உறவுகள் தொலைந்தன வெகுதூரத்தில்

ஓடி ஆடி திரிந்த உடல்,
ஒடிங்கித்தான் போனது
ஓரிடத்தில்....!,
அலைபேசிகள்
அலையென பெருகிட....!

முகம் தெரியா முகவரிகளும்....!
முளைக்கா சிறார்களும்....!
முகநூலில்
மூழ்கி கிடக்கின்றன....!

தொலைக்காட்சி தொடர்கள்....!
பட்டிமன்றங்கள் என....!
மனிதர்களை பட்டியடைத்து
பண்டிகைகளை வெற்றிடமாக்கின....!

கைகுலுக்கி
நெஞ்சணைத்து
சொன்ன வாழ்த்துக்கள்....!
காலப்போக்கில் சுருங்கி....!
விரல் நுனியில்
வாழ்த்தென மாறியது....!

மழலைகள்
தவழவேண்டிய மடியை
மடிக்கணினிகள் பிடித்தன....!

கைகூப்பி சொன்ன வணக்கங்கள்
சுருங்கி.....!
கைபேசியில்
குறுஞ்செய்தி
என குறுகியது....!

அன்னை தன் அரும்புக்கு
அமுதூட்ட காட்டிய
அழகிய சிட்டுக்குருவிகள்....!
அழிந்தன
அரக்கனை போல் நின்ற
ஆண்டனாவினால்....!

அன்னைக்கு கடிதம் எழுத
எழுதுகோல் மையுடன்....!
கசிந்து கலந்த
கண்ணீரும், வியர்வையும்....!
காலப்போக்கில் கரைந்தன
மின்னஞ்சல்கள் மின்னியதால்....!


மலிவு ஊடகங்கள்
மனிதஉறவை
மங்கிடசெய்ய....!
மின்னனுச்சாதனங்கள்
மின்னவேண்டிய உறவை
பின்னுக்கு தள்ளின....!

புதுமை புரட்சி என
பூமியிலிருந்து ஏவிய கோள்கள்....!
இரவும்பகலும், இணையம் என
இளைய சமுதாயம் மூழ்கிட....!
கோல் ஏந்திய முதுமைகள்
கேட்பாரற்று மூலையில்....!

விஞ்ஞான தொழில் நுட்பங்கள்
விண்ணை தொடும் தூரத்தில்....!
தொடும் தூரத்தில் இருந்த உறவுகள்
தொலைந்தன வெகுதூரத்தில்...!.

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (2-Jan-15, 10:36 pm)
பார்வை : 105

மேலே