அகர முதல எழுத்தெல்லாம்

காலத்தை கி மு கி பி என்று கணக்கிடபடுவதின் அடிப்படையாகக் கொண்டே, இங்கே உலக இயக்க விசைகள் கணிக்கப் படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் தமிழனுக்கு இந்த கால கணிப்பு என்பது ஏற்புடையதாக இருந்தாலும்கூட, அது ஏற்புடையது அல்ல என்றே எனக்கு கூறத் தோன்றுகிறது.

ஏனென்றால், இந்த உலகிற்கே மிக பழமையானவன் தமிழன். ''ஏன்'' உலகின் முதல் உயிரினமே நம்ம லெமுரியா கண்டத்தில்தான் தோன்றியதாகவும், மனிதன் இங்குதான் உருவானான் என்றும் பல சான்றுகள் கூறுகின்றன. இந்த சான்றுகளை வைத்துக்கொண்டு இந்த உலகம் தனது ஆராட்சியை லெமுரியா கண்டத்தில் தொடங்கி இருந்தால், தமிழனின் வரலாற்றினை உலகம் அறிந்து இருக்கும். ஆனாலும் தமிழன் பெருமை அடைவதை இந்தியாவின் எந்த மாநிலமும் விரும்பாது என்பது வேறு விடயம். தமிழனுக்கு முதல் எதிரியே இந்தியாதான் என்ற ரீதியில்தான் இன்றும் நிலைமைகள் தொடர்ந்துகொண்டு இருப்பதாகவே தோன்றுகிறது. இப்படி இருக்கையில் கி மு கி பி என்பது தமிழனின் தொன்மையான வரலாற்று கணிப்பை விழுங்கிவிட்டதாகவே தோன்றுகிறது.

இந்த உலகின் முதல் மனிதன் தமிழன் என்றால், த மு, த பி - (தமிழ் பிறப்பிற்கு முன் - தமிழ் பிறப்பிற்கு பின்) என்றோ அல்லது தி மு தி பி - திருவள்ளுவருக்கு முன் அல்லது திருவள்ளுவருக்கு பின்) - என்று அல்லவா நியாயமாக கணிப்பு கணக்குகள் இருக்க வேண்டும். தமிழன்தான் மூத்தக்குடி என்பதற்கான ஆதாரங்கள்தான் நிறைய இருக்கின்றனவே- இன்னும்கூட லெமுரியாவிற்கு உள்ளே ஆதாரங்கள் அழியாமல் இருக்கின்றனவே, இதை யாராவது யோசிக்கவோ ஆய்வு செய்யவோ முன் வருகிறார்களா, அப்படியே வந்தாலும் அதை பெரிதாக யாரும் கண்டுகொள்வதே இல்லை, உலக பேரினவாதமோ அதை அப்படியே அமுக்கிவிடுகிறது.

உலகின் முதல் மொழி தமிழ் என்றும், உலகில் பேசப்படுகிற எல்லா மொழிகளிலும் தமிழ் சொற்கள் கலந்து இருக்கின்றன என்பதையும், சில ஆராய்சிகள் நிருபணம் செய்கின்றன. உலகின் பல நாடுகளில் எழுத்துக்கள் கண்டுபிடிக்காத பொழுதே தமிழ் புலவர்கள் பாடல்கள் இயற்றி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நமது தாய்மொழியை வடமொழி விழுங்கிவிட்டது. ஆம்...! உலகமே போற்றுதலுக்குரிய பழமை வாய்ந்த இலக்கண இலக்கியங்களை கொண்ட தமிழ் மொழியை தமிழனே அலட்சியப்படுத்தும்பொழுது, அடுத்தமொழி பேசுகிறவன் அழித்துவிடத்தானே நினைப்பான்.

