இனியேதும் வேண்டாமடா.....

பால்கனியின் சுவற்றினில்
மெதுவாய் தலை சாய்க்கின்றேன்
பசுமையான நினைவுகள்
பனிச்சாரலாய் மனதினில் மோதி
இதழ்களில் புன்னகையாய்...

உன் வார்த்தைகளை மீண்டும்
மீண்டும் கேட்கத் தூண்டும் ஏக்கம்
என் செவிகளுக்கும் சேர்த்து...

சம்பிரதாய சம்பந்தத்தில்
சிக்காமல் மனதால் மணம் செய்து
தயங்காமல் தம்பதிகளானோம்....

நம் மடிகள் மட்டுமே அன்று
நிலவின் குளிரில் பஞ்சணையானது!
உள்மனது காயங்களுக்கு - உன்
நினைவு ஒன்றே மகத்தான மருந்தானது

உன் விரல்களின்
இடுக்குகளில் மாட்டியிருந்த
என் கேசம் சொன்னது
உன் நேசம் அழகானதென்று...

உன் தோள் சாய்ந்த தருணங்கள்
உன் தோழமையை சுவராசியமாக்கின....

துளித் துளியாய் விழுந்த உன்
காதல் மழையில் நனைந்தன
எனது தூங்கா விழிகளும்...

ஆறுதலாய் அணைத்த உன்
அன்பின் வேகத்தை இறுக்கிய
கரங்கள் பல கவிதைகளைச் சொல்லின...

ஒரு முத்தத்தில்
உன் காதலை மொத்தமாய்த்தந்த
எனக்கு இனியேதும்
வேண்டாமடா.....

எழுதியவர் : பிரேமலதா (12-Apr-11, 4:20 pm)
சேர்த்தது : Premi
பார்வை : 345

மேலே