புதுமொட்டும் மலர்ந்திடுமே
புகைப்படம் கண்டேன்
புண்பட்டது நெஞ்சம் !
புதுசரித்திரம் படைத்திட
புலர்ந்திட்ட பொழுதிது !
புதுமைகள் படைத்திடும்
புத்துணர்வு பெறும்வயது !
புன்னகையே பூத்திருக்கும்
புண்ணாகாத பருவமிது !
புரிந்துணர்வும் அதிகமிலா
புதுரத்தமும் பாயும்நிலை !
புதுப்பாதையில் சென்று
புதுவாழ்வின் பயணமிது !
புக்ககம் செல்லவுள்ள
புதுமணப் பெண்ணில்லை !
புருவங்கள் உயர்ந்திட்டு
புலம்பிடும் தோற்றமேன் !
புன்முறுவலே மறைந்திட்டு
புதுநாற்றும் நொந்ததேன் !
புதுயுகம் காணும்காலம்
புதுவாழ்வு நாடும்காலம் !
புவிதனில் சாதிக்கும்வயது
புகழ்வானைத் தொடும்வயது !
புலன்விசாரணை செய்வீர்
புரியும்படி சொல்லிடுவீர் !
புரிந்திட வைத்திட்டால்
புதுமொட்டும் மலர்ந்திடுமே !
பழனி குமார்