கூடாதோ என் இழவு
வெட்டன் விடுதியிலே
வேடன் குறத்தி மக
ஓலக் குடிசையிலே
எட்டில் கடைசி இவ
ஏழும் கரை சேர
தலை ரெண்டும்
தரை சாய
எட்டில் நான் மட்டும்
தனித்திட்டாய் தவித்தேனே
ஒற்றைக் குழி நிலமும்
சீதனமாய் போய்ச் சேர
ஒற்றைச் சீலையிலே
தனிச்சிட்டாய் தவித்தேனே
தனக்கே வழி இல்லை
இதில் தங்கைக்கா....
தனி உலை?
ஏழும் விலை போக
நடு வீதியிலே நின்றேனே
நிலவும் இரவோடு
மலரும் கொடியோடு
தனிமை நிலையோடு
என் வாழ்வோ பெரும்பாடு
வேடன் சாதியிலே
வேண்டாம் உறவென்றெ
சித்தம் தடுத்திருந்தேன்
நித்தம் வெறுத்திருந்தேன்
வந்தான் உழவன் மகன்
எந்தன் சோகம் உழுதிடவே
என்
வாழ்வைப் பழுதிடவே
ஊருக்கும் தெரியாமல்
கழுகுக்கும் அறியாமல்
ஒரு கருத்த இருட்டோடு
மனமானேன் அவனோடு
ஒற்றைப் பாய் வீடு
ஒரு குவளைக் கூழெனினும்
சோகம் பகிர்ந்தோமே
சொர்க்கம் சேர்ந்தோமே
பால் சுரவா மார் கண்டு
மழலை சாகாமல்
குவளைக் கூழதை
மூன்றாய் பகிறாமல்
எனை
மலடாய் படைத்தானோ
அந்த இறைவன் தான்
சபித்தானோ
வேண்டாம் உறவென்றே
தோளில் சாய்த்த மகன்
ஏழாம் எட்டோடு
இதயம் பிடித்தானே
இடியைத் தினித்தானே
பல ஆண்டு கடந்தாச்சு
எனக்கு
பத்தெட்டு நிறைவாச்சு
தனிமை நிலையாச்சு
அம்மம்மா
உயிரும் சுமையாச்சு
உடலும் சரியில்லை
உணவுக்கும் வழியில்லை
உடற்சீக்கில் கழிந்தாலும்
மாற்றுக்கு வழியில்லை
போதும் இவ்வளவு
கூடாதோ என் இழவு....
நெடுஞ்சாலைத் திட்டமொன்னு
எங்கேயோ புறப்படுதாம்
ஏ வீட்டு நடுவினிலே
ஏதோ புலப்படுதாம்
குடிசை களையத்தான்
ஆளு பேரு வாராகன்னு
நிலமாளும் தாசில்தார்
சொல்லி வச்சுப் போனானே
அதுக்குள்ள அரளி வெத
வசஞ் செஞ்சா போதும்
உயிர் போன உடல்
மட்டும்
இங்க அடக்கிட்டா போதும்