நான்

தெரிந்ததை எழுதுவதை விடவும் , தெரிந்து கொண்டு எழுதுவதை விடவும் , உணர்ந்து கொண்டதை எழுதுவது எப்பொழுதும் முழு வடிவம் பெற்று விடுகிறது எனக்கு...

ஆனால் , ஒவ்வொன்றையும் உணர்ந்த பிறகே எழுத வேண்டுமென்றால் , மழையின் சிலிர்ப்பையும் மழலையின் சிரிப்பையும் தவிர வேறு எதுவுமே எப்போதுமே என்னால் எழுத முடியாது...

தெருவோரக் குழந்தைகளின் ஏழ்மையை வருந்துவதை விட , அந்தக் குழந்தைகளின் சுதந்திரத்தையும் விளையாட்டையும் ரசித்து ரசித்துப் பார்ப்பவள் நான்...

எதையும் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத ஒரு நிலை , ஏழ்மை என்றே தோன்றியதில்லை எனக்கு...

ஏன் இப்படி நானென்று பல முறை நான் யோசித்ததுண்டு...

வறுமையிலும் சோகத்திலும் இழப்பிலும் கூட ஏதோ ஒரு ரசனையைக் கொண்டிருப்பது ஏனென்று...

யோசனைகளின் இறுதியில் , காரணங்கள் கிடைப்பதற்கு பதிலாக , நான் இப்படித்தான் என்ற முடிவே எனக்குக் கிடைத்தது , ஒவ்வொரு முறையும்...

நூறு மதிப்பெண்களை என்ன மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டேனோ அதே மகிழ்ச்சியோடு பத்து மதிப்பெண்களையும் பெற்றுக் கொண்டு இருந்திருக்கிறேன்...

எந்த ஒன்றும் , கிடைக்கும்போது என்ன நிறைவோடு இருந்திருக்கிறேனோ , அதே நிறைவோடு இழக்கும்போதும் இருந்திருக்கிறேன்...

சிரிப்பை வெளிப்படுத்துவதில் இருந்த முழுமை , அழுகையை வெளிப்படுத்துவதிலும் இருந்து இருக்கிறது எனக்கு...

பயங்களையும் தோல்வியையும் கூட ரசித்துக் கொண்டிருந்த அந்த ஒரு நொடியில் தோன்றியதுண்டு , நாளை இதே நேரம் இந்த பயம் என்னவாக மாறி இருக்குமென்று...

என்னுடைய மகிழ்ச்சியையும் முழுமையையும் நிறைவையும் என்றும் நான் சார்ந்து இருக்கவில்லை...

அவை , எனக்குள் உண்டு...

கவனக்குவியல் என்பது எனக்கு எப்போதும் ஒரு புள்ளியில் என் கவனத்தைக் குவிப்பதாய் இருந்து இருக்கவில்லை... மாறாக , ஓர் இடத்தில் நிற்காமல் சிதறிக் கொண்டே இருக்கும் என் எண்ணங்களை உற்று நோக்குவதாகவே இருந்திருக்கிறது...

என் எண்ணங்களோடு சேர்ந்து சென்று இறந்தகால மகிழ்வுகளோடும் எதிர்கால பயங்களோடும் பயணித்து முடித்து சோர்ந்து போய் ஒரு புள்ளியில் என் எண்ணங்களை மட்டும் மிதக்க விட்டு விட்டு நான் அவற்றை வேடிக்கைப் பார்க்கத் துவங்கும் நொடியில் , விடியத் துவங்கி இருக்கிறது , அந்த இரவு...

என் பாடுபொருள் 'நான்' என்ற ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது இன்றளவும்... ஏனென்றால் , என்னை அறிந்தவள் நான்.. தவிர என்னை மட்டுமே அறிந்தவள் நான்...


- கிருத்திகா தாஸ்...

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (8-Dec-14, 12:13 pm)
Tanglish : naan
பார்வை : 1272

மேலே