உன்னோடு என் வாழ்க்கை

யாருமில்லா நெடும்பாதை,
கரம்பற்றி
தோள்சாய்ந்து
நீண்டதொரு பயணம்...

பசுமைநிரைந்த புல்வெளி,
நிசப்தமாய்
துயிலும்பனி! - உன்
மார்பிளொரு சிறுதூக்கம்...

ஆடையற்ற இரவு
ஆகாய நிலவு
நிலவறையில் உன்னோடு
மூன்றாம்பாலருந்த ஓரிரவு...

அர்த்தமில்லாத வார்த்தைகள்
மழலைமொழி வசனங்கள்
இலக்கணங்களை மீறி
உதட்டோடு கவிதையுண்ண ஓர்தினம்...

குட்டிக்குட்டிச் சண்டை
விம்மி விம்மி அழுகை
தாய்மடி சேய்போல் - உன்
மார்போடொரு அடைக்கலம்...

கார்கால கருமேகம்
புள்ளிசைக்கும் மாலைமரக்காடு
சிறகுதித்த மனதுனை சுமந்து
ஆகாயம்போகுமொரு தருணம்...

அயராத அடைமழைகாலம்
உடலுதரும் கடுங்குளிர்
ஒரேகுடைக்குள்
உரசிஉரசி தீமூட்டுமொரு பயணம்...

கடுமையான காட்டுவேலை,
கம்மங்கூழ் கலயம்
அம்மியிலரைச்ச கரப்பாண்
இருவரும் பசியாறுமொரு காலம்..

போதும்
போதும்,
இது போதும்
காலம் விதைத்த காதல்
சாகாது ஒருபோதும்...

உன்னோடு என் வாழ்க்கை
உருண்டோடும் காலங்கள்
உயிருக்கு அப்பாலும்
உயிரோடு நிலைத்துவிடும்...!

எழுதியவர் : பிரியாராம் (5-Jan-15, 2:01 pm)
பார்வை : 174

மேலே