வாசிப்பும் நேசிப்பும்

" நீங்கள் யாரையாவது கடந்த ஆண்டு எத்தனை படம் பார்த்தீர்கள் ?" என்று கேட்டால், அதற்கு பெரும்பான்மையாக பல எண்களைக் கூறுவார்கள் ஆனால் " நீங்கள் கடந்த ஆண்டு எத்தனை புத்தகம் வாசித்தீர்கள் " என்று கேட்டால் பலரிடம் பூஜியம் கூட பதிலாக வரும்.

நம்மிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்துக் கொண்டே வருகிறது. முப்பது ஆண்டுக்கு முன் இருந்த வாசிப்பின் எழுச்சியை இன்று காணமுடியவில்லை. இந்த தலைமுறையில் வாசிக்கும் வழக்கமும் பழக்கமும் மிக குறைவே ! இன்றைய நவீன தொழில் நுட்பங்கள் புத்தகத்தின் சுவாசத்தை அடைக்கச் செய்கிறது, வாசிப்பு இன்று முச்சு திணறலுடன் போராடுகிறது.சமீபத்தில் இயக்குனர் பாலா அவர்கள் இயக்கிய "பரதேசி" திரைப்படம், பி.ஹச். டானியல் எழுதிய "ரெட் டீ" , தமிழில் இரா. முருகவேள் மொழி பெயர்த்தார் -"எரியும் பனிக்காடு"; நாவல் திரைப்படமாக மாற்றுவதற்கு தனி திறன் வேண்டும், ஒரு நல்ல வாசிப்பே அதற்கு சான்று. நாம் படித்த நாவலோ , சிறுகதையோ திரையில் வெளிவருமேயானால் அந்த திரைக்கதையின் படிமங்களை முன்னரே பார்த்தது போன்று தோன்றும் , ஆம் ! ஒரு சிறுகதை அல்லது நாவலை வாசிக்கும் போது நாம் இணை ஆசிரியனாக உயர்கிறோம், திரைக்கதையை மனதில் ஓட விடுகிறோம் , அதனூடே பயணமும் செய்கிறோம் , நல்ல படைப்பை வாசிக்கையில் இந்த மகத்தான அனுபவத்தை நீங்களும் பெறலாம்.

