திரைப் பறவை 4
மனத்தின் தேடல் எப்போதும் விசித்திரமானது தான்.... அது நம்மை ஏய்த்து விடக் காத்துக் கொண்டேயிருக்கிறது....சிந்தனையின் பொறிக்குள் நடமாடிக் கொண்டேயிருக்க வேண்டும்.. சற்று அமர்ந்து அதைச் சிந்திக்க விடுவது அபாயகரமானது....சிந்தனையின் சிந்தனை எதற்கும் வித்திடும். அடூர் கோபாலக் கிருஷ்ணனின் " எலிப் பத்தாயம்: (1981) என்ற மலையாளப் படம், கூண்டுக்குள் அடைக்கவே காத்துக் கிடக்கிறது...காலப் பொறியின் மாய மனது என்பதை அமைதியின் அத்துமீறலோடு சொல்கிறது.. தேங்கிப் போனவனுக்குத் தேங்கி நிற்கும் தண்ணீர் கூட மூழ்கடிக்கும் தீவு என்பதைப் புரிகையில் எனைச் சுற்றி ஒரு கூண்டை அடித்திருப்பதாக வெற்றிடம் வெறித்துக் கிடந்தேன்....
தனிமை..... இனிமைதான்.... இனிமை இன்னும் இன்னும் திகட்டும் போது அது ஒரு தீரவே முடியாத கூண்டுக்குள் தன்னை அடைத்து விடுகிறது.... காலம் சொல்லும் கதைகள் ஒவ்வோன்றையும் நம்பி நம்பியே நம்பிக்கையின் முகம் முதுகாகிப் போகும் மாய யதார்த்தம் இந்த தனிமை சார்ந்ததே.... தவறுகள் சரியாகிப் போகும் சூழலை புழுதி மணலோடு நறு நறுக்கும் கடல் கொண்ட கனவாய் காற்றுள்ள வரை மூச்சடைத்துக் கிடக்கும்....
சொல்லாடல், சொற்றொடர்.... வாக்கியச் சாரல்... எதுவுமில்லாமல் வியர்வை மழையில் வெறும் கட்டிலோடு... கனத்துக் கிடக்கும் பிணமாகிப் போகும் வாழ்வில்... எலிகள் கால்களை மட்டுமல்ல... கனவுக்குள் புகுந்து தன் நிறங்களையும் குருடாக்கிக் கொண்டே இருக்கின்றன....தனிமை மெல்ல மெல்ல பயமாகிப் போகும் தருணத்தை என் பள்ளி இறுதி நாட்கள் எனக்கு சான்றிதல் அளித்து என் தேகம் நாடு நடுங்க வைத்திருக்கின்றன்....... தூரமாய்க் கொண்டே போகும் சாலையில் இரு புறங்கள் மட்டுமே ஆக்கிரமித்துக் கிடக்கும் ஒரு புள்ளியில் தொலைந்தே போகிறது பார்வையின் தூரம்... கிட்டப் பார்வைக்கும் கண்ணாடி அணியும் சாமர்த்தியம் அற்ற கதை நாயகன்... தன்னை எலியாக்கிக் கொண்டு கூண்டுக்குள் சிரிக்கும் கலவர நிமிடங்களில் நான் திரை வெறித்து அடை பட்டுக் கிடந்தேன்... மாய கூண்டுகள் ஜாக்கிரதை என்பதாக நான் மீண்டும் பயந்த படியே... தூங்கி போனதாக நடித்துக் கொண்டே இருந்தேன்....
எனக்குள் இல்லாத சாவிகள் பூட்டாகிக் கிடக்கும் பின்னிரவு அது....
மர்மங்களின் மாய சாவி எப்போதும் எதையாவது பூட்டிக் கொண்டே இருப்பதும்... அடை பட்ட ரகசியம் தன்னை எப்படியாவது திறந்து கொண்டே இருப்பதும் சாவியாகி போன எதுவும் நம்பும்.. நம்புவதும் வெம்புவதும் தானே வாழ்க்கை.... சாவி என்றதுமே ஆல்பிரட் ஹிட்ச்காக் இன் "டயல் எம் பார் மர்டர்"(1954) என்ற ஆங்கில சினிமா தான் நினைவைக் கிளருகிறது..... சாவியை வைத்து ஒரு மர்மப் படம் தர முடியுமா?
