உண்மையெனும் ஆபத்து

தனிமை என்னும்
மெய்க்கண்ணாடியின் முன்
என்னை தரிசிக்க எத்தனித்தேன்.

எப்போதும் உளறிக்கொண்டிருக்கும்
உள்ளத்தை
'கொஞ்சம் ஊமையாய் இரு'
என சாபமிட்டது
மனசாட்சி எனும் தெய்வம்.

இரண்டாம் உயிரான
இசையையும் துண்டித்துவிட்டேன்.

எப்போதும் கல்லெறிந்து கொண்டேயிருக்கும்
அறிவின் கரங்கள்
துள்ளகூட முடியாதபடி
கட்டப்பட்டு கிடக்கின்றன.

கண் விழித்தேயிருக்கிறது.
உள்வாங்கவில்லை.

செவி திறந்தேயிருக்கிறது.
ஒலி மடுக்கவில்லை.

உயிர்த்தும் விழித்தும் இருந்தேன்.
உலகியல் தொடர்புகள்
ஒவ்வொன்றாய் கழன்றுகொண்டன.

இது உயிர்த்தீயில்
மௌனதீபமிடும்
தியான வேள்வியல்ல...

உள்ளாற்றலை உசுப்பித் தூண்டிவிடும்
குண்டலினி அல்ல..

சிலகோடி நரம்புகளை
ஒரே புள்ளியில் முடிச்சிட்டு வைக்கும்
பரயோகமும் கிடையாது.

இது தாளமில்லாமலே
தப்பாட்டம் போடும்
என் உண்மையின் திருக்கூத்து !

இதோ.. என் ஒளியில் என்னைக் காண்கிறேன்.

என் ஆழத்தில் நானே மூழ்கிக்கிடக்கிறேன்.

கலைந்துகிடக்கும் அருங்காட்சியமாய்
விரிந்திருக்கிறது ஒரு மனப்பரப்பு.

அய்யோ... நானா இது??

என்னுள்ளா இத்தனை அகங்காரம்??

நானா இவ்வளவு அசிங்கமாய் இருக்கிறேன்?

இத்தனை குப்பையானதா என் உள்ளம்?

இத்தனை கோரமானதா என் அந்தரங்கம்?!

உயிர் வெடவெடத்து
ஆன்மா வியர்த்துக்கொட்டியது.

நடுநடுங்கிப்போனேன்.

திடீரென அறிவின் கரங்கள்
அவிழ்த்துக்கொண்டன.

'இதை யாரேனும் கண்டால் என்ன செய்வது?'
எனப் பதற்றப்பட்டேன்.

தனிமை என்னும்
மெய்க்கண்ணாடியை உடைத்துவிட்டேன்.

பழைய அசிங்கங்களை எடுத்து
ஆடையாய் தரித்துக்கொண்டேன்.

மனவேர்களின்
ரகசிய முடிச்சுகளை
இன்னும் ஆழமாய் புதைத்துவைத்தேன்.

பொய்ச்சாயம் பூசிக்கொண்டு
பளபளப்பாய் காட்சிகொண்டேன்.

இப்போது
நான் நலமாய் இருக்கிறேன்.

எழுதியவர் : விவேக்.செ (6-Jan-15, 11:12 pm)
சேர்த்தது : Vivek Saamurai
பார்வை : 201

மேலே