வகுப்பறை
கட்டுபாடுகள் ஏதுமின்றி
கல்லும் முள்ளும் பல கடந்து
காடு மலை தோறும் திரிந்து வரும்
காட்டாற்று நீருக்கு
வகையாய் வெட்டிவிட்ட
வாய்க்கால் தான் வகுப்பறை!
கிடைத்ததை உண்டு
களைப்பாற மரம் கண்டு
இளைப்பறுதலே இன்பம் என்று
கிழக்கு விடிந்தால் என்ன
மேற்கு சிவந்தால் என்ன என
தெற்கு வடக்கில் கிடத்தும் நாள் வரும்வரை
தெளிவில்லாமல் வாழும்
விலங்கோடு மக்கள் அனைய ரானவரை - அருள்
விளங்க வாழ்விப்பதே வகுப்பறை!
வாழ்க்கை என்பது கலை என்றும்
வீணே கழிப்பது கொலை என்றும்
விளங்கும் வகையில் விளம்பி
அகல்விளக்கை உள்ளங்கையில் கொண்டு
இருள் சூழ்ந்த இடந்தோறும் சென்று
தடம் தெரியாமல் தடுமாறும் உயிருக்குத்
தகுந்த பாதையை முன் காட்டி
உகந்த வாழ்வளிப்பதே
உன்னதமான வகுப்பறை!
நண்பர் கூட்டம் நமை சூழ
நன்மைகள் மட்டும் நாள்தோறும்
மகிழ்ச்சியின் மன்றம் மனந்தோறும்
மங்கள கீதம் அரங்கேறும் - சிறு
மொட்டுக்களாய் சென்றோம் கல்விக்கூடத்திற்கு
பூங்கோதுக்களாய் மலர்வோம்
கலைவாணி அருள் தனிலே!