கள்ளக் கபடமற்றக் காதல்

என்னைச் சுற்றி அறியா முகங்கள்
அவள் மட்டும் என்னை அறிவாள்.
மற்ற முகங்களைப் பார்ப்பது போல்
வெகுளியாய் விரல்களைப் பிசைந்த வண்ணம் இருந்தேன்
அவள் அறிவாள் என்ன வினா எழுப்பினாலும்
ஏதும் அறியாதான் போல் நிற்பேனென இருப்பினும்
'உன் பெயர் என்ன' என்றாள், கடினக் குரலில் ...
பயத்தில் எழுந்து நிற்க ...
விட்டால் இறங்கி ஓடி விடும் எண்ணத்தில் இடை உடை
ஒரு கையால் இழுத்துப் பிடித்த வண்ணம் நின்றேன்.
தொடர்ந்து அடுத்த வினாவும் எழுப்பினாள்,
எங்கிருந்து வருகிறாய் என்றாள்.
பெயர் சொல்ல வாயெடுத்து பாதியில் முடித்துக்கொண்டேன்.
அருகில் இருந்த முகங்கள் எல்லாம் என்னையே பார்க்க
வெட்கித் தலைக் குனிந்து நின்றேன்.
என் நிலை அறிந்த அவள் அருகில் வந்து முத்தமிட்டாள் ,
அவள் எண்ணம் உணர்ந்தேன்,இருப்பினும்
பயத்தில் இருந்து மீளாதவன் போல் நின்றேன்.
ஒரு கவரை எடுத்துக் கையில் கொடுத்து விட்டு ,
என் பெயர் சீதா என்று சொல்லிச் சென்றாள்,
சென்ற சில நிமிடங்களில் மணி அடித்தது,
''பளிச்''சென்று ''லைட்'' எரிந்தது
கவரைப் பிரித்துப் பார்த்தேன்,
உள்ளே இதய வடிவில் மிட்டாய்....
மறக்க முடியாத,
ஒன்னாம் வகுப்பின் முதல் நாள் அனுபவம்
சீதா டீச்சரின் ஸ்பரிசத்துடன் ஆரம்பித்தது...

எழுதியவர் : பார்வைதாசன் (14-Dec-14, 3:39 pm)
பார்வை : 435

மேலே