மனதில் உறுதி வேண்டும்

மனம் என்பது என்ன? நெஞ்சம், உள்ளம், எண்ணம், நினைவு, விருப்பம் என்றெல்லாம் தமிழ் அகராதி காட்டும். மனமே மனிதன்! மனிதனின் வெற்றி அவன் மனப்பாங்கில் அமைந்துள்ளது. மனம் நல்லதாக இருந்துவிட்டால் நல்லவை நடக்கும்; தீய வழியில் மனம் சென்றால் துயரங்களும், வேதனைகளும்தான் மிஞ்சும். அத்னால்தானே ‘மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்” என்று ஆன்றோர் கூறினர்.
மனம் எப்படியிருக்க வேண்டும்? மாசற்று இருக்க வேண்டும் ஏன்?
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. (குறள் 34)
ஒருவன் தன் மனத்தில் குற்றமில்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறம் ஆகும். மனத்தூய்மை இல்லாத மற்ற செயல்களெல்லாம் வெறும் ஆரவாரமே தவிர அறமல்ல.
இந்த மனம் பெருமளவு நமது நண்பரகளைப் பொறுத்து அமையும் என்பது வள்ளுவப் பெருந்தகையின் வலிமையான கருத்து. மனது நன்றாக இருக்க வேண்டும் என்றால் நல்ல நட்புக்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்; சிற்றினம் சேருதல் சரியல்ல.
மனத்தான் ஆம் மாந்தற்கு உணர்ச்சி; இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் ( குறள் 453 )
மக்களுக்கு இயற்கை அறிவு மனத்தினால் உண்டாகும். அதுபோல இவன் இத்தகைய தன்மைகள் உடையவன் என்று உலகத்தாரால் சொல்லப் படும் சொல் அவன் சேர்ந்த இனத்தின் காரணமாக ஏற்படும்.
மனத்து உளது போலக்காட்டி ஒருவற்கு
இனத்து உள தாகும் அறிவு. (குறள் 454)
ஒருவனுடைய சிறப்பான அறிவானதுஅவனுடைய மனத்தில் அறிவுபோலத் தோன்றும். ஆனால் அந்த அறிவு அவன் சேர்ந்த இனத்திலிருந்து தோன்றியதே ஆகும்.
மனத் தூய்மை செய்வினைத் தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும் (குறள் 455)
ஒருவனுடைய மனத்தின் தூய்மை, செயலின் தூய்மை ஆகிய இரண்டும் அவன் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொருத்தே அமையும்.
மனம் தூயாற்கு எச்சம்நன் றாகும்;இனம் தூயாற்கு
இல்லைநன்று ஆகா வினை. (குறள் 456)
மனத்தூய்மை உடையவர்களுக்கு பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலான அமைத்தும் நல்லவையாக இருக்கும். தூய்மையான இனத்தோடு தொடர்பு உள்ளவர்களுக்குஅனைத்தும் நல்லவையாக அமையும்.
மனநலம் மன்னுயிற்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும். (குறள் 457)
மனம் நன்றாக இருந்தால் அது அவனுடைய உயிர்க்கு ஆக்கமாகும். அவன் சேர்ந்த இனம் நன்றாக இருந்தால் அது ஆக்கத்துடன் அனைத்துப் புகழையும் சேர்த்துத் தரும்.
மனநலம் நன்கு உடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து. (குறள் 458)
இயல்பாகவே மனநலம் கொண்டவராக இருந்தாலும்சான்றோர்களுக்கு அவர்கள் சேர்ந்திருக்கும் இனத்தின் நன்மை மேலும் நல்ல பாதுகாப்பினைத் தரும்.
மனநலத்தின் ஆகும் மறுமை;மற் றஃதும்
இனநலத்தின் ஏமாப்பு டைத்து. (குறள் 459).
