விதி செய்த விதியோ
கூடை நிறைய கூலம் சுமந்து
கூந்தல் முடியா அழுக்காடை அணிந்து
வீதி வேலை செய்யும் பெண்ணின்
விழிகள் இரண்டும் கனவுடனே
கனத்த உள்ளம் தணிந்திடுமா
கனவுகள்தான் பலித்திடுமா?
அழுக்காடையாக இருந்தாலும்
அழகு மங்கிப் போனாலும்
அவள் வாழ்வுக்காக வீதிக்கு
வருவதுதான் விதியாமோ
வருவோர் போவோர் அவள் நிலைக்காய்
வருந்த யாரும் இலையாமே!
பெற்று வந்த வரம் இதுவோ
பெற்றவர்கள் சதி இதுவோ
தன் வயதுப் பெண்கள் நாணி
வீதியிலே செல்லல் காண
தன் நிலைக்காய் யார் நாணப் போகிறார்
விதியை மாற்றப் போகிறார்
விடியும் ஒர் நாள் என்று அவள்
விடியும் பொளுதைப் பார்க்கிறாள்
சீர் திருத்தம் பேசிய பலர்
சிலையாய் நின்று பார்க்கிறார்
மாறவில்லை மாற்றவில்லை
மனந்திருந்திச் செயலாற்றவில்லை
பெண்கள் உரிமை பேசும் இவர்
எங்கள் அவலம் தீர்க்கவில்லை
மாதர் தலைவி என்று பலர்
மடமையதைப் போக்கவில்லை
வீதியிலே புழுங்கும் பெண்கள்
வாழ்வை மாற்ற முடியவில்லை
பாவப்பட்ட ஜென்மமிவர்
என்று மட்டும் பச்சை குத்தி
அனுதாப வார்த்தை மட்டும்
உதிர்த்துவிட்டுப் போகிறார்
ஊரிலே பெரிய மகானென்றே
பாராட்டுப் பெறுகிறார்
என்று தீரும் என்று தீரும்
எம் பெண்கள் நிலை என்று தீரும்
வெயில் வெதுப்பி குளிர் வாட்டி
வீதி வாழ்க்கை செய்யும் பெண்கள்
குறையென்று தீரும்
தினம் தோரும் அழும் பெண்கள்
நிலை என்று மாறும்!!
ஜவ்ஹர்