திருவள்ளுவருக்கு முன்பே தமிழ் கண்டுபிடிக்கப்பட்டு, அது நன்றாகப் பேசப்பட்டு- எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இலக்கண இலக்கியங்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருந்து இருக்கின்றன. அதனால்தான் ஏழு சீர் இரண்டு அடிகளில் உலக பொதுமறையை உருவாக்கினார் திருவள்ளுவர். திருவள்ளுவரில் இருந்து நாம் நமது கால கணிப்பை கணக்கிட்டு கொண்டாலும், திருவள்ளுவருக்கு முன்பே தமிழ் செம்மையடைந்த மொழியாக இருந்து இருக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கிருத்துவ பிறப்பிற்கு 33 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆகையினால் திருவள்ளுவரில் இருந்து நாம் கணக்கெடுத்து கொண்டு பார்த்தால் இப்பொழுது நமக்கு 2047 ஆம் ஆண்டு நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் உலகம் 33 ஆண்டுகளை குறைத்தே கணக்கிட்டு வருகின்றது. மேலும் லெமுரியாவிற்கு முன்பு லெமுரியவிற்கு பின்பு என்று கணக்கிட்டால் தமிழனின் வயது இந்த உலகை இன்னும் வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழனுக்கு கடவுள் இயற்க்கை என்ற ஒன்றே ஒன்றுதான், சூரியனையும், காற்றையும், மரங்களையும், கற்களையும், சில விலங்குகளையும், இறந்துபோன முன்னோர்களையும் கடவுளாக தொழுதான் தமிழன். தமிழனுக்கு மதம் சாதி எதுவுமே இல்லை என்பதை சத்தியமாக நம்புங்கள்.

கூட்டம் கூட்டமாக சிறு சிறு குழுக்களாக வசித்தார்கள். ஒரு ஒரு குழுவிற்கும் ஒரு தலைவர்கள் இருந்தார்கள், அவர்கள் அந்த குழுவை வழிநடத்துவது வழக்கம்தானே, அப்படி தலைவனின் பெயரை குறிப்பிட்டே அந்த குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அடையாளப்படுத்தப் பட்டு இருக்கலாம், அதாவது சோழன் என்றால் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், சுந்தரமூர்த்தி சோழன் என்றும். பாண்டியன் என்றால், சுந்தர பாண்டியன், கலையரச பாண்டியன், நெடுஞ்செழிய பாண்டியன் இப்படிதான் அடையாளப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அது போலதான் நாகர்கள் வேடர்கள் இப்படி அழைக்கவும் காரணமாக இருந்திருக்கும் என்பது எனது கணிப்பு. மேலும் தொழிலை சம்பந்தபடுத்தியும் சில வகையறா குழக்களை அழைக்கப்பட்டு இருக்கலாம், அதாவது மீன் பிடிப்பவன், கல்லுடைக்கிரவன், படகோட்டுறவன், மரம் வெட்டி, மாட்டுக்காரன் இப்படியும் அழைக்கப்பட்டு இருக்கலாம். (ஒரு குழுவில் ஒரேத் தொழிலை பலரும் செய்வதும், அப்பன் செய்த தொழிலை மகன் செய்வதும் அப்பொழுது வழக்கமாக இருந்த விடயம்தானே).

மற்றப்படி தமிழனுக்கு சாதியோ மதமோ எதுவுமே கிடையாது. கிருத்துவம், இஸ்லாம், இந்து இது எல்லாம் தமிழனுக்கு சம்பந்தமே கிடையாது. சிவன், கிருஷ்ணன், அல்லா, இயேசு இது எல்லாம் தமிழனின் கடவுள் இல்லை. கிருத்துவம். மொகலாயம், சைவம், வைணவம், சமணம், புத்தம், சாளுக்கியம் இது எல்லாம் தமிழனுக்கு சம்பந்தம் இல்லாத இனங்கள்.

தமிழர்கள் வாழ்ந்த நிலபரப்பை திராவிட தேசம் என்றே அழைக்கப்பட்டதால் தமிழர்கள் திராவிடர்கள் என்றே பிற்காலங்களில் அழைக்கப்பட்டார்கள். ஆரியர்கள் ஊடுறுவலுக்குப் பிறகே இந்து, சைவம் வைணவம் போன்ற இனங்கள் உருவாக்கப்பட்டன. சிவன், கிருஷ்ணன், பிரம்மன் போன்றவர்கள் ஆரிய இன தலைவர்களாக அவர்களின் மூதாதையர் காலங்களில் வாழ்ந்தவர்கள் என்பதால். அவர்களை தலைவர்களாக கொண்டு பல கதைகள் ஆரியர்களால் புனையப்பட்டன, பிறகு அவர்களையே கடவுள் என்று கூறி திராவிட தேசங்களில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்படி கதை சொல்லிகள்தான் தேவர்கள், முனிவர்கள், கடவுள் அடியார்கள் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்கள். இதை நம்பி தமிழர்களும் ஏமார்ந்தார்கள், ஆரியர்கள் பிழைப்பு நடந்ததோடு அவர்களின் கைகள் ஓங்கின. நம்மவர்களின் நடு கல்லு சாமியை கண்ட பிறகு, அவர்களும் கடவுள்களுக்கு உருவங்களை உருவாக்கினார்கள்.

