உச்சக்கட்ட அர்ச்சனை

தவறியேனும் முகம்
பார்த்து விட்டால்
தரித்திரம் என்ற சாடல்கள்

திருமணமோ திருவிழாவோ
சீமந்தமோ சிறப்பு எதுவோ
முளித்திட வேண்டாம் மூதேவி
அவள் முகத்தில்

காதில் படவே காட்டு மிராண்டி
பேச்சுக்கள்


கண்டதும் ஒதுங்கி செல்ல
காரி உமிழ்ந்து செல்ல
வெண்ணாடை கட்டியதால்
விதவை என்ன வேற்றுகிரக வாசியா.?

எழுதியவர் : கயல்விழி (6-Dec-14, 9:32 am)
பார்வை : 1012

மேலே