இயக்குனர் சிகரத்திற்கு ஓர் இரங்கல் பா

நன்னிலத்தில் பிறந்து….!
நாடகத்தை சுவாசித்து....!
நாணல் எனும் படைப்பை
முதல் முதலாய்
அரங்கேற்றம் செய்து….!
தில்லுமுல்லு அறியா
திரை உலகின் எதிரொலியே….!
இரு கோடுகளாய்….!
இருந்த இரு பெரும்
நட்சத்திரங்களின் புகழ்….!
ஒரு வீடு ஒரு வாசல்
என்ற எல்லையை கடந்து….!
வானமே எல்லையாய்
முகவுரை செய்து….!
மூன்று முடிச்சு போட்ட
புன்னகை மன்னனே….!
நீ படைத்த படைப்புகள்
எல்லாம்….!
நூற்றுக்கு நூறு
புது புது அர்த்தங்களாய்….!
பார்த்தாலே பரவசமாய்….!
நினைத்தாலே இனிக்கும்
சிந்து பைரவி ராகமாய்….!
ஜாதி மல்லியாய்
மணம் வீசியது….!
திரை உலகில்
நீ அழகனாய்….!
அபூர்வராகமாய்….!
நான் அவனில்லை
என்றில்லாமல்….!
எல்லோரையும்
கண்ணா நலமா….!
என அரவணைத்து….!
இயக்குனர் சிகரமாய்
இயங்கிய இமயமே….!
நீ வெள்ளித்திரையில்
தப்புத்தாளம் போடாமல்….!
நினைத்த கருத்துக்களை….!
மேஜர் சந்திரகாந்த் போல்
அச்சமில்லை அச்சமில்லை….!
என வெள்ளிவிழா
படைப்பின் மூலம்
சொன்னாயே…..!
மன்மதலீலையாய்….!
டூயட் என
பாடி திரிந்த
இளைய சமூகத்திற்கு….!
உன்னால் முடியும் தம்பி...!
மனதில் உறுதி வேண்டும்
என்று அவர்களை எதிர் நீச்சல்
போட வைத்தாயே….!
பொய்கால் குதிரையாய்….!
பொய் முகமாய்….!
நிழல் போல் இருந்த
திரை கதை….!
நீ திரை உலகில்
பட்டினபிரவேசமானதால்….!
நிழல் நிஜமானது….!
பத்தாம்பசலியாய்….!
கல்யாண அகதியாய்….!
நூல் வேலியாய்….!
நான்கு சுவற்றுக்குள்….!
வாழ்ந்த பெண்களுக்கு….!
பாமா விஜயம்
நவக்கிரகம்
எங்க ஊரு கண்ணகி
என படைப்பை அளித்து….!
கல்கியாய்….!
காவியத்தலைவியாய்….!
அவர்கள் வாழ
வழிகாட்டினாயே….!
சொல்லத்தான் நினைக்கிறோம்
ஆனாலும், அக்னி சாட்சியாய்
சொல்லுகிறோம்….!
உன் புகழ்….!
அவள் ஒரு தொடர்கதையாய்….!
ருத்ரவீனையை மீட்டும்
இசையாய் பொழிந்து….!
47 நாட்களென்ன….!
நாங்கள் என்றென்றும்….!
சர்வர் சுந்தரமாய்….!
சேவை செய்வோம்
உன் பரம ரசிகர்களாய்….!
அனுபவி ராஜா அனுபவி
என்று சொன்ன நீ….!
இன்று எங்கள் கண்களை
தண்ணிர் தண்ணீராக்கினாயே….!
வருந்துகிறோம்
வறுமையின் நிறம் சிவப்பாய்….!
துடிக்கின்றோம்
பூவா தலையாய்….!
தவிக்கின்றோம்
தாமரை நெஞ்சமாய்….!
வெடிக்கின்றது
எங்கள் இதயம்
நீர்குமிழியாய்….!