சாதிகள் இல்லையடி பாப்பா-தேவி

நகரத்து நாகரிகம்
முளைவிட்டு துளிர்க்கும்
பழைய கிராமம்

இந்த தலைமுறையில் தான்
புத்தகப்பை தூக்க ஆரம்பித்தான்

சாதிகள் இல்லையடி பாப்பா
பாட்டு பதிந்து போய் விட்டது.
மனதில்.

நம்பி விட்டான்.
பாரதி சொன்னது
பொய் ஆகாது என்று.


பருவ வயதில்
அறிவுடன் அழகும் பெற்ற
மங்கையை காதலித்தான்.

சாதிகள் இல்லையடி பாப்பா
சொன்ன பாரதியை நம்பி.

அவளும் தான் அந்தஸ்து
அதிகாரம் எல்லாம்
மறந்து அவனோடு,
அவன் அறிவையும் காதலித்தாள்.

நாட்கள் மாதங்கள் ஆகி
மாதங்கள் வருடங்கள் ஆகி
பள்ளி கல்லூரி தாண்டி
காதல் வளர்ந்தது.

வீட்டுக்கு தெரிந்து
விரட்டியபோது
அவன் உறவில் ஒரு இளகிய
நெஞ்சம் அவர்களை சேர்த்து வைத்து
கண்ணுக்குள் வைத்து காத்து வந்தது.

மாதங்கள் உருண்டோடியது
வெறி பிடித்த நெஞ்சங்கள்
பிரித்து வைக்க ஊர் ஊராய்
ஜோடியை தேடியது.

ஒற்றன் தந்த செய்தியை
வைத்து தேடிப்போனது.


அவர்களின் மகிழ்ச்சிக்கு
சாட்சியாய் புத்தம்
புதிதாய் சிசு ஒன்று
வளர்ந்தது அவள் வயிற்றில்.


இனிப்பு வாங்கி கொண்டாட
சென்றவனை வழியில்
மடக்கி வாய் பேச விடாமல்
குத்தி குதறி கொன்று போட்டுவிட்டு
அவளை தேடி சென்றது
கொலைகார கும்பல்.

வந்து விட்டான் ஆசை கணவன்
என்று திறந்தவள்
முடியை கொத்தோடு பிடித்து
சுவற்றில் அடித்து
கொண்டவனை கொன்று விட்டதை
சொல்லி அவளை கொல்லாமலே கொன்றார்கள்.

என் பிள்ளையை
அப்பன் பேர் தெரியாமல்
செய்து விட்டீர்களே
என்றழ ,

இது ஒரு கேடா

கூப்பிடு அந்த மருத்துவச்சியை ,

ஒரு கிடா மீசை சொல்ல

கத்தி கதறி தடுக்க
முயன்றும் முடியாமல்
போனது அவள் வயிற்று
பிள்ளையை அவளால்
காப்பாற்ற .

சாதியைகெடுக்க வந்த சண்டாளி
அடித்து துவைத்தது
குற்றுயிரும் குலையுருமானவளை.

உனக்கு நம் சாதிகாரனுடன் கல்யாணம்
என்று சொல்லி சொல்லால் கொன்றது
சொந்தங்கள்.

ஆசை காதலனை இழந்து
கர்பத்து குழந்தையை தொலைத்து
நின்றவளை
புது பெண்ணாக்கி
பெண்டாட்டி ஆக்கி
சொத்தை சொந்தம் கொண்டாட
காத்திருந்தான் சாதிக்காரன்.

புத்தி பேதலித்து
நடப்பது புரியாமல்
மலங்க விழித்தவள்
மீண்டும் மணப்பெண் ஆகிபோனாள்

சாதிகள் இல்லையடி பாப்பா
பாட்டையும் பாரதியையும்
நம்பியவன் ,
அநாதை பிணமாய்
கிடந்தான் அத்துவான காட்டில்.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (10-Dec-14, 1:55 pm)
பார்வை : 220

மேலே