மனத்தின் நன்மையால் மறுமையிலும் இன்பம் கிடைக்கும். அதுவும் அவர் சேர்ந்திருக்கும் இனத்தின் நன்மையால் மிகுதியாகச் சிறப்பையும் பெறலாம்.
மனிதனை மனிதனாகவோ, தெய்வமாகவோ, மிருகமாகவோ ஆக்குவது அவனது மனமே என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுவார்கள். மனமெனும் குரங்கு, மனமெனும் தோணி,, மனப்பக்குவம், மனோதர்மம், மனப்பாங்கு போன்ற சொற்றொடர்கள் மனத்தின் சிறப்பினை உணர்த்தும்.
எனவேதான் மனத்தைப் பற்றி உலகெங்கிலும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் அடிப்படையிலேதான், மகாகவி பாரதியார் மனத்தைப் பற்றி அவரது கவிதைகளில் குறிப்பிடுகிறார்.
மனத்திற்கு இப்படிக் கட்டளை இடுவார்:
பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மென யான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால். என்று.
ஆம்! இந்தக்கட்டளையை – எந்தக் கட்டளையாயினும் சரி – அதை ஏற்று நடக்க இன்றியமையாதது “உறுதி” அல்லவா? மன உறுதியல்லவா! அதற்காகத்தான் பாரதி
”மனதி லுறுதி வேண்டும்” என்று கேட்டாரோ!?
மனதில் உறுதி இல்லையென்றால், எண்ணிய காரியம் எதையுமே வெற்றிகரமாக முடிக்க முடியாது என்பது அனைவரின் அனுபவம் அல்லவா? சலனமற்ற மனத்தை, உறுதியான மனத்தை கணபதியிடம் கேட்பார்:
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்தில் சலன மில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
………………………………………………………………….
இவையும் தர நீ கடவாயே! என்று.
“அசையா நெஞ்சம் அருள்வாய்” என்று கேட்பார்! மனத்தின் கடமை என்ன? “ஆழ்ந்து, கருதி, ஆய்ந்து ஆய்ந்து, பலமுறை சூழ்ந்து, தெளிந்து, குறைவறத்தேர்ந்து” மனிதனுக்கு உதவுதலே! அஞ்சுவதற்கும், ஆனந்தப் படுவதற்கும், இன்புறுவதற்கும், ஈசனைப்பற்றி நினைப்பதற்கும், உடன்பிறப்புக்களைக் காப்பதற்கும், ஊக்கமோடு நடந்துகொள்ளுதற்கும், என்றும் இனிமையாய்ப் பேசுவதற்கும், ஏற்றமுடன் வாழ்வில் இருப்பதற்கும், ஐயமற்ற நிலையில் இருப்பதற்கும், ஒழுக்கத்தோடு வாழ்வதற்கும் ’மனம்’தானே காரணம்! எனவே, கூறுவார்:
மேன்மைப் படுவாய் மனமே! கேள்
விண்ணின் இடிமுன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே
பயத்தால் ஏதும் பயனில்லை! என்று.
மனதில் உறுதியை எப்படிப் பெறுவது?
பாரதி காட்டும் வழி:
மனத்தைச் சக்தி தனக்கே கருவியாக்கு.
அதனால் என்ன பயன்?
சஞ்சலங்கள் தீர்ந்து ஒருமை கூடும். சாத்துவிகத் தன்மையினைச் சூடும். சக்தியற்ற சிந்தனைகள் தீரும். நுட்பம் யாவினையும் நாடும். தீவினையும், ஊழும் சாவுபெறும். எதைத் தான் விரும்பினாலும் வந்து சேரும். உடல் தன்னில் வலிமை சேரும். இன்னும், இன்னும் எவ்வளவோ!
நல்லவை எண்ணினால், எண்ணியது முடியும். கள்ளமில்லா உள்ளம், உள்ளத்தில், உண்மை ஒளி, நேர்மை மிகுந்த எண்ணங்கள் மாசற்ற மனம் இவையனைத்தும் மனதில் உறுதியை வலிமையாக்கும் என்பது உறுதி!

எழுதியவர் : என் வி சுப்பராமன், சென்னை (20-Dec-14, 12:17 pm)
சேர்த்தது : Subbaraman Nagapatnam Viswanathan
பார்வை : 9801

மேலே