சிந்தனை சீர்திருத்தும் - என் பாரதிக்கு என்வரிகள்

பாரதிக்கு..

விழியில் வீரமும்
வரியில் வாளையும்
வரிந்து கட்டியவன்
விளைந்த பொன்னாள்..

தலையில் பாகையும்
தமிழின் பாலையும்
திலகம் வைத்திவன்
தீமை யழித்தவன்

வீறு நடையினில்
வேகம் இருந்தும்
விவேகம் விதைத்து
வேறாய் இருந்தவன்.

பெண்ணினப் புரட்சி
பெருமைகள் சேர
பேராய் இருந்தவன்
பாரதி யன்றோ ..!

அஞ்சிய தில்லை
அவனியில் யார்க்கும்
கொஞ்சிடும் குணமோ
குழந்தையை போலே..

மீசை வைத்தவன்
ஆசை துறந்தவன்
கனவுகள் மெய்ப்பட
கவிதை வளர்த்தவன்..!

புரட்சிகள் செய்து
புதுமைகள் கண்டான்
போர்க்கள மன்னன்
புரட்சிக் கவிஞன்..!

அக்கினிப் பார்வை
அவனது கூர்மை
தெளிவெனும் மதியால்
திறமையில் நேர்மை..!

பட்டினி யொழிக்க
பாரினை வதைத்தான்
வேடிக்கை மனிதனை
வீழ்ந்திட வைத்தான்..

தனியொரு மனிதன்
தவித்திடும் போது
ஜகத்தினை அழிக்க
யுகமென கொதித்தான்

ஆயிரம் சிந்தனை
அவனது பாடல்
ஆணவம் இன்றும்
மனிதனின் தேடல்..

கால்நடைப் போல
கழனியைக் குடித்து
களவெனும் கள்ளம்
கருத்தினில் வைத்து

உதவிடும் மனதை
உதட்டில் வைக்கும்
உறவுகள் பெயராய்
உலவிடும் உலகில்

நினைத்திடும் நேரம்
நெஞ்சினில் வந்தான்
அறுத்திடச் சொல்லி
அறிவினில் நின்றான்..

நெற்றிப் புடைக்க
நெறியை வளர்த்தாய்
நிலையை மனதில்
நிறைந்து விட்டாய் ..

உன்னிழல்தேடி உறவுகள் வளர்க்க
என்னிறைவார்த்தை உனக்கென தந்தேன்..!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (26-Dec-14, 10:52 am)
பார்வை : 259

மேலே