என்னை தேடி
என்னை தேடி
எனக்கென்று தனிமை கிடைக்கும் போதெல்லாம்
எனக்கும் எனக்குமே பெரும் போர் நடக்கிறது
எனக்குள் இருக்கும் எனை அறியவே
என்னில் அடங்கா எண்ணப் போர்....
என் இயல்புகளோடு
ஏகாந்தத்தின் இனிமையில்
எதிர் வந்த வினைகள் அனைத்தையும்
ஏவியவனின் கட்டளைக்கு இணங்கி
ஏக மனதுடன் கடந்து பயணித்தேன்....
என் பயணத்தில் எல்லாம்
எனக்கென்று தனித்துவத்தை
எடுத்துக்காட்டும் அடையாளமாக
என்றும் வரலாற்றில் பதிந்தவள்....
எல்லை இல்லா வாழ்க்கைப் பாதையை
எல்லைக்குள் குறுக்கிக் கொள்ள
என்றும் எத்தனித்தவள் இல்லை....
எனை ஈன்றவர்கள்
எதிர் வரும் காலத்தில்
என் வாழ்வியல் குறித்து
ஏக்கத்துடன் கண்ணீர் உகுக்க
என் நெஞ்சத்தின் உறுதி கண்டு
எவ்வாறாயினும் இவள் வாழ்ந்திடுவாள் என்று
எண்ணத்தை மாற்றிக் கொண்டனர்...
எவரின் பார்வையிலும்
எனக்கான இங்கிதத்தை இழந்ததில்லை...
எத்திருமண சந்தையில்
எனை கவர்ந்து செல்ல
எத்தேசத்திலிருந்து வந்தாய்???
எதற்காக உன் நங்கூரத்தை
என் மனக் கடலில் இறக்கிச் சென்றாய்...
என் மதி எடுத்துரைத்தும்
எழுச்சியின் கிளர்ச்சியில்
என் இதயத்தின் ஏவலில்
எதிர் கொண்டு நினை
ஏற்க துணிந்தேனே....
எந்தப் புயலிலும் கலங்காதிருந்த
என் ஆழ் மனதை
ஏகமாக களைத்தாய்
எனக்கேன் இந்த காயம்?
எரிமலை குழம்பாய்
என்னுள் கட்டிக் காத்த
எனது உணர்ச்சிகளை
எதற்காக வெடித்துச் சிதறச் செய்தாய்???
எத்தேசத்து கன்னியின் மனதை இனி
எந்த நங்கூரத்தை கொண்டு களைய
எக்கடலில் உனது துடுப்புப் பயணப்படுகிறது???
எவ்வித தவறை நீ செய்தாய்
என்று நீ அறிவாயா?
எவரின் ஆளுகைக்கும் உட்படாத
என் இதயத்தை உடைத்து சென்றுள்ளாய்!!!
எவ்வழி நோக்கி பயணப்படும்???
ஏகமாக இதயம் இழந்தவளின் மதி
எம்மாத்திரம் ஆயினும் ஆண்மையை பெண்மைக்குள்
ஏந்திப் புது சரித்திரம் படைக்கும்.....
என்ன வென்று விளங்கவில்லையா?
என்னுள் பெண்மையின் மென்மை அகன்று
எதிலேனும் உச்சம் தொடுவேனே...
எண்ணப் போர் ஓய்ந்த வேளையில்
எரிமலையின் திசை மாறியது நல்வழியில்
என் படைப்பின் பயன் நோக்கி பாய்கிறது....
எழுதியவர்
சூரியா