தமிழகத்தில் ஆண்டாண்டிற்கு பல புத்தக சந்தைகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னையில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்வார்கள், இதில் அதிக விற்பனையாவது சோதிடம் சமயற்குறிப்பு புத்தகம் மட்டுமே. நம்மிடையே பல எழுத்தாளர்களின் அருமையான படைப்புகள் உள்ளன அதைத் தேடி தேடி வாசிப்போம். வாசிப்பால் நமக்கு நிறைய பயன்கள் உள்ளன , நாம் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அங்கு பங்கேற்ப்பாளராகிறோம், அதே தொலைக்காட்சியைப் பார்க்கையில் பார்வையாளராகிறோம். பங்கேற்ப்பாளருக்கும் பார்வையாளருக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
வாசிப்பின் பயன் :
# நம் சிந்தனை மேலோங்கும் .
# நம் சொல் திறன் வளரும் .
# நாம் எந்த தலைப்பிலும் பேச தயாராவோம்.
# மன அழுத்தத்தைக் குறைக்கும் .
# கற்பனை வளம் அதிகரிக்கும்
# தனிமையை தகர்த்துவிடும் ; இப்படி இன்னும் பல..
புத்தகம் ஒரு நண்பனைப் போல ஆழ்ந்த வாசிப்பில் அதனூடே எழுத்தாளர் நண்பனாக உரையாடுவது புலப்படும், இந்த தருணத்தை உணர வாசியுங்கள், மேன்மையடையுங்கள். புத்தக வாசிப்பின் மூலம் ஒரு மனிதன் மனதை கணிக்க முடியும் என்பதற்கான உண்மைச் சான்று 'சதாம் ஹுசைன்'.
அமெரிக்க அரசு சதாமை கைது செய்தனர், அவரிடம் விசாரணை ஆரம்பித்தது ஆனால் அவர் பேசவே இல்லை, அவரின் அமைதியால் ஏதாவது சூட்சியுள்ளதா என்று ஐயமுற்றார்கள்;வெறுத்த அதிகாரிகள் அராப் பிரதிநிதி ஒருவரை வரவழைத்து விசாரிக்க வைத்தனர். அப்படியும் சதாம் மௌனம் காத்தார், பின்னர் அந்த பிரதிநிதி, அவரின் மனநிலை அறிய சதாமிடம் " உங்களுக்கு வேண்டுமானால் அருகே இருக்கும் நூலகத்தை பயன்படுத்துங்கள் " என்றார்.
மறுநாள் அதிகாரிகள் நூலகத்தில் விசாரிக்கையில், சதாம் ஒரு புத்தகம் வாசித்திருக்கிறார் என தெரியவந்தது . அது 'எர்னஸ்ட் ஹெம்மிங்க்வே' எழுதிய 'தி ஓல்ட் மேன் அன்ட் சீ ' (The Old man and sea) என்ற நாவல். இந்த நாவலின் சுருக்கும் "வாழ் நாளில் எப்படியாவது திமிங்கலம் பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் மீனவன் ஒருவன், முயன்று முயன்று வயதோடியது, முதிர்வும் வந்தது. தனது வயோதிக காலத்தில் கடலுக்கு செல்கிறார் அன்று தனது வலையில் திமிங்கலம் மாட்டிக் கொள்கிறது. கட்டுமரத்தில் இருந்தவாரே அதனோடு போராடினார் அந்த கிழவர், கட்டுமரமும் சுக்குநூறானது. கடலில் போராட்டம் நீண்டது, இறுதியில் திமிங்கலம் கரை ஒதுங்கி உயிருக்கு போராடியவாறு இருக்க, மறு புறம் கிழவரும் கரை ஒதுங்கினார்" என்று கதை முடியும். இந்த புத்தகத்தின் வாயிலாக தான் இறுதிவரை போராடுவேன் , வீழ்ந்தாலும் எதிரியை இறுதிவரை போராட வைப்பேன் என்று அமெரிக்க அரசிற்கு சொல்லாமல் சொன்னார் சதாம்.
நம் பயணங்களில் அலைபேசியில் நேரம் செலவழிப்பதை விட ஒரு நல்ல படைப்பை வாசித்தால் அந்த நேரம் முழுமை பெரும், எழுத்தாளரின் மையிக்கு அர்த்தம் கிடைக்கும். வலம்புரி ஜான் சொன்னது போல "மைனராக இருந்த மானுடம்
புத்தகங்களின் அறிமுகத்திற்கு பிறகு தான் மேஜரானது". மைனராக இருக்கும் சமூகமும் மேஜாரக மாறும் வாசிப்பின் நேசத்தை உணர்ந்தால். புத்தகங்கள் தொடர் வண்டியைப் போல இன்றைய தலைமுறைக்கும் வரும் தலைமுறைக்கும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இலகுவாக கொடுத்து செல்லும்.
சி.சு செல்லப்பா, சா. கந்தசாமி, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஜெயகாந்தன், சுஜாதா , நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி, மௌனி , புதுமைபித்தன், கல்கி, வைக்கோம் முகமத் பஷீர் என்று பல எழுத்தளர்களின் ஈடுயிணையில்லாத முத்தான படைப்புகள் உள்ளது மேலும் அன்டான் செகோவ், தஸ்தோவெச்கி, டால்ஸ்டாய் , புஷ்கின் , ட்வைன் ,கோபோ அபே போன்ற பலரின் படைப்புகளைத் தேடி தேடி வாசியுங்கள். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

வரும் புத்தகக் சந்தையில் சிறந்த படைப்பை வாங்குங்கள் , வாசியுங்கள்!
வாசிக்கும் பழக்கம் வளரட்டும் ;
வளரும் தலைமுறை செழிக்கட்டும் !

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு"

எழுதியவர் : பவித்ரன் (20-Dec-14, 10:24 pm)
சேர்த்தது : pavithran
பார்வை : 4204

மேலே