எந்தக் கேள்விக்கும் ஒரு பதில் தன்னை ஒரு மர்மத்துக்குள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் என்பதைப் புரிய வைத்தது இந்தப் படம்....ஒரு புள்ளி கிடைத்தால் கோலம் கிடைத்து விடும் என்பது உலக தத்துவம்... ஆனால் புள்ளி கிடைக்க வேண்டும் என்பது தான் ஜென் தத்துவம்.... ஒரு தேடல்.. அது கொலையாக கூட இருக்கலாம்.. ஒரு திருப்தி.. அது கட்டிய மனைவியைக் கொல்வதாகக் கூட இருக்கலாம்.. பணம்.. அதிகாரம்... தேவை... சொகுசு.. என்று எந்தப் பொறியிலும் மனம் நம்மை ஆட்டிப் படைக்கும் காலங்களில் கொலையும் செய்வது ஒன்றுமில்லை என்றே கதை நாயகன் முயற்சி செய்கிறான் .. எல்லாம் திட்டப்படி நடந்த பின்னும் கொலை செய்ய வந்தவன், சந்தர்ப்ப சூழ்நிலையில் செத்துப் போக..
அடடா.. என்ன ஒரு திரைக் கதை... தான் வைத்த பொறியில் தானே மாட்டிக் கொள்வது...தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... ஆனால் தர்மம் மறுபடியும் வெல்லும்... வென்று விட்ட தர்மத்தை ஒளித்து வைத்திருப்பது அந்த ஒற்றை சாவி..
"சாவி" படம் பார்த்தவர்களுக்கு புரியும் அது ஹிட்ச் காக்கின் மூளை என்று....
மூளைக்குள் சுழன்றடித்த ஒரு பெருங் காடு... தன்னை விரித்துக் கொண்டே செல்வதில் மரமாகி, போதி வளர்க்கத் தொடங்கிய என் சிந்தனையை ஒன்று கூட்டிய தருணத்தில் ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கிய "காடு{(2014) திரைப் படம்.... எனக்குள் இன்னும் இன்னும் மானுடத்தை விதைத்தது....இந்த வருடத்தில் நான் கண்ட மிகச் சிறந்த படம் இந்த "காடு...." வழக்கம் போல பிரமாண்ட கண்களின் குருட்டுப் பார்வையில் இந்தப் படம் விழவேயில்லை என்பது உச்ச வருத்தம்.... கோவையைச் சேர்ந்த நேரு என்பவர் தயாரித்த இந்தப் படத்தில் விதார்த் -தான் கதையின் நாயகன்.. மைனாவுக்குன் பின் விதார்த் நடித்த படம் இது... காதலை இப்படியும் சொல்லலாமோ.. என்று யோசிக்க வைத்த காட்சிகள் அதிகம்.... யதார்த்த வாழ்வியலை... காடும் காடு சார்ந்த வாழ்வு முறையை அப்படியே அடுக்கடுக்காக வாழ வைத்திருக்கிறார் இயக்குனர்......... காட்டை தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது வெறும் காடு... காட்டுக்குள் ஒரு நாள் சென்று பார்... உலகம் பிடிக்கும்.......என்பது என் சிறகின் அசைவு....
அதிகார வர்க்கத்தின் ஆக்கிரமிப்பு... என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற திமிர்.. மீண்டும் ஒரு புரட்சியை விதைத்தே தீரும்.... தோட்டாக்கள் முடியும் தருணத்தில் கண்கள் பிடுங்கி கூட, எறிவோம் என்பது போராட்ட குருதியின் தீர்க்கம்.. அது திரு சமுத்திரக்கனி அவர்கள் மூலம் அப்படியே வெளிப் படுகிறது...
