18 இதுதான் இந்திய தேசமடா
இதுதான் இந்திய தேசமடா! - நீ
எண்ணி வெட்கப்பட வேண்டுமடா!
ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டடா! - அதில்
*** ஐந்நூறு கோடி ஆள்வோர்க்கடா!
போய்விடும் மீதியும் சூழ்வோர்க்கடா! - இந்தப்
*** பொய்ஜன நாயகம் யார்யார்க்கடா? ........(இதுதான்)
படையெடுத் தந்நியன் கொள்ளையிட்டான்! - இன்று
*** குடிகெடுத் திந்தியன் கொள்ளையிட்டான்!
பலிகொடுப் பதுதான் உன்விதியா? - தாய்ப்
*** பரதமே இதுதான் உன்கதியா? ........ (இதுதான்)
திட்டத்திற் கில்லாப் பணமெல்லாம்
*** திருட்டமைச் சரிடம் இருக்குமடா!
பட்டத்து வாரிசு முறைபோல - அவர்
*** பதவிகள் பிள்ளைக்கும் தொடருமடா! ....... (இதுதான்)
ஜனத்தொகை நூறு கோடியடா! - அதில்
*** தகுந்தவர் ஆறே கோடியடா!
கணக்கிற்கே மற்ற மீதியடா! - அது
*** கரைவதுதான் எந்தத் தேதியடா? ..... (இதுதான்)
எழுபது பேர்க்கு விவசாயம்!
*** இருந்தும் இல்லை ஒருலாபம்!
அழுவதைப் பார்த்தால் பரிதாபம்!
*** யார்தான் இட்டார் பிடிசாபம்? ..... (இதுதான்)
வருந்தி உழைப்பவன் விவசாயி! - வெறும்
*** வாய்ச்சவ டாளன் வியாபாரி!
வருந்தி உழைத்தவன் இளைத்துவிட்டான்! - இங்கே
*** வாய்ச்சவ டாளன் கொழுத்துவிட்டான்! ..... (இதுதான்)
எல்லையில் சண்டை வந்துவிட்டால்
*** எங்கிருந் தோவரும் ஒற்றுமைதான்!
தொல்லைகள் நீங்கி அமைதிவந்தால்
*** தொலைந்து போகும் சத்தியந்தான்! ..... (இதுதான்)
தராத நாடெல்லாம் கடன்வாங்கும்! - அதைத்
*** தகாத மனிதர்க்குக் கடன்ஈயும்!
வராத கடனெனக் கணக்கெழுதும்! - பின்
*** வரிகளை மக்களின் தலைசுமக்கும்! ..... (இதுதான்)
ஓட்டுப் போடாது மேல்மட்டம்! - அதை
*** ஒழுங்காய்ப் போடாது கீழ்மட்டம்!
ஆட்சியைப் பிடிக்கும் தம்பட்டம்! - அது
*** ஆக்கும் நாட்டைத் தரைமட்டம்! ..... (இதுதான்)
பாதி விலைக்குத் தங்கநகை! - பணம்
*** பத்து நாளில் இரட்டிப்பு! - எனச்
சேதி சொன்னால் அதுபோதும்!
*** தேசமே வாசலில் திரண்டுவிடும்! ..... (இதுதான்)
தடைசெய்யப் பட்ட மருந்தெல்லாம்
*** தாராள மாக நடைபோடும்!
குறைகூறப் பட்ட பொருளெல்லாம்
*** குவியலாய் நல்ல விலைபோகும்! ..... (இதுதான்)
பெருகுது அந்நியன் முதலீடு! - அதில்
*** பிழைக்குது இந்தியத் திருநாடு!
மறையுது நம்தொழில் அடியோடு! - இதை
*** மறக்குது மறைக்குது தாய்நாடு! ..... (இதுதான்)
வரிகட் டாத நடிகர்கள்!
*** வாடகை கட்டா அமைச்சர்கள்!
கடன்கட் டாத தொழிலதிபர்!
*** கைநீட் டுகின்ற வாக்காளர்! ..... (இதுதான்)
ஒருநாள் மழைக்குக் கெடும்சாலை!
*** ஓசிக் காசைப் படும்ஏழை!
நெரிசலில் திணறும் முச்சந்தி!
*** எரிச்சலில் அரசுச் சிப்பந்தி! ..... (இதுதான்)
போலிகள் சுதந்திர நடைபோடும்!
*** வேலிகள் தினம்தினம் பயிர்மேயும்!
காலிகள் அரசினில் விளையாடும்!
*** கூலிகள் மக்களின் தலையேறும்! ..... (இதுதான்)