அழகு - தொடர்ச்சி
கட்டளைக் கலித்துறை
நெல்லுக் கழகு வளர்ந்தபின் காட்டும் நெளிவுகளில்
சொல்லுக் கழகு பிறர்மனம் புண்படாச் சொற்களிலே
பல்லுக் கழகு நிலவொளி ஏந்தும் பளிங்குநிறம்
வில்லுக் கழகு விடுகணை பாயும் விசையதிலே !
வானுக் கழகு மழைத்துளி என்கிற வானமுதம்
தேனுக் கழகு தெவிட்டும் இனிப்புடை தேன்சுவையில்
ஊனுக் கழகு உழைத்துப் பிறர்க்கு உதவிடுதல்
மானுக் கழகு குதித்து மகிழ்ந்து மறைந்திடலே !
கோளுக் கழகு குதிக்கபால் வீதியைக் கொண்டிருத்தல்
நாளுக் கழகு விடிய லெனுமொளி நாட்டிடுதல்
வேளுக் கழகு பகைவனைப் போரினில் வேன்றிடுதல்
தாளுக் கழகு எழுத்தைப் பதிவுசெய் தாளுதலே !
மரத்திற் கழகு நிழல்தரும் நல்ல மதிப்பினிலே
கரத்திற் கழகு கொடைபல செய்யும் கருனையதில்
உரத்திற் கழகு செழிப்புற நெல்லை உயர்த்திவிடல்
வரத்திற் கழகு நலமே விளைக்கும் வகையதுவே !
ஆணிக் கழகு இருமர மொன்றாய் அறைந்திடுதல்
கேணிக் கழகு எடுத்திடத் தண்ணீர் கொடுத்திடுதல்
காணிக் கழகு மகாகவி சொன்ன கவிதையிலே
தூணிற் கழகு கலைசேர் நயமாய் துளங்குதலே !
-விவேக்பாரதி