"உன் வீட்ட யாராது இடிச்ச விடுவியா.....? விடுவியா...................... ?......சொல்..... விட மாட்டேன் என்கிற போது இது உன் காடு.. அழிக்கரானுங்களே.. ஏன் விடற... மரத்த வெட்டினா அவன வெட்டு...." என்று கர்ஜிக்கும் போது பச்சப் பயிர் வாழ மண்ணில் கலை எடுத்தால் தவிறில்லை.... என்ற கீதையின் தத்துவம்... வெடித்துக் கிளம்புகிறது.....எந்த ஒரு போராட்டமும் ஒரு சமுதாயத்துக்கானதாக மாறும் போது தான் அது முழுமை பெறுகிறது.... ஆனால் அது தனி மனிதன் ஒருவனிடம் இருந்தே தொடங்குகிறது.....
"சே" வின் மறு உருவமாக சமுத்திரக்கனியின் பாத்திரம்...
"எப்படியாது கலவரம் பண்ணியாவது உங்கள கொல்ல சொல்றாங்க.. என்ன பண்ண... நீங்களே செத்துட்டா.. நீங்க மட்டும் தான்.. இல்லனா இன்னும் நாலஞ்சு பேர் சாக வேண்டி வரும்" என்று ஜெய்லர் சொல்லும் போது அதை ஊட்ருவிப் பார்க்கும் ஒரு பார்வை போதும்.... வெறும் பணம் அல்ல அது மாய பிசாசு.. அது இருந்தால் இங்கு எதுவும் சாத்தியம்.. என்று நம்ப வைத்த காட்சி.... போராட துணிந்தவனுக்கு சாவு ஒன்றுமே இல்லை தோழர்களே என்பது போல அதிகார வர்க்கம் கொடுத்த விஷ லட்டை சாப்பிட்டு மரணிக்கும் பாத்திரத்தில் இருந்து அந்த கோபக் காடு விதார்தின் மேல் விரியத் தொடங்குகையில் காடு பாடமாகிறது....
கே யின் இசை... ராஜாவின் சிறுவயது இசையை நினைவு படுத்தின....தம்பி ராமையாவும்... சிங்கம் புலியும் அடிக்கும் காமெடி.... உலகத் தரம்.....
கதை நாயகி அழகுப் பெண்.... இந்தப் பெண்ணை பார்த்தால் காதலிக்காமல் இருக்கவே முடியாது..... நியந்தாவின் சாயலை அவளிடம் கண்டேன்....
உலகில் உள்ள பல்லுயிர் காடுகளில் இரண்டு இந்தியாவில் இருப்பது..... எத்தனை பெருமையான கொடையை இயற்கை நமக்கு அளித்திருக்கிறது...இனியாவது காட்டை நேசிப்போம்........ நான்.... நான்.... நான்....... என்றே கிடக்காமல்..நாம் என்றே யோசிப்போம்.. என்பது போல காடு அரணாகிறது.. இது நம் காடு.. நாம் தான் பாதுகாக்க வேண்டும்.... பாலித்தீன் உரைகளை வீசுவது.. சுற்றுலா என்ற பெயரில் மதுப் போத்தலை வீசுவதும் அறிவீனம்.. இனி யாராவது செய்தால் சொல்லிப் பாருங்கள்.. கேடகவில்லை என்றால் அள்ளி அவர் வீட்டுக்குள் போடுங்கள்....
காடு வெறும் படமல்ல.... அது ஒரு வாழ்க்கையை சொல்கிறது.... இன்னும் காட்டை மட்டுமே நம்பி, காடும் நம்பிக் கிடக்கும் மனிதர்களைப் பற்றி சொல்கிறது... கணிப் பொறியும்.. அலைபேசியும் இல்லாத காட்டுக்குள் புலிகள் கால் தடங்களை உரிமையோடு பதிக்கிறது... புலிகள் உள்ள காடே வளமான காடு என்பதை பறை சாற்றுகிறது இந்த படம்....
பச்சையாய் இந்த கா...... இந்த ஆரண்யம்..... இந்த கானகம்...... இந்த பொழில்.... இந்த இயவு........ இன்னும் இன்னும்..... காடாய் விரிந்து கொண்டேயிருக்கிறது........
திரை விரியும்....
கவிஜி
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
