இரவு முதல் விடியல் வரை

அது விழுப்புரம் பேருந்து நிலையம் .நேரம் நள்ளிரவு இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது .
இருளை , மேகம் சூழ்ந்து மேலும் அழகு சேர்த்து கொண்டிருக்க , லேசான மழைத்தூரலுடன் , மிதமான காற்று வீசிக்கொண்டிருந்தது . தேநீர் வட்டலில் ஆவி பறப்பது நன்றாகவே தெரிந்தது .

ராகவ் ராஜன் , கதையின் நாயகன் . இருபத்து ஏழு வயதே ஆன சுயதொழில் புரியும் இளைஞர் . வேலையை முடித்துவிட்டு , திருச்சி செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார் . மறுநாள் முகூர்த்த தினம் என்பதால் ஒரு சில பேருந்துகள் மட்டுமே உள்ளே வந்து சென்று கொண்டிருந்தன .

நள்ளிரவு என்பதால் ஓரிரு தலைகள் மட்டுமே காணப்பட்டது .அவர்களையும் திருநங்கைகள் ஆசையுடன் அழைத்த வண்ணம் இருக்க , வேகமாய் நுழைந்த திருச்சி பேருந்து ஒன்று , நிலையத்தை சுற்றி வந்து நின்றது .

பேருந்தினுள் இருவர் அமரும் இருக்கை ஒன்று மட்டுமே காலியாக இருந்தது . அதில் அமர்ந்து பயணச்சீட்டை பெற்றுக்கொண்ட ராஜன் , வாடைக்காற்று வீசியதால் ஜன்னலை சாத்தியவாறு கண்களை மூடி அயர்ந்தார் .

" வீசும் காற்றுக்கு உண்மை தெரியாதா " என்று இனிதாய் கைபேசி அழைக்க ,
" பேருந்தில் ஏறிவிட்டேன் அப்பா , விடியல் காலை திருச்சி வந்து விடுவேன் " என்று ராகவ் குரல் அதிர்ந்தே ஒலிக்க, " இல்லை அப்பா 'எண்பது' மட்டுமே வசூல் வந்தது " என்றதும் அழைப்பை துண்டித்து மீண்டும் கண் மூடினார்.

நேரம் சரியாக மூன்று தொட்டு இருக்க , " சார் , சார் " என்று குரல் கேட்டு , திடுக்கென விழித்தார் ராஜன் . அழைத்தவர் நாற்பது வயதிற்கு உட்பட்ட ஒரு பெண் . என்ன வேணும் என்று கேட்க , " இல்ல சார் மழைக்கு என் இருக்கைக்கு மேலே பேருந்தில் தண்ணீர் சொட்டுகிறது . நீங்கள் தவறாக எண்ணவில்லை என்றால் இங்கு அமர்ந்து கொள்கிறேன் " என்றவள் , சரி சொல்லும் முன்னே வேகமாக அமர்ந்தாள்.

நேரம் தோராயமாக நான்கு இருக்கும் . ஓட்டுனரை தவிர , பேருந்தில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் . தன்னுடைய கை பையை யாரோ இழுக்க முயல்வது போல் உணர்ந்த ராஜன் விழித்து பார்த்து அதிர்ந்து போனார் . அருகிலுள்ள பெண் , "" பணத்தை கொடுத்து விடு , இல்லையேல் என்னிடம் தவறாக நடக்க முயன்றாய் என்று கூச்சலிடுவேன் "" என்றாள் .

அதிர்ச்சியில் உறைந்த ராஜன் , "" கூப்பிடு பார்போம் "" என்றார் . நொடிப்பொழுதில் தன் மார்பு தெரிய , ரவிக்கையை கிழித்தவள், "" பணத்தை கொடுத்து விடு இல்லையேல் , நீ கம்பி என்ன வேண்டியிருக்கும் "" என்றாள் . செய்வதறியாது , எட்டு நூறு ரூபாய் கட்டுக்களை எடுத்து கொடுத்தார் .

பேருந்து சரியாக , உளுந்துர்பேட்டை சுங்க சாவடியை தாண்டி நிற்க , ஓட்டுனர் சிறுநீர் கழிக்க கீழே இறங்கினார் . அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டவள் , பணக்கட்டுகளை முந்தானையில் சுற்றிக்கொண்டு இறங்கி ஓடினால் . ராஜன் , "" திருடி திருடி "" என்று கூச்சலிட , அனைவரும் அவளை துரத்தி சென்றனர் .

அந்தோ பரிதாபம் ..

தண்டவாளத்தை கடக்க முயன்றவள் , வேகமாக வந்த தொடர்வண்டியில் சிக்கி , தூக்கி எறியப்பட்டால் . எட்டு பணக்கட்டுகளும் திசைக்கு ஒன்றாக சிதறி விழுந்தது . சுற்றி இருந்தவர்கள் பணத்தை எடுத்து ராஜனிடம் கொடுக்க முயல ,,,

அவரோ ..

"" ஹலோ , இது நூற்றி எட்டா ? , சார் உளுந்துர்பேட்டை சுங்க சாவடி அருகினில் , தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ஒருத்தி அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள் "" என்று அவசர ஊர்தியை அழைத்துக் கொண்டிருந்தார் .

அவள் மீது புகார் ஏதும் கொடுக்காமல் , அவசர ஊர்தியில் ஏற்றி அனுப்பி வைத்தார் . அங்கு ராஜனின் கருணை உள்ளத்த்தை கண்டு பாராட்டாதவர் யாரும் இலர் . பணத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தார் , அந்த உயர்ந்த மனிதர் .

கருத்து - 1 ;

"தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ,
இறுதியில் தர்மமே வெல்லும் "

கருத்து - 2 :

உனக்கு தீங்கு செய்பவருக்கும் ,
நன்மையே செய் "

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (10-Dec-14, 8:21 pm)
பார்வை : 326

மேலே