ஆயுள் தரும் வாழ்வு - முதுமையின் அனுபவம்
அன்று....!
சுமைகள் தாங்கியதில்..
சுருங்கிய தோள்களது
வலிகள் தாங்கியதோ
வாரிசு நலம்வாழ..!
இனிக்கும் உறவுகளில்
இன்னல் காப்பவராய்..
எடுக்கும் முடிவுகளின்
எல்லை முன்னறிவார்..!
குருவி கூட்டினைபோல்
கூட்டுக் குடும்பத்தை
காலம் உள்ளவரைக்
காத்து வளர்த்திடுவார்.!
வளரும் உறவுக்கு
வரமாய் வார்த்தைகளோ
தரமாய் அமைந்ததன்று..
தாத்தா பாட்டியிடம்..!
அடிகள் பட்டாலும்
அதையும் பாடமென
அறிவில் நிறுத்திவைத்து
அனுபவம் ஆக்கிடுவார்..!
தமிழில் தாலாட்டு
தரமாய் பாடிவைத்தார்
தாய்ப்பால் சுவைப்போல
தாங்கும் பூமியென..!
பேரன் பேத்திக்கு
பெயரை சூட்டிவிட்டு
பேசும் மழலைகளை
பேசவும் வைத்திடுவார்..!
தொட்டில் கட்டாமல்
தோளிலும் மார்பிலுமே
பழங்கதை தானுரைக்க
பயமதைப் போக்கிடுவார்..!
இலக்கிய வரலாற்றை
இலகுவாய் ஊட்டிவிட்டு
இலக்கணம் இதிகாசம்
இலட்சியம் ஆக்கிடுவார்..!
வாந்தி பேதிக்கும்
வயிற்றுப் போக்கிற்கும்
பதற்றம் இல்லாதொரு
பண்பட்ட வைத்தியர்கள்..!
ஆயுளை கொடுக்குமொரு
அறுசுவை உணவிற்கு
அரைத்த சுவைகலவை
அளவென காட்டிடுவார்..!
பகையதை மறந்திடவே
பாசமாய்த் திருநாளில்
சொந்தங்கள் ஒன்றுசேர
சொர்கத்தை பார்த்திடுவார்..!
பள்ளத்தில் இருக்கின்ற
பாழான உள்ளங்களை
பந்தியில் விருந்திட்டு
பரவசம் அடைந்திடுவார்..!
உண்மைக் காதலது
உள்ளம் கலந்ததென
அறுபது தாண்டிவாழும்
அதிசயம் அவரன்றோ..!
அழகு என்பதெல்லாம்
அகத்தின் அகல்விளக்கு
அதனை மறந்துவிட்டால்
ஆயுளை முகம்தருமா..?
விதிகள் பலவிதைத்த
விடுகதை வாழ்க்கைக்கு
நெடுநாள் பலன்தந்து,.
நிலமாய் நின்றுவிட்டார்..!