அன்னையா அமுதசுரபியா

உன்னை வார்த்தைகளால் வரைய விழைகிறேன் தினந்தினம், ஆனால் வரிகள் விரல் வழியே வரும் வேளையில் விழியில் நீர் கசிகின்றது உன்னை எண்ணி.

அன்பை அளவில்லாமல் கொட்டி, பாசத்தை பாற்கடல் அமிர்தமாய் ஊட்டி, என் முகத்தில் புன்னகை காண நீ கதறி அழுத காலத்தை நினைவு கொள்கிறேன்.

உலகம் என்ற அடர்ந்த காட்டில் நான் பிறந்த அடுத்த நொடி பயமும் பசியும் பூண்டது என்னில், அந்த பயங்கர காட்டில் என் பயத்தை போக்கினாய் பன்னகசாலைபோல் அடைக்கலம் கொடுத்து, என் பசியை போக்கினாய் ஓடை நீர்போல் தாய்ப்பால் அளித்து.

என்னை பார்த்து 'அந்த அழகு தேவதையின் மகனா இவன்' என்று எனக்குள் நான் பலமுறை கேட்டபோது, என்னை அள்ளி அனைத்து,
நான் அழகு தேவதையாய் மாறியது நீ பிறந்த வரம் தான், என்று நெற்றியில் முத்தமிட்டு கொஞ்சிய உன்னை நான் என்னென்று சொல்வேன்.

'ஈரைந்து மாதங்கள் கருவோடு எனை தாங்கி நீ பட்ட பெரும் பாடு அது போதுமே' என்பது வாலியின் வரிகள் ஆயினும் என் வாழ்க்கையில் அது ஒரு உண்மை சம்பவம் தான். நான் உன் கருவில் இருந்த போது என்ன செய்தேன் உனக்காக?

முகம் தெரியாத எனக்காக அத்தனை துயரம் தாங்கினாயா? உருவம் தெரியாத எனக்காக ஒரு பொழுது தவறாமல் உணவளித்தாயா?

நான் பிறந்தால் உன் அழகு கெடும் என்று பலர் கூறியும் என்னை பூப்போல் பேணி காத்தாயா? நான் பிறவி பலனை பற்றி கேள்வி பட்டதுண்டு
ஆனால் நான் பிறப்பதற்கு முன்னரே எனக்கு பலன் அளித்துள்ளாயே, உன்னை தெய்வத்திற்கு அப்பால் வைத்தாலும் மிகையாகாது.

இத்தனையும் எனக்காக செய்த உன்னை காண ஆவலாய் நான் வந்தபோது பெரும் வலியை அளித்தேன் உன் முகத்தை பார்க்க, ஆனால் வலியின்றி அழுதது நான்தானெனினும், என் அழுகுரல் கேட்டு புன்னகைத்த உன்னை எக்கனம் போற்றி பாடுவேன்.

உன் உதிரத்தை உணவாக அளித்து, உனக்கு வந்த துன்பத்தை என்னிடம் சேரும் போது மட்டும் இன்பமாய் மாற்றி, உன் இடையென்ற அசையும் d என்னை அமர்த்தி உலகத்தை காட்டி, நான் பிழையாக பேசிய மழலை மொழியை நீ மட்டும் அறிந்து, 'கண்ணே!' என எனக்கு அன்பு முத்தமிட்டு,

எனக்கு நீ செய்ய விழைந்த காரியங்களுக்கு எதிராக பல இடையூறுகள் அம்புக்களாக வந்தாலும், பாசம் என்ற பானாஸ்தரம் கொண்டு அவ்வனைத்தையும் தகர்த்தி, ஒரு முழு மனிதனாய் என்னை மாற்றி

நீ அளித்த அன்பில் பாதி அளவு கூட தற முடியாத அளவிற்கு என்னை கடனாளி ஆக்கிய என் அன்னையே!

என்னை மேலும் கடனாளி ஆக்க,
என் உள்ளத்தில் வைத்து உன்னை அழகு பார்க்க,
உன் சுவாசம் தென்றலாய் என்மேல் என்றும் அடிக்க..!!

உன்னை காலத்தை வென்று காப்பேன்.!!

எழுதியவர் : வசந்த் (23-Dec-14, 8:36 pm)
பார்வை : 142

மேலே