இறகு - ஆத்மா எனது பார்வையில்

" இறகு இருக்கும் உலகிலொரு ஆத்மா "

உதிரமிலா வுறவொன்று
உயரத்தில் பறக்குதடி
உடலழிய வுயிரொன்று
உருவத்தி லாத்மாவாய்..!

தூரிகையில் துயலுரித்த
காரிகையா யுன்னினைவு
குழந்தையவள் புத்தகத்தில்
குட்டிபோடு மொருகனவு..!

மௌனமொழி பேசுகிற
மலரிதழின் மனமதனை
அறிந்ததுபோ லாகாயம்
அடைந்ததிலு னானந்தம்..!

மையிட்டு உன்முகமோ
மடிந்துவிடு மெழுத்துகளாய்
மனிதனவன் வரலாற்றில்
மைல்கல்லும் நீயெனவே..!

சிரமின்றி செவிபுகுந்து
சீராக்கு முன்னருமை
சுகமறிந்த தொருகண்கள்
சொக்கிவிட சொப்பனங்கள்..!

வலிதாங்கு மியர்வைக்கு
விசிறியதி லொருசேர
வாடாத முகம்தரவே
வாத்தியங்க ளானதென்ன..!

கடிவாளம் இல்லாத
காற்றோடு கலந்தாடி
அவன்வீசும் திசையோடு
அயல்நாடு சென்றிடுவாய்..!

உனைவிட்டு பறவையது
உயிர்நீத்து போனாளென
உறவுக்கு செய்திசொல்ல
உலகத்தில் நின்றாயோ..!

தாய்தேடும் பிள்ளைபோல்
தாகத்தில் நீயலைய
தடுமாறி நிற்கின்றேன்..
தவறியது யாரென்று..!

ஐம்புலனில் மனம்சேர
ஆபத்து இல்லையெனும்
ஆன்மாவின் வாழ்க்கைக்கு
ஆராய்ச்சி யுன்வாழ்வோ .!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (27-Dec-14, 3:06 pm)
பார்வை : 122

மேலே