பிற்காலங்களில் தமிழர்களும் கடவுள் பரப்புரைகளை மேற்கொண்டனர். ஆரியர்களின் பேச்சுக்கு உடனே தலை சாய்த்தவர்கள் உயர்ந்த சாதியர்களாக அழைக்கப்பட்டனர். அதாவது தேவர் இனம், முனிவர் இனம், ஆழ்வார்கள் இனம், அடியார்கள் இனம், தாசர்கள் இனம், என்றெல்லாம் அழைக்கப்பட்டார்கள். ஆரியர்களின் கோட்பாடுகளை நம்ப மறுத்தவர்களும், ஏற்க மறுத்தவர்களும் தீண்ட தகாதவர்கள் என்றும், அவர்கள் தொட்டால் தீட்டு என்றும் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்.

ஆகையினால் இன்று ஆதி திராவிடர்கள் என்று அழைக்கப்படுகிற தாழ்த்தப்பட்ட இனமே உண்மையான தமிழர்கள் என்று பகிரங்கமாகவே கூறத்தோன்றுகிறது. ஏனென்றால், அந்த காலங்களில் இருந்தே பல ஆரிய ஊடுருவல்களையும் தாண்டி, அவர்களின் பொய்யையும் புரட்டையும் நம்பாமல் இன்றும் ஆதி திராவிடர்களாக இருக்கும் இந்த உண்மையான தமிழ் இனத்திற்கு நாம் வணக்கம் செலுத்துவதில் தவறென்ன இருக்க முடியும்?. (அப்படி என்றால் மற்ற சாதிக்காரர்கள் மதக்காரர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா என்று யாரும் கேட்க வேண்டாம். எல்லோருமே தமிழர்கள்தான் ஆனால் நீங்கள் மாறி இருக்கிறீர்கள், அல்லது மாற்றப்பட்டு இருக்கிறீர்கள், ஆனால் அவர்கள் நிலைப்பாடு மாறாமல் இருப்பதே ஆச்சரியமான விடயம் என்பதை ஒப்புகொள்ள வேண்டும் என்பதே எனது கூற்று).

திருவள்ளுவர் எந்த மதமும் கிடையாது, எந்த சாதியையும் கிடையாது, அவர் ஒரு தமிழ் இனத்தவர், அவருடைய உருவம்கூட கற்பனையான உருவம்தான் இப்பொழுது உள்ளது. சாதி மதம் ஏற்றத்தாழ்வுகள் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதிதான் நம்ம அய்யா திருவள்ளுவர் என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகிற்கே தேவையானக் கருத்தை, முக்காலத்தையும் உணர்ந்து ஆராய்ந்து சொன்ன அந்த மகா பேரறிவாளன் ஒரு தமிழன் என்பதில் நமக்கு எத்தனை பெருமை. அப்படிப்பட்ட திருக்குறளில்கூட எங்கேயும் இந்து, முஸ்லிம், சைவம், வைணவம், பௌத்தம், சீக்கியம், சமணம், இப்படி எதாச்சும் கூறப்பட்டு இருக்கிறதா?. சிவன், முருகன், புத்தன், இயேசு, அல்லா, கிருஷ்ணன், பிரம்மன், இப்படி எந்த கடவுள் பெயராவது இருக்கிறதா? அல்லது பறையன், பல்லன், கோணன், படையாச்சி, செட்டி, ரெட்டி, கள்ளன், கவுண்டன் என்ற ஏதாவது ஒரு சாதி பெயராவது குறிப்பிடப்பட்டு இருக்கிறதா?. யோசித்து பாருங்கள் தமிழர்களே. 1330 குறளையும் படித்துப் பாருங்கள், ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய தமிழனின் புனித நூல் அதுதான், புனித நூல் மட்டுமல்ல அறநூலும்கூட. இப்படி ஒரு நூலை நாம் வைத்துகொண்டு கீதையையும், பைபிளையும், குரானையும் போற்றிக்கொண்டு இருக்கிறோம், அவைகள் எல்லாம் மதகோட்பாட்டு மார்க்க நூல்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன. ஆனால் எல்லா மதத்தவனும், எல்லா மனிதனும் படிக்கவேண்டிய நூல் திருக்குறள்.

