தேவதையின் மறுபக்கம் - 8 - யாழ்மொழி

அன்பு பரிசுகளோடு
ஆயிரம் கதைகளும் சேர்த்து
ஆசையுடன் அவள் வீட்டின்
அழைப்பு மணியடித்தேன்

வாடிய முகத்தோடு
வாசற்கதவு திறந்த
தேவதையின் தாயை கண்டு
வாட்டத்தின் காரணம் கேட்க

கட்டியணைத்துக் கொண்டு
கதறியே அவர் சொல்ல
கண்களை நம்பமுடியாது
காண்பதை மறுக்கமுடியாது
கலங்கி நின்றுவிட்டேன்

திருமண முடிவெடுத்து
பெண்பார்த்தும் சென்றுவிட்டனர்
நிச்சயம் செய்வதற்கும்
நாள்குறித்து சொல்லிவிட்டனர்

மறுப்பு சொல்லியவள்
காரணம் சொல்லவில்லை
காதல் உண்டா என்று
கேட்டாலும் பதிலில்லை

எல்லாம் சரியாகுமென்று
ஏற்பாடு செய்த நிலையில்
தேவதையை காணவில்லை
தேடாத இடமில்லை - என்ற
திடுக்கிடும் தகவல்கேட்டு
திகைத்துவிட்டேன் நானும்....

மூன்றுநாட்கள் கடந்தபின்னும் - அவள்
முகவரி தெரியவில்லை - ஊரார்
முகம் சுழிக்கும் காரியத்தை
அவள் செய்ய நியாயமில்லை
அதை என் மனமும் ஏற்கவில்லை

தேடுவதென்று முடிவெடுத்து
திருகிவிட்டேன் மூளையினை
தேவதையோடு செல்லும் - அந்த
தேவாலயம் நினைவுவர
வாகனத்தை கிளப்பிவிட்டேன்

ஆலயத்தை நெருங்கியதும்
நினைவுகள் அணைத்துக்கொள்ள
கண்ணீரோடு காத்திருந்தேன்
பரிட்சயமான பாதிரியாருக்காக

வந்தவருக்கு வணக்கம்சொல்லி
வந்ததன் நோக்கம்சொல்லி
வருத்தத்தினை தெரிவிக்க
விபரம் சொல்ல ஆரம்பித்தார்

ஆறுமாத காலமாகவே - அவள்
அடிக்கடி வந்திருந்தாள்
தேவாலய வழக்கப்படி
திருச்செந்தூரும் சென்றிருக்கிறாள்

இதில் எதையும் அறியேனென்று
என் வியப்பில் கண்டுகொண்டவர்
என்னோடு வாமகளே
எல்லாம் விளங்குமென்றார்

கலவரத்தோடு பின்தொடர்ந்தேன்
தேவாலயத்தின் பின்புறத்தில் - ஓர்
அழகிய அடுக்குமாடி வீடு
அதன் உள்ளே நுழைந்தவர்
உதவியாளரை அழைத்தார்

காதில் எதையோ சொல்லி
என் பக்கம் கைகாட்ட
கணிவோடு உதவியாளரும்
எனை வழிநடத்தி சென்றார்

பார்வையாளர் அறையி லென்னை
காத்திருக்க சொல்லிவிட்டு
வந்தவரும் சென்றுவிட
வாசைலையே பார்த்திருந்தேன்

காரணம் புரியாத - என்
காத்திருப்பிற்கு பின்
கன்னித்துறவி உடையில்
கண்ணெதிரே வந்து நின்றார்

என் ( நம் ) "தேவதை"


( தொடரும் )

எழுதியவர் : யாழ்மொழி (12-Dec-14, 4:00 pm)
பார்வை : 110

மேலே