எதற்காக நன்றி சொல்ல தோழி ப்ரியாராம்
தேனமுது பூச்சரமே
தெள்ளுத்தமிழ் பாச்சரமே
தித்திக்கும் தமிழ்போல் நீ
திகட்டாத நட்பளித்தாய்...
ஐந்தாண்டு ஆனதம்மா
ஐந்தவி நின் நட்போடு
ஐம்புலனும் நிறைந்தத் தமிழாய்
ஐக்கியமானாய் நெஞ்சில்...
அகிலமென்ன உரைத்தபோதும்
அணைத்துக்கொண்ட நற்றமிழே
அழகுக்கவிப்பா தொடுத்து
அகமகிழ அணிவித்தாய்...
பிறந்தநாளும் பிடிக்குதடி
பிரியமானவள் வாழ்த்துகையில்
பிழைசெய்ய மனம் மறுக்குதுடி - என்றும்
பிரிந்திடாத நின் நம்பிக்கையில்....
யாழிவளை மீட்டியது - நின்
யௌவனத் தமிழல்லவா
யானெழுதும் கவிதைகளில்
யாப்பானவள் நீயல்லவா....
வானிருந்து விழுமழையாய் - நின்
வாழ்த்துப்பா நனைக்குதடி
வற்றாத உன தன்பால் - என்
வாழ்வதுவும் செழிக்குதடி....