தமிழனின் ஒரே கடவுள் இயற்க்கை, அந்த இயற்க்கையைதான் வள்ளுவன் இறைவன் என்று குறிப்பிடுகிறான். ஆனால், நம்ம ஆட்கள் அந்த திருக்குறளையும் திரித்து எழுதிவிட்டார்கள்.

எப்படி திரித்து எழுதினான் என்பதை பாருங்களேன், முதல் திருக்குறள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துகளுக்கெல்லாம் முதல் எழுத்து அ, அந்த அகரமே அனைத்து எழுத்துக்களுக்கும் தலைமை. அதே போல் இவ்வுலகிற்கு அடிப்படையாக விளங்குகிரவன் இறைவன், அந்த இறைவனை முதற்கொண்டே உலகம் இயங்கும். - இதுதான் வழமையாக இந்த குறலுக்கு கூறப்படும் விளக்கம்.

ஆனால் கீழே உள்ள எனது உண்மையான குறளை பாருங்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகலவன் முதற்றே உலகு.

பகலவன் - சூரியன்
பகவன் - கடவுள். - இவர்கள் ''பகலவன்'' என்பதை ''பகவன்'' என்று திரித்து இருக்கிறார்கள். ல என்ற எழுத்தை நீக்கி இருக்கிறார்கள், இது ஆய்வின்மூலம் யூகித்த விடயம் ஆகும். எனது விளக்கத்தை கீழே பாருங்கள்.

எழுத்துக்களுக்கெல்லாம் முந்தன்மையான எழுத்து அ, அந்த அகரமே அனைத்து எழுத்துக்களுக்கும் மூலம். அதே போல் உலகம் தோன்றிய காலங்களில் இருந்து இருக்கின்ற பகலவனை (சூரியனை) முதற்கொண்டே இந்த உலகம் இயங்குகிறது. - இது என்னுடைய கருத்து அல்ல, திருவள்ளுவர் இந்த குறளில் கூறி இருப்பதே இதைதான். (தமிழர்கள் சூரியனை வணங்குவார்கள் என்பது வரலாற்று உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றே நினைக்கிறேன்).

ஆரியர்கள் ஊடுருவிய பிறகான காலங்களில், சாதி மதங்கள் ஊடுருவும் முன்பு, தமிழர்கள் மூன்று இனங்களாக வாழ்ந்தார்கள். ''(இந்த காலகட்டங்களில் மதங்கள் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கி இருந்தது என்றே சொல்லலாம். மனிதநேயம் மிகுந்த காணப்பட்ட இந்த சமயத்தில் நல்லவர்கள் நிறைய வாழ்ந்தாலும். பணக்காரன் ஏழை என்ற ஏற்றத்தாழ்வுகள் மிகுந்தே காணப்பட்டது)''. மூன்று இனங்களாக பிரிக்கப்பட்ட நாம் சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள் என்று விளிக்கப்பட்டோம். பிறகு இவர்களுக்குள்ளும் சாதிகள் ஊடுருவின. மதம் என்றே பெரிய வட்டங்களும் முளைத்தன. ஆரியர்களின் சாதிமத கடவுள் திணிப்புகள் தமிழ் மன்னர்களைக்கூட விட்டுவைக்கவில்லை. இப்படித்தான் தமிழன் தனது அடையாளங்களை தொலைத்தான், இன்றும் தொலைத்துகொண்டு இருக்கிறான். உலகே போற்றப்பட வேண்டிய தமிழ் இனம் இன்று சின்னாப்பின்னமாகி கிடக்கிறது.


-------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (16-Dec-14, 5:03 pm)
பார்வை : 1061

சிறந்த கட்டுரைகள்

மேலே