கரையவா கரையேறவா

சிலநாள் முன்பு.,
தாய், தந்தையின்
சிற்றின்ப விளையாட்டில்,
திரை கிழித்துச் சென்ற
ஒற்றை உயிரணுவை,
சிறை பிடித்த கருமுட்டை
இரண்டரற கலந்து உயிராக
ருதுவாகப் போகும் நான்
ஓர் பிண்டம்- பேசுகிறேன்!.

யாரேனும் உண்மைகூறுங்கள்.
நான் ஜனனித்தால்,
என் தலையெழுத்து.

நற் கல்வி கற்பேனா?
நடத்தை கெட்டுப் போவேனா?

நன்றி மறப்பேனா?
நாசமாய்நான் போவேனா?

உதவி பல செய்வேனா?
ஊதாரிப் பட்டம் பெறுவேனா?

சிக்கனம் செய்வேனா?
சீரழிந்து அழிவேனா?

தரணி நான் ஆள்வேனா?
தரம் கெட்டுப் போவேனா?

வாழ்க்கை வளம் சேர்ப்பேனா?
வாழ்ந்த குடி கெடுப்பேனா?

கொடைகள் பல கொடுப்பேனா?
கொலை களவு புரிவேனா?

அழகு ரசிப்பேனா?
அற்பமாய் இருப்பேனா?

ஆளுமை கொள்வேனா?
அடங்கிப் போவேனா?

தேசம் காப்பேனா?
தேவையில்லை என்பேனா?

நான், ஆணா? – பெண்ணா?
குரோமோ சோம்கள்
குழப்பத்தில் உள்ளன.
ஏதேனு மொன்றை
தேர்வு செய்யும்முன்
விரைவாக கூறுங்கள்.- நான்

நல்லவனா? – கெட்டவனா?

கெட்டவனெனில்,
இப்பொழுதே கர்ப்பக் கடலில்
கரைந்து போகிறேன்.
நல்லவனெனில்,
கரை யேறி வருகிறேன்
காத்திருங்கள்!!!.

எழுதியவர் : கவிக்கண்ணன் (29-Dec-14, 3:40 pm)
பார்வை : 56

மேலே