துடைப்பங்கள் எழுத்தாவதில்லை

அவர்கள் சொந்த மனங்களில்
தென்றல் வீசியதால்
நொந்த சமுதாய வனங்களில்
புயல்வீசிப் போனதே .

அவர்கள் மன நிலங்களில்
காதலை விதைத்துக் கொண்டதால்
இங்கே பல உள்ளங்கள்
கண்ணீரால் சிதைத்துக் கொண்டன

அவர்கள் மண்ணில்
அவர்கள் வாழ்வதற்கு
தகுதி இழக்கப்பட்ட ஜாதிகளால்
பூகம்ப பம்பரம் செய்து
பூமியின்மேல்
சுழலவிட்டு ரசிக்கிறார்கள்

காதலுக்காக
ஜாதியை அழித்துவிட்ட
அவர்களால்
ஜாதிக்காக காதலை
அழிக்கத்துடிக்கும்
இந்த சமுதாயம்
அவர்கள் இதய சுவரில்
ஒட்டிக்கொண்ட
காதல் பதாகையின்மேல்
தேர்தல் கால எதிர்கட்சிகள்போல்
சாணம் அடிக்கிறார்கள்

அடிக்கும் சாணத்தினால்
அவர்கள் காதல் பயிர்
செழித்து வளர்வது புரியாமல் .

ஜாதி முளைப்பதற்கு முன்பே
மானுட மனங்களில்
காதல் முளைத்ததை
புரிந்துகொள்ளாத
இந்த சமுதாயம்
இன்னும் உணரவில்லை
தங்கள் வம்சக் கொடியில்
விதைக்காக ஒதுக்கப்பட்ட
நெற்றுக்கள் ஒருநாளும்
இற்றுப்போவதில்லை என்னும்
உண்மை.

காதல் எழுத்துக்களை
அழிக்கும் ஜாதி துடைப்பங்களே
உணர்ந்துகொள்ளுங்கள்
துடைப்பங்கள் ஒருநாளும்
எழுத்தாவதில்லை !

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (3-Jan-15, 1:34 am)
பார்வை : 84

மேலே