எதுவென்கிறாய் நீ -கார்த்திகா
முன்னிரவுப் பொழுதுகளில்
தாழிட மறுக்கும்
நித்திரைக் கதவுகளில்
உன் முகம் என்றாய்
காதல் அழகியல்
காரணம் நீ
ஈர்ப்பு விசையில் சுழல்கிறேன் நான்
நீ இல்லா இடத்திலும்
சொன்னது நீ!
கண் துளைக்கும்
காரிகையின் நினைவு
உறக்கத்தை கடன் கேட்டதாம்
இரவுகளை எரிக்கும்
ஞாபகங்களுக்கு
பகற்பொழுது தெரிவதில்லையோ
வயதின் ஆர்வத்திற்கு
பெண்ணிதயத்தை விலைகேட்பது
என்ன நியாயம்
சூரியன் மோதி
உடைந்த பனித்துளிகளின்
கணக்கில் என்னை எங்கே தேடுவது
தோற்ற மயக்கத்தில்
தோற்பதில்லை காதல்
நீ விற்றுத் தீர்க்க
விலை மகள் போதுமே
சேர்த்துக் கட்டிய மொட்டுக்கள்
அவிழும் முன் இதழறுத்துத்
தேனுறுஞ்சும் வண்டுகளின்
அவசரத்தில் காதல் இல்லை
காதல் புதைக்க வழியெங்கும்
கல்லறை பரிசளிக்கும் நீ
உணர்ச்சிகள் தொலைந்த
உடலுறுப்புக்களின் கிளர்ச்சிகள் மடிந்த
கண் மங்கிய காலமொன்றில்
உனக்கும் எனக்குமான
வெற்றிடத்தை நிரப்பவல்லது
எதுவென்கிறாய்?