உயரத்தில் இருப்பது யார்

ஏ வானமே
காலம் கடந்து நீ
கண்ணீர் வடித்து என்ன பயன் !
அதோ அங்கே அன்று கதிர்
அறுத்த என் கள - நாயகன்
கழுத்தறுத்து மாண்ட செய்தி
இன்று தான் வந்ததா உனக்கு !
வாடிய பயிரைக் கண்டு
வாடிய அவன் வயிறு காய்ந்தபோது
வராத நீ காத்திருந்தது
அவன் இழவுக்காகத்தானா !
உயரத்தில் இருக்கும் ஆணவமா உனக்கு !
உன்னை அண்ணார்ந்து பார்ப்பதால்தானே
உலகிற்கு அன்னம்-தந்து வாழும் இவனை
மண்ணில் வீழ வைத்தாய் !
இன்னும் உன்னில் இரக்கம் இருந்தால்
போய் சொல் அந்த இறையாளர்களிடம் - வாருங்கள்
இதோ இறைவன் இங்கே
இறந்து கிடக்கிறான் என்று !
மறக்காமல் அந்த மதவாத கும்பலிடம் சொல்
அட மதிகெட்டவர்களே இங்கே
மனிதம் மடிந்து கிடக்கிற - தென்று ,
அப்படியே அந்த அரசியல்வாதியிடம் சொல்
ஆட்சிக்கு அடித்துக்கொள்ளும் அசிங்கங்களே
இங்கே மனசாட்சி மடிந்து கிடக்கிறது என்று !
ஒருவனும் வந்திருக்கமாட்டானே !
அதோ அந்த மனை விற்பனையாளனிடம் சொல்
இங்கே ஒரு பச்சை வயல் பிச்சை கேட்கிறதென்று !
உடனே வந்துவிடுவான் நிலத்தை மொட்டை அடிக்க !
என்ன பார்க்கிறாய்
உனக்குமட்டுமல்ல இவர்களுக்கும்கூட
இப்படி ஒரு எண்ணம்தான் - விவசாயி என்றால்
விட்டில் பூச்சிகள் என்று !
இதோ ஊருக்கு உணவளித்த இவன்
தன் வயிற்றுக்கு உணவில்லை என்று
வருந்தவில்லை - தன்
பயிருக்கு உணவில்லாத ஒரே
காரணத்தால் வீழ்ந்துகிடக்கிறான்
பயிருக்கு தன் உயிரை உரமாக்கி !
இப்பொழுது சொல்
உயரத்தில் இருப்பது நீயா ! இவரா !