திரைப் பறவை 3

திரைப் பறவை 3

சினிமா நமக்கு எல்லாமாய் இருக்கிறது..... நிழலின் தொடர்ச்சியில் நிஜங்கள் நிஜமாய் முகமூடி கழற்றுகிறது........ஒவ்வொரு கால கட்டத்தையும் தனக்குள் பதிந்து கொள்கிறது.....அந்தந்த காலத்தின் கலாசாரம்.. நாகரீகம்.. பண்பாடு........ வாழ்வியல், வன்கொடுமை, சண்டை, போர் என்று எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டே ஒரு மலைப் பாம்பாய்.... காலத்தை நீட்டித்துக் கொண்டே இருக்கிறது சினிமா....... கண்டவர் போனபின்னும், அது காணப் படாத விழிகளைத் தேடிக் கொண்டே இருக்கிறது......

அப்படி, இரண்டாம் உலகப் போரின் கோர வாழ்வியலை ரோமன் போலன்சிகியின் "தி பியானோயிஸ்ட்"(2002) என்ற பிரெஞ்சுப் படம் முகத்தில் அடித்தாற் போல் நிஜங்களைப் போட்டு உடைக்கிறது.....

அந்தப் படத்தில் ஒரு காட்சி....

ஒரு கதாபாத்திரம் உணவை ஒளித்துக் கொண்டு செல்லும்.. இன்னோர் கதாபாத்திரம் அதைக் கண்டு கொண்டு ஓடி வந்து தட்டி விட்டு பறிக்க முயற்சி செய்யும்.. அப்போது.. கீழே தரையில் விழும் உணவை.... கொண்டு வந்த கதாபாத்திரம் .. நாயைப் போல நாக்காலேயே நக்கி நக்கி சாப்பிடும்......முகம் முழுக்க உணவாய்.... உயிர் தீண்டும் வலியை..... திரை தாண்டி தெறித்த பசியை பதற்றத்தோடே உணர்ந்தேன்..... பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது எத்தனை உண்மை..... உலகப் போரின் இன வெறியை நம் முகத்தில் காரி உமிழும் இந்தக் காட்சியில்.... ஆயுதங்கள் மீது நான் கொண்டிருந்த பற்று சற்று விழத் தொடங்கியது ......ஓர் இசைக் கலைஞனின் கனவை ஏதோ ஒரு தோட்டா சின்னாபின்னமாக்கியதை ஓடி ஓடி ஒளிந்த பின்னும் விடாமல் துரத்தும் இனவெறி, கண்களில் குருதியைக் கசிய வைத்தது ...... இல்லம் இல்லாமல் போவது... இவைதானே என்று சிணுங்கிச் செல்பவனுக்கு புரியுமா......?

எதிர் இனத்தவர்களில் ஒருவரால் காப்பாற்றப் பட்டு பின் ஒரு சூழ்நிலையில் தன் இனத்தவராலேயே சாகும் போது அந்த இசைக் கலைஞனின்... இசையில்.... என்ன புரிகிறது என்று இரண்டு மூன்று நாட்கள் நான் மறைந்து கிடந்தேன்.... வாழ்க்கை வேறு மாதிரி புரிந்தது........ இங்கே வாழ்வது மட்டுமே இலக்காகிப் போன பின் சுற்றும் பூமியின் வாழ்நாளும் குறையத் தானே செய்யும்....!

புரியாத கேள்விகளும், புரியாத பதில்களும் நம்மைச் சுற்றி மொய்த்து கொண்டேயிருக்கின்றன....கேள்வியும் பதிலும் கை கோர்த்து, நுண்ணிய அளவுகோலுக்குள் அவமானத்தை அடைத்து, நம்மிடயே திடும்மெனப் புகும் பாம்பைப் போல அச்சமூற்றுகின்றன....

