சிறப்பு பத்தி - உணர்வொன்றி இருத்தலே உண்மைக் காதல்
நம் குடும்பம் மாத இதழில் கடந்த மே 2013ல் வெளிவந்த கட்டுரை
அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு'' என்று கேட்ட பாட்டி மாறிவிட்டாள். "நாலு எழுத்துப் படித்தால்தானே நல்லது கெட்டது தெரியும். புருசனைத் தெரிஞ்சிக்கவாவது படிப்பு வேணாமா'' என்கிறாள் இன்று. "ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுக்கும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கிட்டு அலைகிறேன்'' என்ற தாய் மாறிவிட்டாள். "ஒண்டியா நின்னாலும் எல்லாத்தையும் காப்பத்தற வக்கு வேணும், அடங்கிப் போகவும் தெரியணும். அடக்கவும் தெரியணும். இணையா நின்னாத்தானே குடும்பம்'' என்கிறாள் இன்று.
இந்தப் பாரம்பரியத்தில் வளர்ந்தாலும், கணிப்பொறிப் படிப்பில் பல்கலைக்கழகம் கண்டாலும், கைக்கெட்டிய தூரத்தில் பல நிறுவனங்களின் நிர்வாகப் பதவிகளே காத்துக் கிடந்தாலும், "உனக்கு அடிமையாய் வரக் காத்திருக்கிறேன்'' என்கிறாள் மகள்.
காதல் என்பது வாலிப மனங்களில் தவறாகத்தான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. காதல் என்பது புனிதமான அர்ப்பணிப்புதான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஒருவரை இன்னொருவருக்கு அடிமையாய் அர்ப்பணிப்பது அல்ல. இருவரும் சேர்ந்து தங்களைக் காதலுக்கு அர்ப்பணிப்பது.
அப்படி அர்ப்பணிப்பவர்களே ஒருவரை ஒருவர் உயர்வாய் மதித்து நடப்பர். ஒருவரை ஒருவர் ஓயாது உயர்த்தி வாழ்வர். "கண்ணுக்குள் வைத்துக் காப்பேன்'' என்று வீட்டுக்குள் வைத்து பட்டும் பவளமும் தந்து கிளிப்பிள்ளை ஆக்கமாட்டார்கள்.
மணமகனின் இடது கையை மணமகளின் வலது கையில் ஒப்படைக்க மணமகளின் இடது கை மணமகனின் வலது கையில் உள்ளார்ந்த அன்போடு ஒப்படைக்க வேண்டும். அதுதான் வாழ்க்கை. மற்றதெல்லாம் திருமணம் என்ற பெயரில் உறுதி செய்யப்படும் அடிமைத்தனங்கள்.
"தூக்கிச் சுமப்பதல்ல வாழ்க்கை. இணையாகக் கைகோர்ப்பதும், கைகோக்கும் வலுவினை தன் துணைக்குத் தானே உருவாக்கித் தருவதும்தான் வாழ்க்கை.'' ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல. சுயகெளரவத்தைச் சிதைக்கும் எதுவுமே உறவு அல்ல.
மணவாழ்வு என்பது அர்ப்பணிப்பின் உச்சம் என்றே சொல்லலாம். நீடித்த, மாறாத, உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால் மட்டுமே மணவாழ்வு சிறக்கும். நம்முடைய செயல்கள் எல்லாமே உணர்வை மட்டுமே முன்னிறுத்தியதாக இருக்கக் கூடாது. இன்பச் சூழலில் மட்டுமல்ல, நமக்கு பிடிக்காத அசாதாரண சூழலில் கூட அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ வேண்டும். அது வெறும் வார்த்தையில் மட்டுமல்ல, செயலிலும் இருக்க வேண்டும். சில வேளைகளில் செயலில் மட்டுமல்ல, வார்த்தையாலும் இதை துணையிடம் வெளிப்படுத்த வேண்டும்.
சட்டப்படி இணைவது மட்டும் திருமண வாழ்வாகி விடாது. நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றும் துணையின் நன்மையே தனது நன்மை என்பதாக இருக்க வேண்டும். இதற்கு இருவருக்கும் ஆழமான அன்பு வழித் தொடர்பும், புரிதலும் வேண்டும்.
சமூகத்தின் முன் கலாசாரத்தின் காவலர்களாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல்வதில் அர்த்தமில்லை. வாழ்வுக் காலம் மிகக் குறுகியது. ஆடம்பரமான வாழ்விற்கு அடிமையாகி பிறருக்காக வாழத் தலைப்பட்டால் வாழ்க்கை மிக நீண்ட பாலைவனப் பயணமாகவே அமைந்துவிடும்.
இன்று நம் குடும்பத்தில் ஆழமான அர்ப்பணிப்பு வாழ்வு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உற்சாகமெடுத்தால் உணர்வொன்றிய உண்மைக் காதலர்களாகவே நாம் வாழ முடியும்.