டிசிகா வெட்டோரியின் "தி பைசைக்கிள் தீப்" (1948) என்ற இத்தாலி படத்தில், வேறு வழியில்லாமல் தன்னைத் திருடனாகவும் மாற்றும் வறுமையின் சக்கரத்தில் தொலைந்து போகும் பாடத்தில் முக்கிய கதாபாத்திரமான சைக்கிள், தன்னை, கூடவே பயணித்துக் கவனித்து வரும் தன் மகனின் முன்னால் அவமானப் பட்டுக் கூனிக் குறுகி நிற்கையில் டியுப் வெடித்து நிற்கிறது....... கதை நாயகனின் மனதை போல.....

சில நேரங்களில் மௌனத்தின் குரூர முகம் கொண்ட சூழ்நிலையை வெற்றிட உருவம் கொண்ட கற்கள் தாக்குகின்றன....தாக்கும் கற்களின் பிளவில் பூக்களின் விதை தூவும் பாஷையில் ஊடுருவும் நிஜங்களைக் கொரிய இயக்குனர் கிம் கி டுக் படங்களில் பார்க்க முடியும்....

"ஸ்ப்ரிங், சம்மர், வின்டர், பால், ஸ்ப்ரிங்(2003)....

இது படமல்ல...... பாடம்..... வினை விதைத்தவன் அதை அறுத்தே தீர வேண்டும்..... எதை விதைத்தாலும் அது வளர்ந்தே தீரும் என்ற விவிலியக் கூற்றுப் படி...... சிறுவயதில் தவளையின் முதுகில் கட்டி விடும் கல், கனத்து, கனத்து ஒரு பெருஞ்சுமையாக வாழ்நாள் முழுக்கக் கனத்துக் கிடப்பதை நினைத்து, பாதை தவறி ஒரு தவறை செய்து அதை மறைக்க அடுத்த தவறு என்று வாழ்வின் தொடர் பயணம்.. மாற்றுப் பாதையில் பயணித்து ... ஒரு கட்டத்தில்... எல்லாம் உணர்ந்த கணம் ஒன்றை கடக்க முடியாமல்... தன் முதுகில் பெரிய கல் ஒன்றைக் கட்டிக் கொண்டு இரத்தம் கசிய, உள்ளம் உருக, மலை உச்சிக்கு ஒரு யாத்திரை மேற்கொள்ளும் கதை நாயகன்(கிம் கி டுக்கே தான்) அவனின் பாவத்திற்க்கான சிலுவையை சுமப்பதாகவே உணர்த்தப் படுகிறது..........உணர்ந்தவர்கள் பாக்கியவான்கள்.... உண்மை சொல்லும் வலிகளைக் கடப்பவனே......சரியான வழிகளின் பயணிக்கிறான்....

அந்த கதா பாத்திரம்.. தன் இளமையில் தன் குருவிடம் ... மருத்துவத்துக்கு வரும் அழகிய இளம் பெண்ணை....மெல்ல மெல்ல நெருங்கி.. ஆட்கொள்ளும் காட்சியை, அவர்களுக்குள் உண்டாகும் நெருக்கமான காதல் மௌனங்களை,அந்த நேரத்தில் தொடர் பற்ற சிந்தனையாய்.... .படம் பார்க்கும் என்னுள் ஒரு புத்தனை விதைத்து விட்டதை... நான்.... ஒரு வெள்ளைக் காகிதமாய் கிறுக்கிக் கொண்டேன்... ஆழ் மனதில்....

படம் முடிந்த தருணத்தில் மாயச் சிலுவையை என் விழிகள் சுமந்து கொண்டு திறந்தன.... என் மனம் கூட அப்படி ஒரு மலையத் தேடியது...... மலை உச்சியில் கம்பீரமாய் அர்த்தத்தோடு அமர்ந்திருக்கும் புத்தர் சிலையோடு படம் முடிகிறது..... நமக்கு வாழ்வின் திரை விலகுகிறது......

திரை விரியும்....

கவிஜி ..

எழுதியவர் : கவிஜி (16-Dec-14, 2:34 pm)
பார்வை : 242

மேலே